தூய ஆவியார் பெருவிழா (மே 23)

I திருத்தூதர் பணிகள் 2: 1-11
II கலாத்தியர் 5: 16-25
III யோவான் 15: 26-27; 16: 12-15
தூய ஆவியாராம் துனையாளர்
நிகழ்வு
ஆப்பிரிக்க மக்கள் நடுவில் அருள்பணியாளர் ஒருவர் மறைப்பணி செய்து வந்தார். இவர் தனக்கு நேரம் கிடைக்கின்றபொழுதெல்லாம் திருவிவிலியத்தை அந்த மக்கள் பேசும் மொழியில் மொழிபெயர்த்து வந்தார். இவ்வாறு இவர் திருவிவிலியத்தை மொழிபெயர்க்கும்போது இவரால் ‘துணையாளர்’ என்ற சொல்லுக்கு அவர்கள் பேசும் மொழியில் சரியான சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து இவர் தீர ஆய்வு செய்துகொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் முரடன் ஒருவன் சாதாரண பெண்மணி ஒருவரைக் கடுமையாகத் தாக்கினான் என்பதற்காக வலிமையான ஒருவர் அந்த முரடனைக் கட்டி வைத்து அடித்தார். அப்பொழுது மக்களெல்லாம், ‘செங்கா–முக்வசி’, செங்கா–முக்வசி’ (Nsenga-Mukwashi) என்று ஒரே குரலில் ஆர்ப்பரித்தார்கள். இவருக்கு ‘செங்கா முக்வசி’ என்ற சொல்லின் பொருள் புரியவில்லை. உடனே இவர் அருகில் இருந்த ஒரு பெரியவரிடம், “இச்சொல்லின் பொருள் என்ன?” என்று கேட்டதற்கு அவர், “ஒருவருக்கு அதிலும் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் துணையாக இருப்பவருக்குப் பெயர்தான் செங்கா – முக்வசி” என்றார்.
இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அருள்பணியாளர், ‘இத்தனை நாள்களும் நாம் தேடிக்கொண்டிருந்த சொல் கிடைத்துவிட்டது’ என்று, “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு ‘செங்கா – முக்வசி’யை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்” (யோவா 14: 26) என்று மொழிபெயர்த்தார்.
ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம் தூய ஆவியராம் ‘செங்கா-முக்வசியை’ அதாவது துணையாளரை அனுப்புவதாகச் சொன்னார். அவர் சொன்னதுபோன்றே அவர்களிடம் அவர் தூய ஆவியாராம் துணையாளரை அனுப்புகின்றார். அதைத்தான் இன்று தூயஆவியார் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சான்று பகரச் செய்வார்
பாஸ்காப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற ஐம்பதாம் நாளில் கொண்டாடப்படுகின்ற பெருவிழாதான் பெந்தக்கோஸ்துப் பெருவிழா. அறுவடைப் பெருவிழா என அழைக்கப்படும் இப்பெருவிழாவிற்கு எருசலேமைச் சுற்றி இருபது மைல்கள் தொலைவில் உள்ள யூதர்கள் கட்டாயம் வருவார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பதினாறு நாடுகளைச் சார்ந்த யூதர்கள் எருசலேமில் கூடியிருக்கின்றார்கள். இயேசுவின் சீடர்களும் அங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றார்கள். அப்பொழுது பிளவுற்ற நாவுகள் இயேசுவின் சீடர்கள்மீது இறங்கி வர, அவர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்குகிறார்கள். இதில் வியப்பு என்னவெனில் இதை அங்குக் கூடியிருந்த மக்கள் யாவரும் திருத்தூதர்கள் பேசியதைத் தத்தம் மொழிகளில் கேட்டார்கள் என்பதுதான்.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பெயரை நிலைநாட்டுவதற்காகக் கோபுரம் கட்டியபொழுது, ஆண்டவராகிய கடவுள் அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்கியதாக நாம் வாசிக்கின்றோம் (தொநூ 11: 7); ஆனால், பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள பேசியதைத் திரண்டிருந்த மக்கள் யாவரும் தத்தம் மொழிகளில் கேட்கின்றார்கள். இதுவே தூய ஆவியாரின் வருகைக்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு தன் இறுதி இராவுணவின்போது சீடர்களிடம், “தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று கூறியிருப்பார். இதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள் அதிலும் குறிப்பாகப் பேதுரு இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகர்வதும், அதன் மூலம் ஒரே நாளில் மூவாயிரம் பேர் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்வதும் ஆண்டவரின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.
முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்
“தூய ஆவியார் வரும்போது….. நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று சொன்ன இயேசு, தொடர்ந்து தன் சீடர்களிடம், “அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” என்கின்றார். நாம் வாழும் இவ்வுலகில் நம்மைத் தவறாக வழிநடத்துவதற்குப் பலர் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தவறான நண்பர்களின் வழிநடத்துதலால் சீரழிந்த வரலாறை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உண்மையில் நாம் பெறும் மிகப்பெரிய பேறு. தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார் எனில், அவரே உண்மையாக இருக்கின்றார் (1 யோவா 5: 6) என்பதுதான் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver 1864-1943) முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ள இவர், சொல்லக்கூடிய ஒரு முக்கியமான செய்தி, “அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் நான் எழுந்து, தூய ஆவியாரிடம் வேண்டுகின்றபொழுது, அவர் எனக்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்துவார். அப்படித்தான் நான் முன்னூறுக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தேன்” என்பதாகும்.
ஆம், தூய ஆவியாரிடம் நாம் வேண்டுகின்றபொழுது அவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உறுதி.
தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம்
தூய ஆவியார் வரும்போது இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வோம்; தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்ற நம்பிக்கைச் செய்திகளை இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழா நமக்கு எடுத்துக் கூறுகின்ற அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற அழைப்பையும் இப்பெருவிழா நமக்குத் தருகின்றது.

Comments are closed.