மே 22 : நற்செய்தி வாசகம்
யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25
அக்காலத்தில்
பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?” என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்றுதான் கூறினார்.
இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
“நீ என்னைப் பின்தொடர்ந்து வா”
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 28: 16-20, 30-31
II யோவான் 21: 20-25
“நீ என்னைப் பின்தொடர்ந்து வா”
இயேசுவைப் பின்தொடர்பவர் சிலுவைச் சுமக்கவேண்டும்:
இளைஞன் ஒருவன் இயேசுவைக் காண மிகவும் விரும்பினான். அதற்காக இவன் எவ்வளவோ முயற்சி செய்தான். இப்படியிருக்கையில், ஒருநாள் இயேசு இவனுக்குக் கனவில் தோன்றி, “நீ என்னைக் காண விரும்பினால், ஒரு பெரிய சிலுவையைச் செய்து, அதை உன் தோள்மேல் தூக்கிக்கொண்டு, ஊருக்கு வெளியே இருக்கும் மலைக்கு வா” என்றார். இவனும் இயேசு சொன்னது போன்று, ஒரு பெரிய சிலுவையைச் செய்து, அதைத் தன் தோள்மேல் தூக்கிக்கொண்டு, ஊருக்கு வெளியே இருந்த மலைக்குச் சென்றான்.
போகும் வழியில் இவனால் சிலுவையின் பாராத்தைத் தாங்க முடியவில்லை. அதனால் இவன் சிலுவையின் உயரத்தையும் அகலகத்தையும் குறைந்தான். பின்னர் இவன் அந்தச் சிலுவையைத் தோள்மேல் தூக்கி வைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான். சிறிதுதூரம் சென்றிருப்பான். அவனால் சிலுவையின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இவன் முன்புபோல் சிலுவையின் உயரத்தையும் அகலத்தையும் குறைத்தான். இப்படியே இவன் சிறிதுதூரம் செல்வதும், சிலுவையின் பாரம் தாங்க முடியாமல், சிலுவையின் உயரத்தையும் அகலத்தையும் குறைப்பதுமாக இருந்தான்.
ஒருவழியாக இவன் மலை உச்சியை அடைந்து, இயேசுவைப் உற்று நோக்கியபொழுது இயேசு பக்கத்து மலையில் இருந்தார். உடனே இவன் இயேசுவிடம், “இயேசுவே நான் எப்படி அங்கு வருவது?” என்று கேட்க, இயேசு இவனிடம், “உன்னிடமுள்ள சிலுவையை இரண்டு மலைகளுக்கு நடுவில் வைத்து, அதன்மேல் நடந்து வா” என்றார். இவனும் அவ்வாறே செய்தான்; ஆனால், இவனிடமிருந்த சிலுவையால் இயேசு இருந்த மலையைத் தொடவில்லை. அப்பொழுதுதான் இவனுக்குத் தன் தவறு புரிந்தது. ‘சிலுவையின் உயரத்தையும் அகலத்தையும் குறைக்காமல் இருந்திருந்தால், இயேசுவை முகமுகமாகத் தரிசித்திருக்கலாமே!’ என்று இவன் மிகவும் வருந்தினான்.
இயேசுவைக் காண விரும்புவோர் அல்லது அவரது சீடராக இருக்க விரும்புவோர் கட்டாயம் சிலுவையைச் சுமக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய நற்செய்தி வாசகமும் எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இன்றைய நற்செய்திவாசகம், யோவானும் இயேசுவைப் பின்தொடர்கின்றார் என்பதை அறிந்த பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்” என்று கேட்கின்றபொழுதுதான் இயேசு அவரிடம், “….. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்கிறார்.
பேதுரு யோவானைக் குறித்து இயேசுவிடம் கேட்கையில் இயேசு அவரிடம், ‘அவரைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றாய்?’ என்பதுபோல் கேட்டுவிட்டு, நீ என்னைப் பின்தொடர்ந்து வா என்கிறார். இயேசுவைப் பின்தொடர்வதால் சிலுவை சுமந்தாக வேண்டும். எனவே, நாம் மற்றவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்காமல், இயேசுவைப் பின்தொடர்வதில் கவனம் செலுத்துவோம்; சிலுவையை மகிழ்வோடு சுமக்கத் தயாராவோம்.
சிந்தனைக்கு:
சிலுவையின்றிச் சிம்மாசனமில்லை.
அடுத்தவர் இயேசுவைப் பின்தொடர்கின்றாரா, இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்காமல், நாம் இயேசுவைப் பின்தொடர்வோம்.
ஆண்டவர் தன்னைப் பின்தொடர்வோருக்கு கைம்மாறு அளிக்காமல் போகார்.
இறைவாக்கு:
‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16: 24) என்பார் இயேசு. எனவே, இயேசுவைப் பின்பற்றுகின்ற நாம், நம்பிக்கை வாழ்வில் வரும் சிலுவைகளைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்தொடர்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.