சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் ஆண்டுக் கூட்டம்

பாலியல் முறைகேடுகளிலிருந்து சிறாரைப் பாதுகாப்பதற்கென, 2014ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள, திருப்பீட அவையின், ஆண்டு நிறையமர்வு கூட்டம், செப்டம்பர் 16, இப்புதன் முதல், செப்டம்பர் 18, இவ்வெள்ளி முடிய நடைபெற்றது.

இத்திருப்பீட அவையின் உறுப்பினர்கள் நேரிடையாகவும், ஏனையோர் இணையம் வழியாகவும் பங்குபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, திருஅவை வழங்கிவரும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டச் சிறாருக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிவரும், UISG எனப்படும், உலகளாவிய பெண் துறவு சபை தலைவர்களின் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது என்றும், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இணையதளம் வழியாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

மேலும், வத்திக்கான் பொருளாதாரச் செயலகமும், வரவுசெலவு கணக்குகளை மேற்பார்வையிடும் பொது அலுவலகமும் இணைந்து, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை, இன்னும் கூடுதலாக ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம், செப்டம்பர் 18, இவ்வெள்ளியன்று அறிவித்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொணர்ந்த, ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை நடைமுறைப்படுவதில் இவ்விரு செயலகங்களும் முழு வீச்சுடன் செயல்படத் தீர்மானித்துள்ளன என்று, வத்திக்கான் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் இயேசு சபை அருள்பணி ஹூவான் அந்தோனியோ அவர்களும், வரவுசெலவு கணக்குகளை மேற்பார்வையிடும் பொது அலுவலகத்தின் இடைக்காலத் தலைவர் Alessandro Cassinis Righini அவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

Comments are closed.