தற்கொலை தடுப்பு உலக நாளுக்கு திருத்தந்தை டுவிட்டர்
ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 10ம் தேதியன்று, தற்கொலை தடுப்பு உலக நாளை, ஐ.நா.நிறுவனம் நினைவுக்கூர்வதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நம்பிக்கை வழங்கும் கிறிஸ்துவை மையப்படுத்தி, கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
“தொற்றுநோயின் உலகளாவிய பரவல் என்ற கொடுமையில், மாயையான பாதுகாப்புகள் குலைந்துள்ள நிலையில், பல நம்பிக்கைகள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ள சூழலில், கைவிடப்பட்ட உணர்வு, நம் உள்ளங்களை பாரமாக அழுத்தும் வேளையில், இயேசு நம் ஒவ்வொருவரிடமும், ‘துணிவு கொள், உன் இதயத்தை என் அன்புக்காக திறந்துவிடு’ என்று கூறுகிறார்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.
தற்கொலை என்ற பிரச்சனை உலகெங்கும் வளர்ந்துவருவதைத் தடுக்க, தற்கொலைத் தடுப்பு பன்னாட்டுக் கழகமும், உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து, 2003ம் ஆண்டு, செப்டம்பர் 10ம் தேதியன்று, தற்கொலை தடுப்பு உலக நாளை முதல்முறையாக கடைபிடித்தன.
இவ்வுலகில் ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றும், ஓராண்டில், தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, 8,00,000 முதல், 10,00,000 என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.
15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் நடுவே, தற்கொலை, மிகப் பெரிய பிரச்சனை என்றும், ஒவ்வொரு தற்கொலை மரணத்திற்கும் பின்னணியில், வேறு 40 முயற்சிகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும், தற்கொலைத் தடுப்பு பன்னாட்டுக் கழகத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.
கோவிட்-19 கொள்ளைநோயின் உலகளாவியப் பரவலும், அதனால் விதிக்கப்பட்ட முழு அடைப்பும், தற்கொலை என்ற பிரச்சனையை கூட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.