நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 24)
பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 21: 5-11
“ஏமாறதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்”
நிகழ்வு
தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த கிறிஸ்டோபர், அலுவலக வேலைகளை வீட்டில் இருந்த மடிக்கணினியில் செய்துகொண்டிருந்தான். அவ்வாறு அவன் வேலை செய்துகொண்டிருக்கும் திடீரென்று இசைவாக்கி (Adapter) வெடித்தது. நல்லவேளையாக அவனுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இதைப் பார்த்த அவனுடைய மனைவி இவாஞ்சலின் தன்னுடைய தோழிகள் மற்றும் நண்பரிடம், “என்னுடைய கணவர் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது மடிக்கணினி வெடித்துவிட்டது” என்றார். இந்த இவாஞ்சலின் தன் கணவர் கிறிஸ்டோபர் பணியாற்றிய அதே நிறுவனத்தில்தான் பணியாற்றி வந்தாள். அவள் தன்னோடு பணியாற்றிய தோழிகள் மற்றும் மற்றும் நண்பர்களிடம், “என்னுடைய கணவர் மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அது வெடித்துவிட்டது” என்று சொன்னதை அவர்கள் மற்ற தோழிகள் மற்றும் நண்பர்களிடம், “கிறிஸ்டோபரின் வீட்டில் பயங்கரத் தீவிபத்து” என்று பேசத் தொடங்கினார். இவ்வாறு இந்தச் செய்தி கை, கால் முளைத்துப் புதிய கோணத்தில் கிறிஸ்டோபர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் இயக்குநருக்குக் கிடைத்தது.
மறுநாள் காலையில் கிறிஸ்டோபர் அலுவலகத்திற்குச் சென்றபொழுது, அவனிடத்தில் வந்த அந்த நிறுவனத்தின் இயக்குநர், “கிறிஸ்டோபர்! நேற்று உன்னுடைய வீட்டில் உனக்குப் பிடிக்காதவர்கள் வெடிகுண்டு வீசி, உன்னையும் உன்னுடைய மனைவியையும் கொல்லப் பார்த்தார்களாமே! உண்மையா…?” என்றார். “என்ன! எனக்குப் பிடிக்காதவர்கள், என்னுடைய வீட்டின்மீது வெடிகுண்டு வீசி என்னுடைய மனைவியையும் என்னையும் கொல்லப் பார்த்தார்களா…! மடிக்கணினிக்குரிய இசைவாக்கி (Adapter) தானே வெடித்தது! அதற்குள் இவ்வளவு அக்கப்போரா?” என்று சொல்லிவிட்டுச் சத்தமாகத் சிரிக்கத் தொடங்கினான்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் ஒரு சாதாரண செய்தியை மிகைப்படுத்திக் கூறி, உண்மையில் நடந்ததற்கும், அவர்கள் கூறுவதற்கும் எந்தவோரு சம்பந்தமும் இல்லாமல் செய்துவிடுகின்றார்கள். இது சாதாரண நிலையில் மட்டுமல்லாது, ஆன்மிகத் தலத்திலும்கூட நடக்கின்றது என்பதுதான் வேதனை கலந்த உண்மை. ஆம், இன்றைக்கு இருக்கின்ற ஒருசில போலிப் போதகர்கள், உலக முடிவு, மானிட மகனுடைய இரண்டாம் வருகை ஆகியவற்றைப் பற்றி இயேசு சொல்லாததையும் அவர் சொன்னதாகச் சொல்லி, அல்லது அவர் சொன்னதை மிகைப்படுத்திச் சொல்லி மக்களை ஒருவிதமான பதற்றத்தில் வைத்திருக்கின்றர்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எருசலேம் திருக்கோயிலின் அழிவு முன்னறிவிக்கப்படல்
சாலமோன் மன்னனால் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட எருசலேம் திருக்கோயில் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. அதன்பின்னர் எஸ்ராவின் காலத்தில் பாபிலோனிய நாடுகடத்தப்படலுக்குப் பின்னர் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் மக்கப்பேயர்களின் காலத்தில் எதிரிகளால் தீட்டுப் படுத்தப்பட்டதால், மக்கப்பேயர்கள் அதைப் புதுப்பித்தார்கள். இதற்குப் பின்னர் இக்கோயில் பெரிய ஏரோதுவால் நாற்பது அன்டுகளுக்காகக் கட்டப்பட்டது அல்லது புதுபிக்கப்பட்டது. இப்படிக் கட்டப்பட்ட எருசலேம் திருக்கோயில் மிக அழகாகக் காட்சியளித்தது. இதைப் பார்த்துவிட்டுத்தான் சிலர், எருசலேம் திருக்கோயிலின் அழகை வியக்கின்றனர். அப்பொழுது இயேசு அதன் அழிவைக் குறித்துப் பேசுகின்றார்.
ஏமாறவேண்டாம்; திகிலுறவேண்டாம்
இயேசு, எருசலேம் திருக்கோயிலின் அழிவைக் குறித்துப் பேசத் தொடங்கியதும், அவருடைய சீடர்கள் அவரிடம், நீர் கூறியவை எப்பொழுது நிகழும்?” என்றொரு கேள்வியையும், “இவை நிகழப் போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்ற இரண்டாவது கேள்வியையும் கேட்கின்றார்கள். இயேசு சீடர்கள் கேட்ட இரண்டாவது கேள்வியான, “இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்பதற்குத்தான் முதலில் பதில் கூறுகின்றார்.
பலர் என் பெயரை வைத்துக்கொண்டு, ‘நானே அவர்’ என்றும், காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் சொல்வார்கள். இவைதான் அழிவு நிகழப் போகும் காலத்திற்கான அறிகுறிகள் என்கின்றார் இயேசு. இயேசு எருசலேம் திருக்கோயிலின் அழிவின் போது என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சொல்லும் இவ்வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்திப் போவதாக இருக்கின்றது .ஆம், இன்றைக்குப் பல பிழைப்பு வாதப் போதகர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவார்களிடம் நாம் ஏமாறதவாறும், அவர்களுடைய வார்த்தைகளால் திகிலுறாமலும் இருப்பதே நாம் செய்யவேண்டிய தலையாய செயல்கள்.
நாம் இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கொண்டு ஏமாறதவாறும் திகிலுறாமலும் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர்; ஆனால் உள்ளேயோ, அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்’ (மத் 7: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்போம். நாம் போலிகளாய் இல்லாமல், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.