செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம்

குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்
இயேசு சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு
I எசேக்கியேல் 33: 7-9
II உரோமையர் 13: 8-10
III மத்தேயு 18: 15-20
அன்போடு நல்வழிப்படுத்துவோம்
நிகழ்வு
திருவிவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே (William Barclay) சொல்லக்கூடிய நிகழ்வு இது. நகர்ப்புறத்தில் வளர்ந்த மூன்று இளைஞர்கள், தங்களுடைய படிப்பு தொடர்பாக சிற்றூரில் இருந்த ஒரு வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அந்த வீட்டை ஒட்டிப் பண்ணை நிலம் ஒன்று இருந்தது. அந்த வீட்டில் கோழி, ஆடு, மாடு என்று பலவும் இருந்தன. அவற்றுக்கு நடுவில் இருப்பது நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த அந்த மூன்று இளைஞர்களுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.
ஒருநாள் அந்தப் பண்ணை நிலத்திலிருந்த இளங்கன்று ஒன்று எப்படியோ தப்பித்து பண்ணை நிலத்திலிருந்து ஊருக்குள் ஓடிவிட்டது. அதைப் பார்த்த நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களும் அதைப் பிடித்துக்கொண்டு வருவதற்கு அதன் பின்னாலேயே ஓடினார்கள். ஒருவழியாக அவர்கள் அதைப் பிடித்தும் விட்டார்கள்.
அவர்கள் அந்த இளங்கன்றைப் பிடித்ததும், அதைப் பண்ணை நிலத்திற்குக் கொண்டு வருவதற்கு பின்னாலிருந்து இருவர் தள்ளியும், முன்னாலிருந்து ஒருவர் அதன் கொம்பைப் பிடித்து இழுத்தும் பார்த்தார்கள். இளங்கன்றோ ஓர்அடிகூட நகராமல், அப்படியே முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த கன்றுக்குச் சொந்தக்காரப் பெண்மணி அதன் வாயில் தன் விரல்களைச் சப்பக் கொடுத்துக்கொண்டு, மறுகையில் இருந்த வைக்கோலை அதன்முன் காட்டிக்கொண்டே முன்னால் நடந்துசென்றார். கன்றோ அவர் பின்னாலேயே சென்று, பண்ணை நிலத்தை அடைந்தது.
நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நகர்ப்புற இளைஞர்கள் அவரிடம், “நாங்கள் மூன்று பேரும் சேர்த்து இழுக்கும்பொழுது வராத கன்று, நீங்கள் அதன் வாய்க்குள் விரலைச் சப்பக் கொடுத்து, முன்னால் நடந்துசென்றதும், உங்கள் பின்னாலேயே வந்துவிட்டதே! அது எப்படி?” என்றார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “இந்தக் கன்று உட்பட வழிதவறிப் போன யாரையும் கட்டாயப்படுத்தினால் அவர்கள் முரண்டுதான் பிடிப்பார்கள். மாறாக, அவர்களிடம் அன்போடு சொல்லிப் பார்த்தால், அவர்கள் மிக எளிதாக நல்வழிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்.
ஆம். அதிகாரத்தினாலோ, அடக்குமுறையினாலோ ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவர முடியாது; அன்பால்தான் ஒருவரை வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வருவது…? நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவருவதில் நமக்கு இருக்கின்ற கடமை என்ன…? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஒவ்வொருவரும் காவலாளியே!
இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கெதிராக ஒருவர் தவறு செய்கின்றபொழுது அல்லது ஒருவர் நெறிதவறிப் போகின்றபொழுது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, நெறிதவறிப் போன ஒருவரை நல்வழிப்படுத்துவதில் நமக்கு இருக்கின்ற சமுதாயக் கடமை என்ன என்பதைக் குறித்து இன்றைய முதல்வாசகம் எடுத்துச் சொல்வதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முதல் வாசகத்தில் ஆண்டவராக கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலிடம், “நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்கின்றார். “காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொல்லக்கூடிய சொற்கள், காயின் ஆண்டவரிடம் சொல்லக்கூடிய, “நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” (தொநூ 4: 9) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களையும், இந்தச் சமூகத்தையும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும் காவலாளிதான்.
ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம், நான் உன்னைக் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன் என்று சொல்லக் காரணம், இஸ்ரயேல் மக்கள் நெறிதவறி நடக்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிகாட்டி, எச்சரிக்கவேண்டும் என்பதால்தான். ஆண்டவர் சொன்னதுபோன்று, இறைவாக்கினர் எசேக்கியேல் இஸ்ரயேல் மக்கள் தவறுசெய்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரிக்காவிட்டால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்மேல் விழும் என்றும், அவர் அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரித்தால், அவர் தம் உயிரைக் காத்துக்கொள்வார் என்றும் கூறுகின்றார் ஆண்டவர்.
ஆம், ஓர் இறைவாக்கினர் அல்லது தலைவர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்குக் காவலாளியாக இருந்து, அவர்கள் நெறிதவறிப் போய்விடாமல் காத்துக்கொள்ளவேண்டும்.
அன்போடு நல்வழிப்படுத்த வேண்டும்
நெறிதவறிச் செல்வோரை எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொன்னார் எனில், இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடாகிய நம்மிடம், நெறிதவறிச் செல்கின்ற ஒருவரை எந்தெந்த வழிகளில் எச்சரித்து, நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்கின்றார்.
நெறிதவறிச் செல்லும் ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வருவதற்கு இயேசு மூன்று விதமான வழிமுறைகளைச் சொல்கின்றார். ஒன்று, தனியாகச் சென்று நெறிதவறியவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டுவருதல். இரண்டு, இருவர் அல்லது மூவராகச் சென்று, நெறிதவறியவரை நல்வழிக்கு கொண்டு வருதல். இணைச்சட்ட நூல், ‘எந்தவொரு குற்றமும் இருவர் அல்லது மூவரது சாட்சியத்தாலேயே உறுதி செய்யப்படும்’ என்பதை (இச 19:5) இயேசு இங்கு இணைத்து, இருவர் அல்லது மூவர் மூலம் நெறிதவறிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்கின்றார்.
நெறிதவறியவரைத் திருஅவை மூலம் எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டு வருதல் இயேசு சொல்லும் மூன்றாவது வழிமுறை. இதற்கும் ஒருவர் செவிசாய்க்காவிடில் அவர் வேற்றினத்தார் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் என்கின்றார் இயேசு. ஆம், ஒருவர் நெறிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக இன்னொருவர் எச்சரிக்கின்றபொழுது, அதைக் கேட்டு, அவர் நல்வழிக்கு வந்தால் அவருக்கு நல்லது. அதை விடுத்து, விடுத்த எச்சரிப்பையும் கேளாமல், தொடர்ந்து நெறிதவறி நடந்தால், முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போன்று, அவர் தன் குற்றத்திலேயே சாகவேண்டியததான். நெறிதவறிச் செல்வோரை மேலே சொல்லப்பட்ட மூன்றுவிதமான வழிமுறைகளைப் பின்பற்றி, ல்வழிக்குக் கொண்டுவருகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, திருச்சட்டத்தின் நிறைவான அன்போடு நல்வழிப்படுத்தினால், அது நலம்பயக்கும்.
மனமொத்து இருக்கின்ற இடத்தில் இறைவன் இருக்கின்றார்
நெறிதவறிச் செல்வோரை அன்போடு நாம் நல்வழிப்படுத்தும்பொழுது, அவரும் நல்வழிக்கு வந்தார் எனில், அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறொன்றும் கிடையாது. ஏனெனில் நெறிதவறி நடக்கின்ற ஒருவர் நல்வழிக்கு வருகின்றபொழுது அங்கு மனமொத்த நிலை ஏற்படும். அப்படி மனமொத்த நிலை ஏற்படும்பொழுது, நாம் வேண்டுவது கேட்கப்படும். மட்டுமல்லாமல், அங்கு இறைவனின் உடனிருப்பும் இருக்கும். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கின்றார்.
ஆகையால், நெறிதவறிச் செல்லும் ஒருவர் நல்வழிக்கு வரவேண்டும். அப்படி அவர் நல்வழிக்கு வரும்பொழுது, எல்லாரும் மனமொத்திருந்தால் அங்கே இறைவன் குடிகொண்டிருப்பார் என்பது உறுதி. நாம் நல்வழியில் நடந்து, மனமொத்து வாழத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஒரு நல்ல தலைவர் யாரெனில், தனக்குக் கீழுள்ள ஒருவர் தவறு செய்கின்றபொழுது, அவர் மனம்நோகாவாறு அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவரே’ என்பார் ஜான் வுடன் என்ற அறிஞர். ஆகையால், நாம் பிறர் தவறு செய்கின்றபொழுது, அவரை அன்போடு திருத்தி நல்வழிப்படுத்துவோம். நாமும் நல்வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.