அனைவரையும் அன்புகூரத் தூண்டும் தூய ஆவியார்
“நம்மை அன்புகூர்பவர்கள், மற்றும், நாம் அன்புகூரவேண்டும் என நினைப்பவர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் அன்புகூர, தூய ஆவியார் தூண்டுகிறார். நம் பகைவர்களை மன்னிக்கவும், அன்பில் உயிர்த்துடிப்போடும், படைப்பாற்றலோடும் இருக்கவும், அவர் நம்மை இயக்குகிறார்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
மே 23, கடந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவை மையப்படுத்தி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தவாறு அனைவரையும் அன்புகூர, தூய ஆவியார் தூண்டுகிறார் என்று, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
“அனைவருக்கும் உணவு” கூட்டம்
மேலும், வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள, ஐ.நா.வின் உணவு குறித்த உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக, “அனைவருக்கும் உணவு” என்ற தலைப்பில், திருப்பீடச் செயலகம், மே 31, வருகிற திங்களன்று, மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
“அனைவருக்கும் உணவு” என்ற தலைப்பில், இதுவரை இரண்டு மெய்நிகர் கூட்டங்களை நடத்தியுள்ள இச்செயலகம், அதன் நிறைவாக, மூன்றாவது கூட்டத்தை இத்திங்களன்று நடத்தவுள்ளது.
ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவு திட்ட அமைப்பு (WFP), வேளாண் வளர்ச்சிக்கு உலக நிதியமைப்பு (IFAD), ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, கோவிட்-19 குழு ஆகியவற்றோடு இணைந்து, திருப்பீடச் செயலகம், இந்த மெய்நிகர் கூட்டங்களை நடத்திவருகிறது.
Comments are closed.