2023ம் ஆண்டு உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் திட்டம்
போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில், 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் திட்டமிட, அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் தங்கள் கூட்டத்தை நடத்தினர்.
இந்த இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், லிஸ்பன் துணை ஆயர் Américo Manuel Alves Aguiar அவர்கள், செப்டம்பர் 2ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித தமாசோ திறந்தவெளி அரங்கில் நடத்திய புதன் மறைக்கல்வி உரைக்குப்பின், அவரை நேரில் சந்தித்து, அவரிடம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளைக் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டதாக இக்கூட்டத்தின் துவக்கத்தில் கூறினார்.
இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் ஏற்பாடுகளைக் குறித்து செவிமடுத்த திருத்தந்தை, இந்த முயற்சிக்கு தன் இறைவேண்டுதல்களை வழங்குவதாகவும், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில் அனைவரையும் இணைக்கும் கண்ணோட்டம் முக்கிய இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் ஆயர் Aguiar அவர்கள் கூறினார்.
2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், கோவிட் 19 கொள்ளைநோய் பரவலின் காரணமாக, தற்போதைக்கு 2023ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சிலுவை, குருத்தோலை ஞாயிறன்று, ஒப்படைக்கப்படும் நிகழ்வு, இவ்வாண்டு நடைபெறாததால், அந்நிகழ்வு, இவ்வாண்டு, நவம்பர் 22ம் தேதி சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.