செப்டம்பர் 11 நற்செய்தி வாசகம்
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42
அக்காலத்தில்
இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு
மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு நாம் என்ன கடவுளா?
நிகழ்வு
இந்த உலகம் ஒருசிலரை ‘ஒன்றுக்கும் ஆகாதவர்கள்’ என்று தீர்ப்பிட்டபொழுது, அவர்களோ யாருமே கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் மகப்பெரிய சாதனையாளர்களாக உருவானவர்கள். இப்படி இந்த உலகம் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று தீர்ப்பிட்டு, மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவானவர்கள் பட்டியல் இதோ:
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிறுவனாக இருந்தபொழுது இவருடைய தந்தை, “என் மகன் இப்படி மிகவும் மந்தமாக இருக்கின்றானே…! இவன் வளர்ந்து பெரியவனாகும்பொழுது, இந்த நாட்டில் எப்படி வாழப்போகிறானோ! தெரியவில்லையே!” என்று மிகவும் வேதனைப்பட்டார்.
இயற்கை ஆய்வாளரான சார்லஸ் டார்வினுக்கு சிறுவயதில் படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. இதைப் பார்த்துவிட்டு இவருடைய தந்தை, “உன்னால் நம்முடைய குடும்பத்திற்கே அவமானம்” என்றார்.
மிகப்பெரிய எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டனுக்கு மூன்றாம் வகுப்புவரை வாசிக்கவே தெரியாது. இதனால் இவருக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் இவரிடம், “உன்னுடைய மூளையைத் திறந்து பார்த்தால், அங்கு மூளை இருக்காது; கொழுப்புக் கட்டிதான் இருக்கும்” என்றார்.
பெரிய கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசனுக்குச் சிறுவயதில் படிப்பே வரவில்லை. இதனால் இவருடைய ஆசிரியர் இவரை “மக்கு” என்று திட்டித் தீர்த்தார்.
ஆல்பர்ட் ஐஸ்டீனுக்குச் சிறுவயதில், கணிதத்தைத் தவிர வேறு எதுவும் வரவில்லை. ஆகவே, இவருக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் இவருடைய பெற்றோரிடம், “உங்களுடைய மகனுக்குப் படிப்பு வரவில்லை. அதனால் இவனைப் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுங்கள்” என்றார்.
இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் எல்லாரும் இந்த உலகினர் தங்களைப் பற்றிச் சொன்னவை… தீர்ப்பிட்டவை… பொய் என்று நிரூபித்துக்காட்டியர்கள். ஆம், எந்த மனிதரிடமிருந்து எப்படிப்பட்ட சாதனையாளர், மகான், அறிஞர் வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆதலால் நாம் யாரையும் தீர்ப்பிடாமல் இருப்பதே நல்லது. நற்செய்தியில் இயேசு யாரையும் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்கின்றார். இயேசு ஏன் யாரையும் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்கின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லை
நமது அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைத் தீர்ப்பிடுகின்றோம்; நாமும்கூட பிறரால் தீர்ப்பிடப்படுகின்றோம். இப்படித் தீர்ப்பிடும்பொழுதும் தீர்ப்பிடப்படும்பொழுதும் ஓர் உண்மையை மறந்துபோய்விடுகின்றோம். அது என்னவெனில், இந்த உலகத்தில் உள்ள யாரும் யாரையும் முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்பதாகும். ஆம், கடவுளைத் தவிர வேறு யாராலும் ஒருவரை முழுமையாக அறிந்துகொள்ள முடியாதபொழுது (திபா 139: 2), அடுத்தவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடுவது மிகப்பெரிய குற்றமாகும்.
தை விடவும், இந்த உலகத்தில் உள்ள யாரும் யாரையும் தீர்ப்பிடுவதற்கு எந்தவோர் அதிகாரமும் கிடையாது; கடவுள் ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. அபப்டியானால், நாம் ஒருவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடும்பொழுது, கடவுள் செய்யக்கூடிய வேலையை நாம் செய்கின்றோம் அல்லது கடவுளை நாம் இழிவுபடுத்துபவர்கள் ஆகின்றோம். ஆகவேதான், நாம் யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்கின்றார் இயேசு.
நாம் பாவிகளாக இருக்கும்பொழுது, மற்றவர்களைத் தீர்ப்பிடுவது சரியாகுமா?
நாம் ஏன் மற்றவரைத் தீர்ப்பிடக்கூடாது என்று இயேசு சொல்கின்றார் எனில், நாமே தீர்ப்புக்கு ஆளாகவும் நிலையில்தான் இருக்கின்றோம் அல்லது நாமே பாவிகளாக இருக்கின்றோம் என்பதால்தான். நம்மிடம் நாம் தவற்றை வைத்துக்கொண்டு மற்றவரைத் தீர்ப்பிடுவது எப்படி இருக்கின்றது எனில், நமது கண்ணில் பெரிய அளவில் உள்ள மரக்கட்டையை வைத்துக்கொண்டு, மற்றவர் கண்ணில் சிறிய அளவில் உள்ள துரும்பை எடுங்கள் என்று சொல்வதற்கு இணையானது என்கின்றார் இயேசு.
ஆகவே, நாம் பிறரைத் தீர்ப்பிடுவதற்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாதவர்கள் என்பதையும், கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் உண்டு என்பதையும் உணர்ந்தவர்களாய்த் தீர்ப்பிடாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘மற்றவரைத் தீர்ப்பிடுவது முள்வேலியைப் போன்றது’ என்பார் சுகி.சிவம். முள்வேலி எப்படி உள்ளே இருப்பவரை மட்டுமல்லாது, வெளியே இருப்பவரையும் காயப்படுத்துகின்றதோ, அப்படிப் பிறரைத் தீர்ப்பிடும்பொழுது தீர்ப்பிடப்படுவர் மட்டுமல்லாது, தீர்ப்பிடப்படும் நாமும் காயப்படுகின்றோம். எனவே, பிறரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்காமல், பிறரைப் பற்றி உயர்வாக நினைத்து, ஒருவர் மற்றவரிடம் அன்போடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.