ஊடகத்துறை, திருஅவையின் மறைப்பணிக்கு முக்கியம்
திருஅவையின் மறைப்பணிக்கு ஊடகத்துறை முக்கியம் என்றும், கிறிஸ்தவ ஊடகவியலாளர்கள், மக்கள் மத்தியில், வருங்காலத்தின் மீது எதிர்நோக்கு மற்றும், நம்பிக்கையை விதைப்பவர்களாகப் பணியாற்றவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதழியல் குழு ஒன்றிடம், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் 18, இவ்வெள்ளியன்று, தன்னைச் சந்திக்க வந்திருந்த, “Tertio” எனப்படும், பெல்ஜியம் நாட்டின், கிறிஸ்தவ வார இதழின் ஏறத்தாழ 32 பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த இதழ் வழியாக, இவர்கள் வழங்கிவரும் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கு நன்றி கூறினார்.
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இரண்டாயிரமாம் யூபிலி ஆண்டை முன்னிட்டு, ‘மூன்றாம் மில்லென்னியம்’ என்ற திருமடலை வெளியிட்டதன் பின்புலத்தில், “Tertio” வார இதழ் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப்போக்கை அதிகம் பரப்பும் ஊடகங்கள் பெருகிவரும் இக்காலக்கட்டத்தில், இந்த இதழ் வழியாக, திருஅவை மற்றும், கிறிஸ்தவ அறிஞர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்து வருவது, தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறினார்.
வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இந்தக் குழுவினருக்கு உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ சமுதாயங்களில், எல்லாவிதமான முற்சார்பு எண்ணங்களை விலக்கி, புதிய முறையில் வாழ்வை அமைப்பதற்கு, கிறிஸ்தவ ஊடகங்கள், உதவி வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” ( மாற். 16:15) என்ற ஆண்டவரின் அழைப்பை மிகத் தெளிவான முறையில் நடைமுறைப்படுத்தும் பணியில், கிறிஸ்தவ ஊடகவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், இவர்கள், சமுதாயத் தகவல் உலகில், தகவல்களைத் திரித்துக் கூறாமல், உண்மையான தகவல்களை வழங்குவதில் சான்றுகளாக விளங்கவேண்டும் என்றும், திருத்தந்தை வலியுறுத்தினார்.
மக்கள், வருங்காலத்தை, நேர்மறைச் சிந்தனையோடு நோக்கவும், நிகழ்காலத்தை எதார்த்த நிலையோடு வாழவும் உதவுகின்றவர்களாக, கிறிஸ்தவ ஊடகவியலாளர்கள் பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இத்தகையப் பணி, இந்த உலகம் தற்போது எதிர்கொள்ளும் கொள்ளைநோய் சூழலில் பெரிதும் உதவும் என்றும் கூறினார்.
இறுதியாக, Tertio வார இதழ் வெளிவர ஒத்துழைப்பவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும், வாசகர்கள் ஆகிய அனைவருக்கும், தனது செபங்களையும், ஆசீரையும் வழங்குவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக மறவாமல் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
Comments are closed.