பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறு (செப்டம்பர் 20)
I எசாயா 55: 6-9
II பிலிப்பியர் 1: 20c-24, 27a
III மத்தேயு 20: 1-16a
இறைநீதி அநீதி அல்ல; சமநீதி
நிகழ்வு
கிராமப்புறத்தில் இருந்த மேனிலைப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்கூடத்தில் பள்ளி ஆண்டுவிழா அண்மையில் நடைபெறவிருந்தது. அதன் நிமித்தம் பள்ளியில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எல்லாப் போட்டிகளும் முடிந்து இறுதிப் போட்டியாக, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பல மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களோடு தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு ஒரு மாணவன் கலந்துகொண்டான்.
போட்டியை நடத்திய ஆசிரியர், போட்டியில் கலந்துகொண்ட ஏனைய மாணவர்களிடம் “1000 மீட்டரை யார் முதலில் ஓடிக் கடக்கிறாரோ அவரே வெற்றிபெற்றவர்” என்று சொல்லிவிட்டு, காலில் கட்டுப் போட்டவாறு போட்டியில் கலந்துகொண்ட மாணவரிடம், “தம்பி நீ 800 மீட்டரை வேகமாக ஓடிக் கடந்தால், நீதான் வெற்றி பெற்றவன் ஆவாய்” என்றார். இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம், “நாங்கள் அனைவரும் 1000 மீட்டர் ஓடவேண்டுமாம்… இவன் மட்டும் 800 மீட்டர் ஓடினால் போதுமாம்! இதில் என்ன நீதி இருக்கின்றது; இது அநியாயம்” என்று சீறினார்கள். அப்பொழுது போட்டியை நடத்திய ஆசிரியர் அவர்களிடம், “தம்பிகளா! இந்த மாணவன் தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு இருக்கின்றானே…! இதற்கு யார் காரணம்?” என்றார்.
அவர்கள் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்கள். ஆசிரியர் அவர்களிடம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டதும், அவர்களில் ஒரு மாணவன், “போன வாரம் நாங்களெல்லாம் ஒரு கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்பொழுது, இவன் எங்களுக்கு முன்பாகக் கால்மேல் கால் போட்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். பொருளாதாரத்திலும் சமூகத்திலும் எங்களைவிடப் பின்தங்கியவன் எப்படி எங்களுக்கு நிகராகக் கால்மேல் கால் போட்டு, தேநீர் அருந்தலாம்…? அதனால்தான் நாங்கள் எல்லாரும் சேர்ந்து அவனுடைய காலை உடைத்தோம்” என்றான்.
அந்த மாணவன் சொன்னதை அமைதிக் கேட்டுக்கொண்டிருந்த, போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அவர்களிடம், “எந்தக் காரணத்திற்காக நீங்கள் எல்லாரும் சேர்ந்து இவனுடைய காலை உடைத்தீர்களோ, அந்தக் காரணத்திற்காகத்தான் இவன் 800 மீட்டர் மட்டும் ஓடப்போகிறான். இது அநீதி கிடையாது; அவனுக்குச் சேர வேண்டிய நீதி” என்றார். இதைக் கேட்டு அந்த மாணவர்கள் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.
ஆம், வறியவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏழைகள் ஆகியோரிடத்தில் (அரசும்) ஆண்டவரும் காட்டும் கரிசனையும் இரக்கமும் அநீதி கிடையாது; அது அவர்களுக்குச் சேர வேண்டிய நீதி. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும், ‘இறைநீதி அநீதி அல்ல, அது சமநீதி” என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் எண்ணங்களும் வழிமுறைகளும் உயர்ந்தவை
மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணியிருப்போம்; ஆனால், நாம் எண்ணியதற்கு மாறாக, கடவுள் வேறொன்றைச் செய்து முடித்திருப்பார். அதுபோன்று நமக்கென்று ஒருசில வழிமுறைகளை வைத்திருப்போம். அந்த வழிமுறைகள்தான் சரியானவை; மற்றவை எல்லாம் தவறானவை என்று நினைத்திருப்போம்; ஆனால், ஆண்டவர் நாம் நினைத்ததற்கும் மாறாக வேறொன்றைச் செய்திருப்பார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆண்டவர் சொல்வதாக, “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல” என்கின்றார்.
இறைவனின் எண்ணங்களும் வழிமுறைகளும், மனிதனின் எண்ணங்களையும் வழிமுறைகளையும்விட முற்றிலும் வேறாவை. அவை மனித எண்ணங்களையும் வழிமுறைகளையும்விடப் பன்மடங்கு உயர்ந்தவை. இறைவனின் எண்ணங்களும் வழிமுறைகளும், மனித எண்ணங்களையும் வழிமுறைகளையும்விட மேலானவை; பன்மடங்கு உயர்ந்தவை என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய ‘திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை’. இவ்வுவமையின் வாயிலாக இயேசு நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இறைநீதி, அநீதி அல்ல
வழக்கமாக, மனிதர்களாகிய நாம் வேலைக்கேற்ற கூலியைக் கொடுப்போம். ஒருவர் நம்மிடம் எட்டு மணிநேரம் வேலை பார்த்தால் முழுச் சம்பளமும், அதைவிடக் குறைவான நேரம் வேலை பார்த்தால், சம்பளத்தைப் பாதியாகவோ அல்லது கொஞ்சம் பிடித்துக்கொண்டோ கொடுப்போம்; ஆனால், நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வருகின்ற உரிமையாளர், காலையில் வந்தவருக்கும், மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரு தெனாரியம் வீதம் ஒரே கூலியைக் கொடுக்கின்றார். திராட்சைத் தோட்ட உரிமையாளர் இவ்வாறு செய்ததைப் பார்த்துவிட்டு, முதலில் வேலைக்கு வந்தவர்கள், “பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே” என்று முணுமுணுக்கின்றார்கள்.
இவர்கள் இவ்வாறு முணுமுணுப்பதால், திராட்சைத் தோட்ட உரிமையாளர் இவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டாரோ என்று நமக்கு எண்ணத் தோன்றலாம். உண்மையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் முதலில் வந்தவர்களுக்கு அநீதி இழக்கவில்லை; மாறாக, அவர் அவர்களிடம் பேசியது போன்று ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கின்றார். அதனால் அது நீதிதான். அதே நேரத்தில் அவர் கடைசியில் வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கூலி கொடுக்கின்றார் எனில், அது அவர்கள்மீது அவர் கொண்ட இரக்கம், கரிசனையாகும். ஒருவேளை திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியத்திற்கும் குறைவாகக் கூலி கொடுத்தால், அந்த வேலையாளின் கூலியை நம்பி இருக்கும் குடும்பம் பட்டினியில் வாடும் அல்லவா! இதன்பொருட்டே திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவருக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கின்றார். இவ்வாறு திராட்சைத் தோட்ட உரிமையாளர் அல்லது கடவுள் வறியவர்கள், ஏழைகள் ஆகியோர்மீதான தன்னுடைய தனிப்பட்ட இரக்கத்தையும் கரிசனையையும் காட்டுகின்றார்.
ஒப்பிட்டு வாழ்வதை உதறித் தள்ளுவோம்
திராட்சைத் தோட்ட உரிமையாளர், கடைசியில் வந்தவர்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுத்ததை அல்லது அவர் அவர்கள்மீது இரக்கம் காட்டியைப் பார்த்து, முணுமுணுக்கும் முதலில் வந்த பணியார்களிடம் அவர், “நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?” என்பார். இதை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
கடவுள் ஒருவருக்கு அருள்பாலித்து, அவரை நல்ல நிலையில் வைத்திருந்தால், அதைக்கண்டு நாம் மகிழ்ச்சியுறவேண்டுமே ஒழிய, பொறாமை கொள்ளக்கூடாது. இன்றைக்குப் பலர் அடுத்தவருடைய வளர்ச்சியைக் கண்டு அல்லது ஒருவர் கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெற்றுக்கொண்டதைக் கண்டு, அவர்மீது பொறாமை கொள்கின்றார்கள்; அவரைப் பாராட்டவோ அல்லது அவரும் தானும் தனித்தன்மையானவர்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கின்றார்கள். இதனாலே பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. தாவீதின் வளர்ச்சியைக் கண்டு சவுல் மகிழ்ச்சியடையாமல், பொறாமை கொண்டான். இதனாலேயே சவுல் தாவீதைக் கொல்லத் துணிந்தான். கடைசியில் சவுல் தன் பொறாமையாலேயே வீழ்ந்தான். பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர்… வறியவராகப் போவதை அவர் அறியார்” (நீமொ 28: 22) என்கின்றது நீதிமொழிகள் நூல்.
ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற பொறாமையை, ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையை விட்டொழித்து, வறியோர், எளியோர் ஆகியோரிடம் ஆண்டவரைப் போன்று அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம்.
சிந்தனை
‘ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை’ (திபா 19:9) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரின் நீதி நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்து எளியோரிடம் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.