நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 05)
பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 6: 1-5
குறைகூறிக் கொண்டே இருப்பவர்கள்!
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குத் திடீரென்று துறவியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் இவன் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கிருந்த துறவுமடத் தலைவரிடம், துறவியாக வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைச் சொன்னான். அவரோ இவனிடம், “இந்தத் துறவுமடத்திற்கென்று ஒரு நிபந்தனை இருக்கின்றது. ஒருவர் இந்தத் துறவுமடத்தில் துறவியாக இருக்கவேண்டுமெனில், அவர் ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது; ஏழு ஆண்டுகள் கழித்து, அவர் என்னிடம் எதுவேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் ஒரு வாக்கியம்தான் பேசவேண்டும். இந்த நிபந்தனைக்கு நீ கட்டுப்பட்டாய் எனில் துறவுமடத்தில் சேரலாம்” என்றார். ‘துறவியாகவேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டோம்… பேசாமல் இருப்பது ஒரு பெரிய செயலா…?” என்று நினைத்துகொண்டு இவன் துறவுமடத் தலைவரிடம், “நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டு நடக்கின்றேன்” என்றான்.
இதற்குப் பிறகு இவனுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறை மிகவும் சிறிதாக இருந்தது. மட்டுமல்லாமல், அந்த அறையில் படுத்துறங்கக் கட்டில் இல்லை; வெறும் பாய் மட்டுமே இருந்தது. வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட இவன், ‘படுத்துறங்க ஒரு கட்டில் கூட இல்லையே!’ என்று துறவுமடத்தில் புகுந்த முதல் நாளே புலம்பத் தொடங்கினான். என்ன செய்வது; ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருந்ததால், குளிரைத் தாங்கிக்கொண்டு இவன் ஏழு ஆண்டுகள் பாயிலேயே படுத்துறங்கி வந்தான்.
ஏழு ஆண்டுகளுக்கு கழித்து, துறவுமடத் தலைவரிடம் சென்ற இவன், “என்னுடைய அறையில் படுத்துறங்க கட்டில் இல்லை; ஒரு கட்டில் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றான். “சரி, உன்னுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்படும். இனி ஏதாவது பேசவேண்டும் என்றால், ஏழு ஆண்டுகள் கழித்துப் பேசலாம்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார் துறவுமடத் தலைவர். இவன் துறவுமடத் தலைவரிடம் கேட்டுக்கொண்டது போல், இவனுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்பட்டது; ஆனால், கட்டிலை உள்ளே கொண்டுவர முடியாதவாறு அறை மிகவும் சிறிதாக இருந்ததால், அதைக்கொண்டு வந்த பணியாளர் கட்டிலைப் பக்க வாட்டில் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அப்படிக் கொண்டுவரும்பொழுது, அவர்கள் அறையில் இருந்த காலதரில் மோத (Window), அது உடைந்துபோனது. இதனால் இவன் மழையையும் குளிரையும் தாங்கிக்கொண்டு ஏழு ஆண்டுகள் சிரமப்பட வேண்டியதாயிற்று.
ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டுமாக இவன் துறவியிடம் சென்று, “என்னுடைய அறையில் உள்ள காலதர் உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்து தந்தால் நன்றாக இருக்கும்” என்றான். “காலதரைச் சரிசெய்யப் பணியாளர்கள் வருவார்கள்; நீங்கள் போகலாம். ஆனால் நீங்கள் ‘அது சரியில்லை… இது சரியில்லை’ என்று சொல்லிக்கொண்டு மீண்டுமாக என்னிடம் வரக்கூடாது” என்று சொல்லி அனுப்பி வைத்தார் துறவுமடத் தலைவர். இதற்குப் பின்பு பணியாளர்கள் இவனுடைய அறையில் இருந்த உடைந்துபோன காலதரைச் சரிசெய்ய வந்தார்கள். அவர்கள் காலதரைச் சரிசெய்ய, அறையின் உள்ளே கிடந்த கட்டிலைத் தூக்கி வெளியே போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இவன் காலதர் சரிசெய்யப்பட்டாலும், வெளியே கட்டில் போனதால், முன்புபோல் பாயிலேயே படுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ‘கட்டில் வெளியே போய்விட்டது; அதை உள்ளே கொண்டுவரவேண்டும்” என்று இவர் துறவுமடத் தலைவரிடம் சொல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்த நிகழ்வில் வரும் இளந்துறவியைப் போன்றுதான் பலரும் ‘அது சரியில்லை, இது சரியில்லை’, ‘அடுத்தவர் சரியில்லை’ என்று குறைகூறிக்கொண்டு இருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய நற்செய்தியிலும் பரிசேயருள் சிலர் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பெரிய குறையாகச் சொல்கின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் சீடர்களைக் குறைகூறிய பரிசேயர்கள்
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்த பரிசேயர்களுள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்கின்றார்கள். கதிர்களைக் கொய்து உண்பது பிற நாள்களில் குற்றமில்லை என்றாலும் (இச 23: 25), இயேசுவின் சீடர்கள் அதை ஓய்வுநாளில் செய்தததால், பரிசேயர்கள் அதைப் பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம் தாவீதின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை (1 சாமு 21: 1-6) அவர்களுக்கு எடுத்துச் சொல்லித் தக்க பதிலளிக்கின்றார்.
உடன்படிக்கைப் பேழையில், ஏற்கெனவே இருக்கும் பன்னிரண்டு அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிதாகப் பன்னிரண்டு அப்பங்கள் ஒவ்வொரு வாரமும் வைக்கப்படும் (லேவி 24:9). இப்படிப் பழைய அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிய அப்பங்கள் வைக்கப்படும்பொழுது ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு அப்பங்களைக் குருக்கள் மட்டுமே உண்ணவேண்டும். அப்படிப்பட்ட அப்பங்களைத் தாவீது சவுலிடமிருந்து தப்பியோடும்பொழுது, தன்னோடு இருந்தவர்களோடு உண்கின்றார். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசும் இயேசு, தாவீது செய்தது குற்றமில்லை என்றால், தன் சீடர்கள் செய்ததும் குற்றமில்லைதான் என்கின்றார். அதைவிடவும் சட்டங்களை விடவும் மனிதரின் தேவை முக்கியம் என்கின்றார் .
ஆம், சட்டமா? மனிதரின் தேவையா? என்று பார்த்தால், மனிதரிடம் தேவைதான் முன்னுரிமை பெறவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு பரிசேயர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஆகையால், நாம் சட்டங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு பிறரைக் குறைகூறிக் கொண்டு திரியாமல், மனிதரின் தேவைக்குக் முதன்மையான இடம் கொடுத்து, ஒருவர் மற்றவரிடம் அன்போடும் இரக்கத்தோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது மூத்தோர் வாக்கு. ஆகையால், நாம் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டே இராமல், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.