தேவமாதாவின் வணக்கமாதம் மே 31
தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டிய பக்தி வணக்கத்தின் நிலைமையின் பேரில்!
இந்த நிலைமையின் அவசரம்.
கப்பலோட்டுபவன் தான் மேற்கொள்ளும் பிரயாசைக்கு பின்வாங்காமல் கரை சேர்ந்த பின்பு மாத்திரமே இளைப்பாறுகிறதைப் போலவும் போர் செய்பவன் கலங்காது தன் எதிரிகளை வென்று வெற்றி அடைவதைப்போலவும் விவசாயம் செய்பவன் சகல வேலைகளுக்கும் பின்வாங்காமல் அறுப்புக் காலத்தில் தேடின தானியத்தை அடைவது போலவும் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவன் தான் கொண்ட பக்தி வணக்கத்தில் மரணம் மட்டும் நிலைகொண்டால் மாத்திரமே அதனுடைய ஞானப்பிரயோசனம் எல்லாவற்றையும் அடைவானென்பது குன்றாத சத்தியமாம். அதைப்பற்றி புனித லிகோரியுஸ் என்பவர் எழுதி வைத்ததாவது: பரிசுத்த கன்னிகையே! உம்மை நேசித்து மன்றாடி இடைவிடாது உமக்கு ஊழியம் செய்பவனாக உமது இரட்சணியத்தை அடைவேன் என்பது நிச்சயம். ஆனால் சில வேளை உம்மை மறந்து உம்முடைய திரு ஊழியத்தை கைநெகிழ்வேனோ என அஞ்சுகிறேன்.
அதெப்படியெனில், எத்தனையோ பேர் தங்களைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து சுகிர்த செபங்களை செபிக்கவும் நற்கிரிகைகளைச் செய்யவும் பரமநாயகிக்குத் தோத்திரமாக சுத்தபோசனம் ஒரு சந்தி அனுசரிக்கவும் பழகிய பின் பின்வாங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு இந்தப் பரமநாயகியின் பேரில் அசட்டையுள்ளவர்களானார்கள். அவர்கள் இந்த நிர்ப்பாக்கிய அந்தஸ்திலே விழுந்த பிறகு அவர்களை தேவமாதா நேசத்தோடு காப்பாற்றி அவர்கள் கெட்டுப் போகாதவாறு கிருபை செய்வார்களென நிச்சயமாக சொல்ல முடியும். உங்களுக்கு பயங்கரமான பொல்லாப்பு வருமோ என்று பயந்து உறுதியோடு தேவமாதாவுக்குச் செய்யும் ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடக்கக்கடவீர்கள்.
அதற்கு விக்கினம்.
இந்த நிலைமைக்கு முதல் விக்கினம்:
உங்களுடைய உறுதியின்மையும் தைரியக் குறைவுமாகும். உங்கள் இருதயத்தில் ஞான சந்தோஷமும் தேவ சிநேகத்தின் இன்பமும் இருக்குமட்டும் மிகுந்த சுறுசுறுப்போடும் கவனத்தோடும் செய்ய வேண்டியதெல்லாம் செலுத்திக் கொண்டு வருவீர்கள். ஆனால் இந்த ஞான விருப்பமும் சுகிர்த சந்தோஷமும் குறையுமானால் அத்தோடு உங்களுடைய இருதய சுறுசுறுப்பும் மாறிப்போவதுமன்றி நீங்கள் தேவமாதாவைப் பற்றித் தொடங்கின நற்கிரிகைகளையும் விட்டுவிடுவீர்கள். இந்தப் பொல்லாப்பு உங்களுக்கு நேராவண்ணம் நீங்கள் தேவ தாய்க்குச் செய்வோமென்று வாக்களித்த செபங்களையாவது நற்கிரிகைகளையாவது என்ன விக்கினங்கள் நேரிட்டாலும் விடாமலும் குறைக்காமலும் இருக்கக் கடவீர்களாக.
இரண்டாம் விக்கினம்:
பசாசினுடைய கொடுமையாகும். அதெப்படியென்றால், தேவமாதாவின் மூலமாக எண்ணிக்கையில்லாத சனங்கள் நரகத்துக்குத் தப்பி மோட்சத்துக்குச் சேருகிறார்களென்றும், அநேகம் பாவிகள் மனந்திரும்பி பாவத்தை விடுகிறார்களென்றும், தேவ வரங்கள் இவ்வுலகிற்கு வெள்ளம் போல் வருகிறதென்றும் பசாசு அறிந்து அந்தப் பரம நாயகியின்பேரில் வைத்த பக்தி வணக்கத்தைச் சகல மனிதரிடத்தினின்றும் அழிக்கப் பிரயாசைப்படும். ஆகையால் அந்த பசாசின் சோதனைகளுக்கு இடங்கொடாமலும் அது சொல்லும் பொய்யான நியாயங்களைக் கேளாமலும் பின்வாங்காமலும் நடக்கக்கடவீர்கள்.
அதற்கு நாம் செய்ய வேண்டியவைகள்.
தேவமாதாவைத் தோத்தரிக்க வேண்டிய பக்தி வணக்கத்தில் நிலைகொள்ளும்படியாய் அந்தப் பரம நாயகியினுடைய மகத்துவத்தையும் மேன்மையான குணங்களையும் தியானித்து அன்னையால் கொடுக்கப்படுகிற எண்ணிறந்த உபகாரங்களையும் நினைவுபடுத்தி நமக்கு மெய்யான தாயாகிய தேவதாய் நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த நேசத்தை ஆராய்ந்து நினைக்க வேண்டியதுமல்லாமல், தம்முடைய ஊழியத்தில் நமக்கு உறுதியையும் நிலைமையையும் கொடுக்கும்படியாக அடிக்கடி மன்றாடக் கடவோம். தினந்தோறும் நன்றியறிந்த மனதோடு வாழ்த்திப் புகழ்ந்து வேண்டிக்கொள்ளாது இருப்போமானால் மதி கெட்டுப் புத்திமயங்கி அதிக ஆபத்துக்குள்ளாவோமன்றோ! ஆகையால் ஒவ்வொரு நாளும் பின்வாங்காத சுறுசுறுப்போடு அன்னைக்கு தோஸ்திரம் சொல்லவும், ஜெபமாலை தியானிக்கவும், அன்னையின் விசேஷ உதவியை இரந்து மன்றாடவும் நற்கிரிகைகளைக் கண்டு அதன்படி நடக்கவும் கடவோம்.
செபம்.
கிருபையுடைத்தான தாயாரே! இஷ்டப்பிரசாதத்தால் நிறைந்தவர்களே, என் நிலையற்றதனத்தையும் உறுதியின்மையையும் அறிந்திருக்கிறீரே. நீர் என்னைக் கைவிட்டு விடுவீராகில் உம்மை இழந்து போவேன். ஆகையால் நான் உம்மை இழந்து போகாதபடிக்கு என்னைக் கைதூக்கி காப்பாற்றியருளும். என்னை உமது அடைக்கலத்தில் வைத்து உமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களில் என்னையும் ஒருவனா(ளா)க தற்காத்தருளும். நான் தவறி விழுவேனாகில் என்னைக் கை தூக்கியருளும். நான் தவறிப்போவேனாகில் எனக்கு உமது நல்ல வழியைக் காட்டியருளும். என் ஆத்துமத்தின் சத்துருக்களோடு போர் தொடுப்பேனாகில் அவைகளை நான் வெல்லும் பொருட்டு எனக்கு உமது உதவியை நல்கியருளும். நான் பலவீனமாய் இருப்பேனாகில் என்னை உறுதிப்படுத்தும் இவ்வுலக சமுத்திரத்தில் மோசம் போகிறதாய் இருப்பேனாகில் என்னை கரை சேரப்பண்ணும். நான் நோயுற்றிருப்பேனாகில், என்னைக் குணப்படுத்தும். கடைசியில் என் மரண வேளையில் என் ஆத்துமத்தைக் கையேற்று மோட்ச பேரின்பம் இராச்சியத்தை அடையச் செய்யும் தாயே.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடியவர் சுகிர்தத்தைப் பெறாமலிருப்பவர்களுண்டோ ?
முப்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
இந்தமாதக் கடைசியில் தேவமாதாவைக் குறித்து ஏதாகிலும் சிறப்புக் கொண்டாட்டம் செய்கிறது
Comments are closed.