வாழ்வை வரவேற்காத சமுதாயம், வாழ்வதையே நிறுத்திவிடும்
இத்தாலியில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டுவரும்வேளை, இளையோர் இத்தாலியில் தங்கி, குடும்பங்கள் அமைப்பதற்கு, அரசு கொள்கைகளை உருவாக்கி, ஊக்கப்படுத்துமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மே 14, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானுக்கு அருகிலுள்ள Conciliazione அரங்கில், “பிறப்பின் பொதுவான நிலைமைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வின் முக்கியத்துவம், குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துதல், குடும்பத்தைப் பாதுகாத்தல், தலைமுறைகளின் நீடித்த நிலையானதன்மை ஆகியவை பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இத்தாலியில் மக்கள்தொகை குறைவால் உருவாகியுள்ள நெருக்கடிகள் பற்றியும், கோவிட்-19 பெருந்தொற்றால் குடும்பங்களில் அதிகரித்திருக்கும் வறுமைநிலை பற்றியும் ஆய்வுசெய்யும் நோக்கத்தில், “குடும்பத்திற்காகக் கழகங்கள்” என்ற அமைப்பு இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலிய பிரதமர் Mario Draghi அவர்கள் உள்ளிட்ட, உயர்மட்ட அரசு அதிகாரிகள், மற்றும், வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.
இந்த அமைப்பின் இந்த முயற்சிக்கு, தன் பாராட்டுதல்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில், மனித வாழ்வு மற்றும், மனிதரின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று கூறியதோடு, இத்தாலியின் மக்கள்தொகை நிலவரம் குறித்தும் எடுத்துரைத்தார்.
Comments are closed.