செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
லூக்கா 6: 6-11
“எல்லா நாளிலும் நன்மை செய்வோம்”
நிகழ்வு
தன்னுடைய எழுத்துகளாலும் போதனையாலும் மக்கள் நடுவில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவைச் சார்ந்த பேராயர் புல்டன் ஷீன் (1875-1979). இவர் சொல்லக்கூடிய ஒரு உண்மை நிகழ்வு.
மருத்துவர் ஒருவர் லூசியானாவில் உள்ள, ஒரு பரபரப்பான சாலையில் இருந்த கட்டடமொன்றின் மாடியில், ஒரு சிறிய மருத்துவமனை வைத்து, அதன்மூலம் அங்கு வந்த ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார். பெயர்ப்பலகையில் தனது பெயரைக் குறிப்பிடாமல், ‘மருத்துவர் மாடியில்’ என்றே இவர் குறிப்பிட்டிருந்தார். இப்படித் தன் பெயர்கூட வெளியே தெரியாத வண்ணம், தன்னிடம் வந்த ஏழை எளிய மக்களுக்கு அன்போடும், சில நேரங்களில் கட்டணமில்லாமலும், எல்லா நாள்களிலும் மருத்துவச் சேவை செய்து வந்த இந்த மருத்துவர் ஒருநாள் திடீரென இறந்துபோனார்.
இவருடைய இறப்புச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அந்த நகரத்தவர், ‘மக்களுக்கு அன்போடும், குறைந்த கட்டணத்தோடும், சில நேரங்களில் கட்டணமே இல்லாமலும் மருத்துவச் சேவை செய்துவந்த இந்த மருத்துவருடைய பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில் பெரிதாக ஏதாவது செய்யவேண்டும்’ என்று முடிவெடுத்தார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து பல கருத்துகள் வந்தன. யாருடைய கருத்தும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்பட்டது. கடைசியில் ஒருவர் சொன்ன கருத்தை எல்லாரும் ஏற்றுக்கொண்டு, அதன்படி செய்தார்கள். எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இதுதான்: “தன்னுடைய பெயரே தெரியாத வண்ணம், மக்களுக்கு அன்போடு மருத்துவப் பணி செய்துவந்த அந்த மருத்துவருக்கு, நல்லமுறையில் ஒரு கல்லறையைக் கட்டி எழுப்புவோம். அதில் ‘மருத்துவர் மாடியில்’ என்ற பெயர்ப்பலகையை பொருத்தி வைப்போம்.”
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ‘மருத்துவர் மாடியில்’ என்ற பெயர்ப்பலகையோடு எல்லா நாள்களிலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்த மருத்துவரைப் போன்று, ஆண்டவர் இயேசு, ஓய்வுநாள் என்றுகூடப் பாராமல், நோயாளர்களை நலப்படுத்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வுநாளில் கைசூம்பியவரை நலப்படுத்தியதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இச்செயலுக்கு மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோர் எத்தகைய எதிர்வினையை ஆற்றினார்கள் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஓய்வுநாளில் நலமளிக்கும் இயேசு
ஓய்வுநாளின்பொழுது தொழுகைக்கூடத்தில் கற்பிக்கும் இயேசு, அங்கு வலக்கை சூம்பிய ஒருவரைக் காண்கின்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் குற்றம் காணும் நோக்குடன் இயேசு, வலக்கை சூம்பிய மனிதரை நலப்படுத்துவாரா? என்று கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தபொழுது இயேசு அந்த மனிதருக்கு நலமளிக்கின்றார்.
இங்கு மறைநூல் அறிஞரும் பரிசேயரும், குற்றம் காணும் நோக்குடன் இயேசுவைக் கூர்ந்து கவனித்ததை நமது கருத்தில் கொள்ளவேண்டும். “ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வுநாளாகிய ‘சாபத்து’. ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வுநாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்” (விப 31: 14-17) என்று சட்டம் இருந்தது. அதே நேரத்தில் ஓய்வுநாளில் ஒருவர் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்றலாம் என்ற சட்டமும் இருந்தது. இந்நிலையில்தான் இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்த வலக்கை சூம்பிய மனிதரை, அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராமல் நலமாளிக்கின்றார்.
எல்லா நாள்களிலும் நன்மை செய்வோம்
இயேசு கைசூம்பிய மனிதருக்கு நலமளிக்கும் செயல், தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருடான வாக்குவாதத்திற்குப் பிறகே நடைபெறுகின்றது. தங்களோடு இருந்த கை சூம்பிய மனிதரின் வாழ்வில் ஒரு விடிவு பிறக்க மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எதையும் செய்யவில்லை; ஆனால், இயேசு அந்த மனிதரை நலப்படுத்த முயன்றபொழுதுதான் அவருக்குத் தடையாக இருக்கின்றார்கள்.
ஒருசிலர் இப்படித்தான். இவர்கள் தாங்களாக எந்தவொரு நல்ல செயலையும் செய்வதில்லை; ஆனால், நல்லது செய்யும் மனிதர்களுக்குத் தடையாய் இருப்பார்கள். இயேசு, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தனக்குத் தடையாக இருக்கின்றார்கள்… தான் ஓய்வுநாளில் அந்தக் கைசூம்பிய மனிதரை நலப்படுத்துவதால் ஆபத்து வரும் என்பதையெல்லாம் பார்க்காமல், கை சூம்பிய மனிதர் தேவையில் இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருக்கு நலமளிக்கின்றார். எனவே, நாமும் இயேசுவைப் போன்று ஆபத்துகள், எதிர்ப்புகள் வந்தாலும், தொடர்ந்து நன்மை செய்வோம்.
சிந்தனை
‘சகோதர சகோதரிகளே நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டாம்’ (1 தெச 3:13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் எத்தகைய ஆபத்துகள், எதிர்ப்புகள் வந்தாலும், இயேசுவைப் போன்று தொடர்ந்து நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.