நவம்பர் 25 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில்,
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”
இது ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“மன உறுதியோடு இருப்போம்”
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் நெல்சன் மண்டேலாவிடம், “மன உறுதி என்றால், எதற்கும் எப்பொழுதும் எந்தச் சூழலிலும் அஞ்சாமல் இருப்பது என்றொரு கருத்து உள்ளதே! உண்மையில் மனவுறுதி என்றால் என்ன?” என்றார்.
இதற்கு நெல்சன் மண்டேலா அவரிடம், “மன உறுதி என்பது, அச்சமற்ற நிலையல்ல, இருந்த அச்சத்தை வெற்றி கொள்ளும் நிலை, அச்சத்தை வென்று மீள்பவதே உண்மையான மனவுறுதி; அப்படிப்பட்டவனே உண்மையான வீரன்” என்று மிக அருமையானதோர் விளக்கம் அளித்தார்.
எது உண்மையான மன உறுதி என்பதற்கு நெல்சன் மண்டேலா கொடுத்த விளக்கம் மிகவும் அற்புதமானது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்பொழுது அவர் அவர்களிடம், “உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வர்கள்…..” என்கின்றார்.
பிடித்துத் துன்புறுத்துவதும், தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வதும் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி நடக்கின்ற செயல்களாகும். மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவானைப் பிடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்தார்கள்; இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் நடுவே பல்வேறு அருமடையாளங்களைச் செய்த இயேசுவையும் பிடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்தார்கள். இந்த வரிசையில் சீடர்களும் பிடித்துத் துன்புறுத்தப்படுவார்கள் என்கின்றார் இயேசு.
முன்னதாக இயேசு, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16: 24) என்று சொல்லியிருப்பார். இங்கு அவர் தன்னைப் பின்பற்றுவதால் ஒருவர் எத்தகைய சிலுவைகளை, துன்பங்களைத் தாங்கவேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்
இயேசு, தன்னுடைய சீடர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை சந்திப்பார்கள் என்று சொல்லிக்கொண்டு போகையில், “உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்” என்கின்றார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகள் நமக்கு அதிர்ச்சியளிப்பவையாக இருந்தாலும், கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில் இதுதான் நடந்தது. ஒரு குடும்பத்தில் இருந்த தந்தை, தன் மகன் அல்லது மகள் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றார் என்பதற்காக அவரைக் காட்டிக் கொடுத்தார்; வெறுத்து ஒதுக்கினார்; ஏன், கொலைகூட செய்தார். இது போன்ற துன்பங்களும் சவால்களும் தன்னுடைய சீடர்களுக்கு வரும் என்பதை இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது
இயேசு தன்னுடைய சீடர்களிடம், மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள் என்று சொன்னாலும், இவற்றிற்கு நடுவில் ஓர் ஆறுதலான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில், “நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது” என்பதாகும்.
சீடர்கள் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும், கடவுளின் பரமாரிப்பு, அவருடைய அருள் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் என்பதால், அவர்கள் எதற்கும் கலங்கிடத் தேவையில்லை; இறுதிவரை மன உறுதியோடு இருந்திட்டால் போதும் என்று மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறுகின்றார் இயேசு. இயேசுவின் இவ்வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதால்தான் புனித பவுலால், “எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி 4: 13) என்று சொல்ல முடிந்தது.
எனவே, நாம் நம்முடைய சீடத்துவ வாழ்வில் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும், இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இறுதிவரை மன உறுதியோடு இருந்து, எப்பொழுதும் அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை.
‘நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை’ (2 கொரி 4: 8) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் கொண்டிருந்த இந்த மனநிலையோடு எத்தகைய சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல், இறுதிவரை மன உறுதியோடு இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.