இளையோர் உலக நாள் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள்
இவ்வாண்டு நவம்பரில் தலத்திருஅவைகளில் இடம்பெறும், இளையோர் உலக நாள் கொண்டாட்டங்களுக்கு உதவியாக, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்களை, மே 18, இச்செவ்வாயன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டது.
தலத்திருஅவைகளில், குருத்தோலை ஞாயிறன்று, பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்பட்டுவந்த இளையோர் உலக நாள் கொண்டாட்டங்கள், 2021ம் ஆண்டிலிருந்து, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று சிறப்பிக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருப்பதன் பேரில், வருகிற நவம்பர் 22ம் தேதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, உலக அளவில் தலத்திருஅவைகளில் இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது.
இளையோர் உலக நாளின் வரலாற்று பின்னணி, தலத்திருஅவைகளில் இளையோர் உலக நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இக்கொண்டாட்டம், இளையோர்-உலக நாள் கொண்டாட்டங்களின் மூலைக்கற்கள், இளையோர் ஈடுபாடு, இளையோர் உலக நாளுக்கென ஒவ்வோர் ஆண்டும் திருத்தந்தையர் வெளியிட்டுவரும் செய்தி, முடிவுரை என, ஏழு பிரிவுகளாக, இவ்வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையின் விழாவாக, இது திருஅவையின் அனுபவமாக, மறைப்பணி அனுபவமாக, இறையழைத்தலை தெளிந்துதேர்வு செய்வதற்கு நல்லதொரு வாய்ப்பாக, புனிதத்துவத்திற்கு ஓர் அழைப்பாக, திருப்பயண அனுபவமாக, மற்றும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வின் அனுபவமாக, இளையோர் உலக நாள் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
பன்னாட்டு அளவில் நடைபெறும், இளையோர் உலக நாள் நிகழ்வுகளில், அதிகமான இளையோர் பங்குபெற முடியாமல் இருப்பதால், தலத்திருஅவைகளில் இந்த நாள் சிறப்பிக்கப்படுவது, தல இளையோருக்கும், தல சமுதாயத்திற்கும், பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடுவதற்கு உதவும் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்களை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் செயலர் அருள்பணி Alexandre Awi Mello அவர்கள் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு, ஐரோப்பிய மொழிகளில், இச்செவ்வாயன்று வெளியிட்டது. இக்குழுவில், நாசரேத் நகரைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய Maria Lisa Abu Nassar, உரோம் நகரில் கோட்பாட்டு இறையியல் பயிலும் அருள்பணித்துவ மாணவரும், அங்கோலா நாட்டவருமான 24 வயது நிரம்பிய Gelson Fernando Augusto Dinis ஆகிய இரு இளையோர் உள்ளனர்.
Comments are closed.