கடவுளின் கண்களில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்
கடவுளின் கண்களில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மனிதரின் பெருந்தீனி போக்கால் மாசடைந்துள்ள இந்த உலகின் ஒரு பகுதியை, படைத்தவராம் இறைவனின் விருப்பப்படி, நல்ல நிலையில் மாற்ற அனைவராலும் இயலும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 18, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
இம்மாதத் துவக்கத்திலிருந்து, படைப்பின் பாதுகாவலரான, அசிசி நகர் புனித பிரான்சிசின் திருவிழாவான வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை, உலகெங்கும் கிறிஸ்தவர்கள் சிறப்பித்துவரும் படைப்பின் காலத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகின்ற திருத்தந்தை, இவ்வெள்ளியன்று, படைப்பின் காலம் (#SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன், வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகளாவிய பசிக்கொடுமை
இதற்கிடையே, போர்களால் நெருக்கடியை எதிர்நோக்கும் உலகளாவிய பசிக்கொடுமை, தற்போது கோவிட்-19 கொள்ளைநோயால் மேலும் மோசமடைந்துள்ள இவ்வேளையில், நிதி உதவிகள் வழங்கப்படாவிட்டால், இந்நிலை, ஆபத்தான ஒரு கட்டத்தில் உலகினரை நிறுத்தும் என்று, உலக உணவு திட்ட அமைப்பு (WFP) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் நிலவும் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் WFP அமைப்பு, கடுமையாய் உழைத்துவருகிறது என்றும், இவ்வமைப்பின் வரலாற்றிலேயே இப்போதுதான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையுள்ள மக்களின் பசியை அகற்ற உதவி வருகின்றது என்றும், இவ்வமைப்பின் இயக்குனர் David Beasley அவர்கள், செப்டம்பர் 17, இவ்வியாழனன்று கூறினார்.
இந்த உலகில், எட்டு டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்தைக் கொண்டுள்ள இரண்டாயிரம் கோடீஸ்வரர்கள் உள்ளனர், அதேநேரம், மூன்று கோடிப் பேரை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு, 490 கோடி டாலர் நிதியுதவி தேவைப்படுகின்றது, போர்களால், மிகவும் சேதமடைந்துள்ள பத்து நாடுகளில், அவற்றின் உள்நாட்டு உற்பத்தி, 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஐ.நா.வின் உணவு திட்ட அமைப்பு கூறியுள்ளது.
கோவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு முன்னர், 13 கோடியே 50 இலட்சம் பேர், கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கினர்; தற்போது அந்த எண்ணிக்கை 27 கோடியாக உயரக்கூடும் என்ற கவலையையும், WFP அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments are closed.