செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-16
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
அன்னைத் தெரசா
அன்னைத் தெரசா (செப்டம்பர் 05)
நிகழ்வு
நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜரால் அன்னைத் தெரசாவைப் பற்றி இவ்வாறு நினைவுகூர்கின்றார்: இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. குளிர்காலத்தில் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் தனது நண்பர்களோடு தங்கியிருந்தார் பரமஹம்சர். கடுங்குளிரைத் தாக்குப் பிடிக்க நெருப்புக் கங்சின் அருகே அமர்ந்து குளிர் காய்ந்தபடியே அவர்கள் ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது பரமஹம்சர் தனது உடல் திடீரென்று சில்லிட்டுப் போனதை உணர்ந்தார். உடனே நண்பர்களிடம் விடுதியின் வாசல் கதவைத் திறந்து விடுமாறும், அங்கே ஓர் ஏழை கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் சொல்ல ஆரம்பித்தார்.
இதைக் கேட்ட நண்பர்கள் கேலி செய்தார்கள். “இங்கிருந்தபடியே நீர் எப்படி இப்படிச் சொல்கிறீர்?”. அவரோ திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் நண்பர்கள் போய் கதவைத் திறந்து பார்க்க, அங்கே, அவர் சொன்னபடியே கடுங்குளிரில் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தார் ஒரு மனிதர். பரமஹம்சரின் இந்த உடன் உணரும் உள்ளத்தை (Empathatic Feeling) நினைவுகூர்ந்த முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இவ்வாறு எழுதுகிறார் : “இது போன்ற உள்ளம்தான் இந்திய ஏழை எளியவரின் நிலை கண்டு, அன்னைத் தெரசாவை அல்பேனியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.
வாழ்க்கை வரலாறு
தற்போதைய மாசிடோனியாவில் உள்ள ஸ்காப்ஜே என்னும் நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நிக்கோலா – திராணி என்ற தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர்தான் அன்னைத் தெரசா. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஆக்னஸ் கொன்சாகா போஜாக்சியு என்பதாகும். தெரசா சிறுவயது முதலே கடவுள்மீது அதிக பக்தியும் சக மனிதர்களிடத்தில் அன்பும் கொண்டு வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரரும், சகோதரியும் இருந்தனர்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த தெரசா தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார். இவருடைய பங்கிலே செயல்பட்டு வந்த மறைக்கல்வி மாமன்றத்தின் மூலமாக மறைபரப்புப் பணிகளை பல்வேறு நாடுகளுக்குச் சென்று செய்யவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார். இவருக்குப் பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது லோரோட்டோ அருட்சகோதரிகள் சபையில் அருட்சகோதரியாகச் சேர்ந்தார். அங்கே இருந்தபோதுதான் இவர் ஆக்னஸ் என்ற தன்னுடைய திருமுழுக்குப் பெயரை குழந்தைத் தெரசாவின் மீது கொண்ட ஆழமான பக்தியினால் தெரசா என்று மாற்றிக்கொண்டார். அடுத்த ஆண்டிலேயே அவர் இந்தியாவில் உள்ள கல்கத்தாவில் பணிசெய்வதற்கு புறப்பட்டு வந்தார். அங்கே ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
1946 ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 ஆம் நாள், அவர் கல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்கிற்கு தியானம் மேற்கொள்வதற்காக தொடர்வண்டியிலே பயணம் செய்தபோது கடவுளின் அழைப்பை உணர்ந்தார். “ஏழைகளுக்குப் பணிசெய்ய வருவாயா?” என்ற குரல் அவருடைய உள்ளத்தில் கேட்டுகொண்டே இருந்தது. உடனே அவர் இச்செய்தியை கல்கத்தாவின் ஆயரிடம் சொன்னார். அதற்கு அவர், “இதெல்லாம் சாத்தியப்படாது, தயவுசெய்து நீங்கள் வழக்கமாக செய்துகொண்டிருக்கும் பணியையே தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொல்லி அவருடைய விரும்பத்திற்கு முற்றுப்புள்ளி வந்தார். ஆனால் தெரசாவோ தன்னுடைய விருப்பத்தை அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதரிடம் எடுத்துச் சொன்னார். அதற்கு அவர், “இது இவருடைய திட்டம் என்றால், அதைத் தடுப்பதற்கு நான் யார்?” என்று சொல்லி, தெரசாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்த ஆண்டிலேயே தெரசா இதுவரைக்கு தான் வாழ்ந்துவந்த சொகுசான வாழக்கையை, நான்கு சுவற்றுக்குள்ளே அடைப்பட்டுக் கிடந்த வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு ஓர் இந்தியப் பெண்மணியைப் போன்று வெள்ளை நிற ஆடையில் நீல நிற பட்டை போட்ட சேலையை அணிந்துகொண்டு கல்கத்தா நகரில் இருந்த சேரிப்பகுதிகளில் தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்கினார். தொடக்கத்தில் போதிய பொருளாதார வசதியில்லாமல், இட வசதியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட தெரசா, அதன்பிறகு இறைவனுடைய பராமரிப்பினால் தன்னுடைய பணியை செவ்வனே செய்யத் தொடங்கினார்.
தெரசாவின் பணியைப் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் அவருக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களுடைய உதவியுடன் தெரசா 1950 ஆம் ஆண்டு ‘அன்பின் பணியாளர் சபை’ (Sisters of Charity) என புதிய சபையைத் தொடங்கினார். தொடக்கத்தில் இச்சபையின் முதன்மையான பணி குடும்பங்களால் கைவிடப்பட்ட அனாதைகள், வயது முதிர்ந்தோர், சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை கவனித்துக் கொள்வதாகவே இருந்தது. அதற்காக தெரசா “Home for the Dying” என்றதோர் இல்லத்தைத் தொடங்கினார். இதன்மூலம் குடும்பத்தால் கைவிடப்பட்ட அனாதைகள், ஏழை எளியவர் நல்மரணம் அடைவதற்குப் பேருதவியாக இருந்தார். 1952 ஆம் ஆண்டு சிஷ்ய பவன் என்ற புதியதோர் இல்லத்தை ஆரம்பித்து அனாதைக் குழந்தைகள் நல்வாழ்வு பெற உழைத்தார். அதற்கு அடுத்த ஆண்டில் சத்ய நிலையம் என்ற புதியதோர் இல்லத்தைத் தொடங்கி சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர்கள் மறுவாழ்வு பெற பெரும் பங்காற்றினார்.
இப்படி அன்னைத் தெரசா பல்வேறு பணிகளைச் செய்வதைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள். ஒருசிலர் அவருடைய பெயரைக் கெடுப்பதற்காக அவர் மதமாற்றம் செய்கிறார் என்று பொய்க்குற்றம் சுமத்தினார்கள். அப்போது அன்னை அவர்களிடம், “எங்களது சிசு பவனுக்கு வரும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர்கள் யார் எனத் தெரியாதவரை, யாருக்கும் நாங்கள் திருமுழுக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் கிறிஸ்தவக் குழந்தை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் கிறிஸ்தவராகவோ, இந்து காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் இந்துவாகவோ, முஸ்லீம் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் முஸ்லீமாகவோ ஆகிறார்கள். எங்களது காளிகாட் இறப்போர் இல்லத்திலே, இறந்திருக்கும் ஒருவர் கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என்று தெரியாத பட்சத்தில், தகன மேடைக்கே அனுப்பப்படுகின்றார். மேலும் என்னைப் பொறுத்தளவில், ஒரு குழந்தையைக் கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவராக்குவது ஒரு பாவமே” என்று சொல்லி தன்மேல் விழுந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
அன்னைத் தெரசா செய்துவந்த பணியைப் பார்த்துவிட்டு நிறைய இடங்களிலிருந்து அவருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த இருபத்து மூன்றாம் அருளப்பர் அவருக்கு அமைதிக்கான பரிசினை வழங்கினார். 1972 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு நேரு விருதை வழங்கியது. 1979 ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட தொகையினையும் அவர் அனாதைக் குழந்தைகள் வாழ்வுபெறவே செலவிட்டார். 1980 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. எல்லா விருதுகளையும் அவர் ஏழைக் குழந்தைகளுக்காகவே சமர்ப்பித்தார்.
இப்படி ஓயாமல் பணிசெய்ய அன்னைத் தெரசா 1996 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு விழுந்தார். அப்போதும்கூட அவர் ஏழைக் குழந்தைகளைப் பற்றியே அதிகம் சிந்தித்தார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் மீண்டுமாக நோய்வாய்ப்பட்டு அவர் படுக்கையில் விழுந்தபோது அப்படியே தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். அன்னைத் தெரசா இறந்த செய்தியைப் கேள்விப்பட்டதும் எல்லாரும் தங்களுடைய தாய் இறந்தது போன்றே உணர்ந்தார்கள். அன்னையின் அடக்கத்திற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் நாட்டுதலைவர்கள் வந்து தங்களுடைய மரியாதையைச் செலுத்தினார்கள். இந்த மண்ணுலகில் ‘பூமியின் தேவதையாக’ வாழ்ந்துவிட்டுச் சென்ற அன்னைக்கு 2003 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாளில் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அன்னைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
எளியவரில் இறைவனைக் காணுதல்
அன்னைத் தெரசா ஏழை எளிய மக்களில் இறைவனைக் கண்டார். அதனாலேயே அவர் சொகுசாக வாழ்ந்துவந்த வாழக்கையை உதறித் தள்ளிவிட்டு கல்கத்தாவில் சேரிப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு பணிசெய்வதில் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் ‘மிகச் சிறியோராகிய சகோதர சகோதரிகளுக்குள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25:40) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தார். அதனாலேயே அவர் இன்றைக்கும் மக்களால் நினைவுகூறப்படுகின்றார்.
அன்னையின் வாழ்வில் நடைபெற்றர் ஒரு நிகழ்வு. ஒரு சமயம் செல்வச் சீமான்கள் அன்னைத் தெரசாவிற்கு பெரிய விருந்தொன்று தந்தார்கள். அந்த விருந்தில் திடிரென்று தொழுநோய் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது செல்வச் சீமாட்டி அன்னைத் தெரசாவிடம், “இந்தத் தொழுநோயாளர்களை எப்படித்தான் தொடுகிறீர்களோ?, நானெல்லாம் ஒரு மில்லியன் டாலர கொடுத்தாலும் அவர்களைத் தொடமாட்டேன்!” என்றார். அதற்கு அன்னை, “ஆம், நான்கூடத்தான் இரண்டு மில்லியன் டாலரே கொடுத்தாலும் தொழுநோயாளர்களைத் தொடமாட்டேன். ஆனால், நான் ஒவ்வொரு தொழுநோயாளியிலும் இயேசுவைக் காண்கிறேன். அதனால்தான் தொழுநோயாளர்கள் வடிவில் இருக்கும் இயேசுவுக்கு பணிசெய்கிறேன்” என்று சொன்னார்.
அன்னைத் தெரசாவைப் போன்று நாமும் அடுத்தவரில், ஏழை எளிய மக்களிடத்தில் இயேசுவை, அந்த இறைவனைக் காண்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படி நாம், எளியவருக்கு உதவி செய்யும்போது அந்த இறைவனுக்கே உதவி செய்கிறோம் என அறிந்து இறைவன் அதற்கேற்ற கைமாறு தருவார்.
இறைவன்மீது நம்பிக்கை
அன்னைத் தெரசா எந்த செயலைச் செய்தாலும் இறைவனின் துணை தன்னோடு இருக்கின்றது என்ற இறை நம்பிக்கையோடுதான் செய்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது அவரிடத்தில் வெறும் ஐந்து ரூபாய்தான் இருந்தது. ஆனாலும் அவர் இறைவன் தன்னை உடனிருந்து வழிநடத்துவார், தன்னைப் பராமரித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு தொடங்கினார். இன்றைக்கு அவருடைய சபையானது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்துவிரிந்து கிடக்கின்றது. ஆகவே, நாம் இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழும்போது இறைவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்பதைத்தான் அவருடைய வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.
Comments are closed.