மே 21 : நற்செய்தி வாசகம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19
தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின் தொடர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
“நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 25: 13-21
II யோவான் 21: 15-19
“நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிந்த இளம்பெண்:
இளம்பெண் ஒருத்தி இருந்தாள். இவளுடைய பெற்றோர் மிகவும் வசதியானவர்கள்; ஆனால், கோயிலுக்குச் செல்வதில்லை. இந்த இளம்பெண்ணுக்குத் தோழி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இறைவன்மீது ஆழமான நம்பிக்கை உண்டு. அவள் ஒவ்வொரு நாளும் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலி கண்டுவந்தாள். ஒருநாள் அவள் இவளிடம், “கோயிலுக்கு வருகிறாயா?” என்று கேட்க, இவளும் அதற்குச் சரியென்று சொல்லி, அவளோடு கோயிலுக்குச் சென்றாள். கோயிலில் நடந்த வழிபாடு, இறைவார்த்தைப் பகிர்வு எல்லாம் இவளுக்கு மிகவும் பிடித்து விட, இவள் தன் தோழியோடு ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்றாள்.
இது குறித்து இவள் தன் பெற்றோரிடம் சொன்னபொழுது அவர்கள், “இனிமேலும் நீ கோயிலுக்குப் போகாதே!” என்று எச்சரித்தார்கள். இவள் தன் பெற்றோர் சொன்னதையும் கேளாமல், கோயிலுக்குச் சென்று வந்தாள். இதையறிந்த இவளது பெற்றோர், “நாங்கள் எவ்வளவு சொல்லியும் நீ கோயிலுக்குப் போயிருக்கின்றாய்! எங்களுடைய பேச்சைக் கேளாத உனக்கு இந்த வீட்டில் இடமில்லை; வெளியே கிளம்பு” என்றார்கள். இவளும் அதற்கு மறு வார்த்தை பேசாமல், தன்னுடைய துணிமணிகளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள். இதைப்பார்த்து அதிர்ந்து போன இவளுடைய பெற்றோர், “எங்களையே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகிறாயே! அப்படியானால், நீ வழிபடும் இயேசு பெரியவராகத்தான் இருப்பார். அதனால் இனிமேல் நாங்களும் அவரை வழிபட வருகின்றோம்!” என்றார்கள்
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இளம்பெண் தன் பெற்றோரைவிட இயேசுவை மிகவும் அன்பு செய்தார். அதனால்தான் அவர் தன் பெற்றோரையும் இழக்கத் துணிந்தார். இன்றைய நற்செய்தி வாசகம், பேதுரு மற்ற எல்லாரையும்விட இயேசுவை அன்பு செய்வதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய நற்செய்தி வாசகம் உயிர்த்த ஆண்டவருக்கும் பேதுருவுக்கும் இடைய நடக்கும் உரையாடலைப் பதிவு செய்கின்றது. உயிர்த்த ஆண்டவர் இயேசு பேதுருவை இதற்கு முன்பு சந்தித்ததாக நற்செய்தியாளர் லூக்கா கூறினாலும் (லூக் 24: 34), நற்செய்தியாளர் யோவானே இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பதிவு செய்கின்றார்.
இந்த உரையாடலில் இயேசு, தன்னை மறுதலித்ததற்காக பேதுருவைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர், “நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்கின்றார். இயேசு பேதுருவிடம் கேட்கின்ற கேள்வியை மூன்றுவிதமாகப் புரிந்துகொள்ளலாம். மற்றவர்களைவிட நீ என்னை அன்பு செய்கின்றாயா என்றும், மற்றவர்களை நீ அன்பு செய்வதைவிட என்னை அன்பு செய்கின்றாயா என்றும் மற்றவைகளைவிட நீ என்னை அன்பு செய்கின்றாயா என்றும் புரிந்துகொள்ளலாம். இயேசு கேட்ட கேள்விக்குப் பேதுரு, “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே!” என்று தன் அன்பை வெளிப்படுத்துகின்றார். பேதுருவைப் போன்று நாம் மற்ற எல்லாரையும், எல்லாவற்றையும் விட இயேசுவை அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
இயேசுவை அன்பு செய்வோர் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பர் (யோவா 14: 15)
இயேசுவை அன்பு செய்வோர் அவரை முதன்மையாகத் தேடவர் (மத் 6: 33)
நாம் இயேசுவின்மீது கொண்டிருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம்?
இறைவாக்கு:
‘நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்’ (யோவா 15: 9) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.