புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் (மே 31)
I செப்பனியா 3: 14-18
II லுக்கா 1: 39-56
மரியாவைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ்:
“கடவுளின் வாரத்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை மரியாவிடமிருந்து கற்றுக் கொள்வோம்.”
இன்று திருஅவையானது புனித கன்னி மரியா, எலிசபெத்தைச் சந்தித்ததை விழாவாகக் கொண்டாடுகின்றது.
இவ்விழா கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. 1263 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் துறவு அவையினரால் மட்டும் கொண்டாடப்பட்ட இவ்விழா, அதன்பிறகு திருஅவை முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்விழா உணர்த்தும் செய்தி:
1. விரைந்து உதவவேண்டும்
முதன்மை வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, மங்கல வார்த்தை சொன்னபோது, எலிசபெத் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆகவே மரியா தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து, எலிசபெத்து இருந்த அயின்கரிம் என்ற மலைநாட்டிற்குச் செல்கிறார். மரியா எலிசபெத்தைப் போய்ப் பார்க்கவேண்டும்… அவருக்கு உதவவேண்டும்… என்று மரியாவுக்கு யாரும் சொல்லவில்லை. ஆனாலும், மரியா விரைந்து சென்று, எலிசபெத்துக்கு உதவுகிறார். இதுதான் நாம் மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஒருவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து, அவர் கேட்பதற்கு முன்பாகவே உதவிசெய்வதுதான் உண்மையான சேவையாக இருக்கும். மரியா இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
இன்றைக்கு நம்மிடத்தில் யாராவது ஒருவர் உதவி என்று வந்தாலும், அவர்களுக்கு உதவிசெய்ய நமக்கு மனம் வருவதில்லை; ஆனால், மரியாவோ கேளாமலேயே எலிசபெத்துக்கு உதவிசெய்ய விரைகின்றார். நாமும் ஒருவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து, அவருக்கு உதவிசெய்கின்றபோது நாம் புனித கன்னி மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்; அதேவேளையில் ஆண்டவர் இயேசுவின் சகோதரர் சகோதரிகளாகவும் மாறுகின்றோம்.
ஒரு நகரில் இருந்த ஆசிரியர் குடியிருப்பில், ஜோ என்றோர் இளைஞன் இருந்தான். அவனை அந்தக் குடியிருப்பில் இருந்த அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவன் எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வான். ஒருநாள் கணவனை இழந்த ஆசிரியை ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். அவருக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருந்தான். அன்று அந்தச் சிறுவனுக்குப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு இறுதித்தேர்வு வேறு இருந்தது. தான் இப்படி நோயில் படுத்துக்கிடக்கும் வேளையில், தன்னுடைய மகனை பள்ளிக்கூடத்தில் எப்படிக் கொண்டுபோய் விடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் ஜோ அங்கு வந்தான். ஆசிரியை ஜோவிடம் தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் கூட்டிக்கொண்டு விட்டுவிடும்படி கேட்டதும், அவன் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தும், சரி என்று சம்மதித்துச் சிறுவனைத் தன்னுடைய வண்டியில் வைத்துப் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான்.
அவன் போகின்ற வழியில் சிறுவன் ஜோவிடம், “நீங்கள்தான் கடவுளா?” என்றான். அதற்கு ஜோ, “அப்படியெல்லாம் இல்லை… ஏன் கேட்கிறாய்?” என்று திரும்பக் கேட்டான். அதற்குச் சிறுவன், “இல்லை, இன்று காலையில்தான் என்னுடைய அம்மா, ‘நான் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் இந்த நேரத்தில் உன்னைக் கடவுள்தான் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவேண்டும்’ என்றார். அதுதான் கேட்டேன்” என்றான். தொடர்ந்து அந்தச் சிறுவன் ஜோவிடம், “நீங்கள் கடவுள் இல்லையென்றால் அவருடைய வேலைக்காரரா?” என்று அப்பாவியாகக் கேட்டான். அதற்கு ஜோ, “என்னைக் கடவுளிடம் பணிபுரியும் வேலைக்காரன் என்றுகூட வைத்துகொள்ளலாம்” என்றான்.
ஆம். தேவையில் இருக்கும் ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது உண்மையில் கடவுள்தான் – கடவுளின் பணியாளர்கள்தான்.
2. கடவுள் நம்மோடு:
இன்றைய விழா நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம், கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்பது ஆகும். இறைவாக்கினர் செப்பானியா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்…” என்று படிக்கின்றோம்.
ஆம், கடவுள் இம்மானுவேலனாய் நம் நடுவில் குடிகொண்டிருக்கிறார். அதன்வழியாக நமது துன்பங்கள், வேதனைகள், நோய்நொடிகள் அத்தனையும் போக்குகின்றார். இன்றைய நற்செய்தியில்கூட இயேசுவைத் திருவயிற்றில் சுமந்த புனித கன்னி மரியா, எலிசபெத்தை வாழ்த்துகின்றபோது, எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளுகிறது. அதாவது இயேசுவின் இருப்பு அங்கே மகிழ்ச்யைக் கொண்டுவருகிறது.
ஆகவே கடவுள் நம்மோடு இருந்து நம்முடைய துன்பங்கள், சோதனைகள் அத்தனையும் போக்கி, நலம் தருகிறார் என்ற நம்பிக்கையோடு நாம் வாழ்வது சாலச் சிறந்தது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் பங்குப்பணியாளராக இருந்த ஓர் அருள்பணியாளர், மோசே எப்படிச் சீனாய் மலைமீது ஏறிக் கடவுளிடம் மன்றாடினாரோ அப்படி, இவர் பங்குக் கோயிலின் கோபுர உச்சியில் அமர்ந்துகொண்டு, மக்களுக்காக இறைவனிடம் மன்றாடினார்; ஆனால் நீண்ட நாள்கள் ஆகியும் கடவுள் அவருக்குச் செவிசாய்க்கவில்லை. இதனால் கடுஞ்சினத்தோடு அவர், “கடவுளே நீர் எங்கு இருக்கிறீர்?” என்று சத்தமாகக் கத்தினார். அப்போது ஒரு குரல் கேட்டது. அது “கடவுளாகிய நான் வேறெங்கும் இல்லை, இதோ கீழே மக்களோடு மக்களாக இருக்கிறேன்” என்றது.
கடவுள் நம்மோடு குடிக்கொண்டிருக்கிறார். நாம்தான் அவரை உணராதவர்களாக இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.
எனவே, புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த இவ்விழா நாளில் நாம் புனித மரியாவைப் போன்று பிறரது தேவைகளைக் குறிப்பால் அறிந்து, அவற்றைப் பூர்த்திசெய்வோம்; ஒருவர் மற்றவரைப் வாழ்த்துவோம்; நம்மோடு இருக்கும் கடவுளின் பிரசன்னத்தை உணர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.