வாசக மறையுரை (மே 15)
பாஸ்கா காலம் ஆறாம் வாரம்
சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 23-28
II யோவான் 16: 23b-28
“ஊக்கப்படுத்தி, ஏற்றுக்கொள்ளுங்கள்”
பாட்டி கொடுத்த ஊக்கத்தினாலேயே உங்கள் முன்பு நிற்கிறேன்:
இத்தாலியைச் சார்ந்த மிகப்பெரிய பாடகர் லூசியானோ பவரொட்டி (Luciano Pavarotti 1935 – 2007). ஒருமுறை செய்தியாளர் ஒருவர் இவரிடம், “உங்களுடைய இந்த வளர்ச்சிக்கு யார் காரணம்?” என்றார். “மூன்று பேரைச் சொல்வேன்” என்று பதிலளிக்கத் தொடங்கிய இவர், “முதலாவதாக, என் தந்தையைச் சொல்வேன். ஏனெனில், அவர்தான் தனது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி, எனக்குப் பாடக் கற்றுக்கொடுத்தார். இரண்டாவதாக, எனக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்த என் ஆசிரியையைச் சொல்வேன். ஏனெனில், அவர் என்னுடைய குரல் இன்னும் வளமாகக் காரணமாக இருந்தார். இவர்கள் இருவரைவிடவும் இன்னொருவரை முக்கியமான காரணமாகச் சொல்வேன்; அவர் வேறு யாருமல்லர்; என்னுடைய பாட்டி. நான் சிறுவனாக இருக்கும்பொழுது அவர்தான் என்னைத் தன் மடியில் வைத்துகொண்டு, ‘லூசியானோ! உன்னுடைய குரல் மிகவும் தனித்துவமான குரல். அதனால் பின்னாளில் நீ பெரிய ஆளாய் வருவாய்’ என்று அடிக்கடி சொல்வார். அவர் கொடுத்த ஊக்கம்தான் நான் இவ்வளவு பெரிய ஆளாக வருவதற்குக் காரணமாக இருந்தது” என்றார்.
ஆம், ஒருவர் சொல்லும் ஊக்கமளிக்கும் அல்லது நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், அதைக் கேட்போரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. முதல் வாசகத்தில், பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும், அக்காயாவில் உள்ள மக்கள் அப்பொல்லோவை ஊக்கப்படுத்தி, ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் எழுதுகின்றார்கள். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அலக்சாந்திரியாவைச் சார்ந்தவர் அப்பொல்லோ. சொல்வன்மை மிக்கவரும், மறைநூல்களில் புலமை மிக்கவரும், ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தவரான இவர், யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். இவர் தொழுகைக்கூடத்தில் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கிலாவும் இவரை அழைத்துக்கொண்டு போய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்குகின்றனர். பின்னர் அவர்கள் இவர் அக்காயாவுக்குச் செல்ல விரும்பியதை அறிந்து, அங்குள்ள மக்கள் இவரை ஊக்கப்படுத்தி ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் எழுதுகின்றார்கள்.
அப்பொல்லோவை அக்காயாவில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்தவேண்டும் என்று பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் சொல்வது, நாம் ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. நாம் ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
ஒருவர் தன்னிடமுள்ள பலவீனத்தில் அல்ல, பலத்தில் கவனம் செலுத்துவதன் மூலமே வெற்றியாளராக முடியும் – சாக்ரடீஸ்.
நீங்கள் எழுந்து ஒளி வீசும்பொழுது, உங்களை அறியாமலேயே மற்றவர்களும் எழுந்து ஒளி வீசச் செய்கிறீர்கள் – நெல்சன் மண்டேலா.
நாம் நம்மோடு வாழக்கூடிய, அதுவும் குறிப்பாக, சோர்ந்து போயிருக்கும் மக்களை நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் ஊக்கப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் (எசா 35: 3) என்பார் ஆண்டவர். எனவே, நாம் தளர்ந்து போன நெஞ்சத்தினரை உறுதிப்படுத்தி, அவர்களை மிகுந்த வல்லமையோடு ஆண்டவருக்குச் சான்று பகரச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.