புனித பூமியின் அமைதிக்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு

புனித பூமியில் இடம்பெறும் ஆயுதத் தாக்குதல்களும், வன்முறை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, கலந்துரையாடல், மற்றும், அமைதியின் பாதைகள் தேர்ந்துகொள்ளப்படுமாறு, மே 21, இவ்வெள்ளியன்று மீண்டும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிங்கப்பூர், சிம்பாப்வே, பங்களாதேஷ், அல்ஜீரியா, இலங்கை, பார்படோஸ், சுவீடன், ஃபின்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் சார்பில், திருப்பீடத்திற்கு பணியாற்ற, நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசுத் தூதர்களை, மே 21, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்து, பணி நியமனச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் இந்நாள்களில் இடம்பெறும் நிகழ்வுகள், தனக்கு கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.

மே 22, இச்சனிக்கிழமை மாலையில், எருசலேமின் புனித ஸ்தேவான் ஆலயத்தில்,  புனித பூமியின் கத்தோலிக்கத் தலைவர்கள், விசுவாசிகளுடன் இணைந்து நடத்தவிருக்கும் பெந்தக்கோஸ்து திருவிழிப்பு வழிபாட்டில், புனித பூமியில் அமைதி எனும் அருள்கொடை அருளப்படுமாறு இறைவேண்டல் செய்யவுள்ளதாகவும், அந்நிகழ்வில், உலகின் அனைத்து கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்களும், விசுவாசிகளும் ஆன்மீக முறையில் ஒன்றித்து மன்றாடுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனிய மக்கள், கலந்துரையாடல், மற்றும், மன்னிப்பின் பாதைகளைக் கண்டுகொள்பவர்களாகவும், அமைதி, மற்றும் நீதியைக் கட்டியெழுப்புவதில் பொறுமையுடன் செயல்படுபவர்களாகவும், சகோதரர் மற்றும், சகோதரிகள் மத்தியில் நல்லிணக்க வாழ்வு நிலவுவதற்குரிய பொதுவான நம்பிக்கையை படிப்படியாக திறப்பவர்களாகவும் செயல்பட, அனைத்து கத்தோலிக்கரும் தூய ஆவியாரிடம் இறைவேண்டல் செய்யுமாறு, அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இடைக்காலப் போர்நிறுத்தம்

இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு இடையே, கடந்த 11 நாள்களாக, நடைபெற்றுவந்த இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் தொடர்பாக,  இடைக்கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், மே 20, இவ்வியாழனன்று வரவேற்றுள்ளார்.

எகிப்து நாட்டின் தலையிட்டால், இந்த இடைக்காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்றுவந்த கடுமையான வான்வழி மற்றும், குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 240க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மற்றும், ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினோர், பாலஸ்தீனாவின் காஸாப் பகுதியைச் சார்ந்தவர்கள்

Comments are closed.