ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30
அக்காலத்தில்
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
லூக்கா 4: 16-30
“இயேசுவின் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்ற மக்கள்”
நிகழ்வு
தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன நிகழ்வு இது. ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்கு தன் வாழ்க்கையின்மீது வெறுப்பு வந்தது. இதனால் இவன் தற்கொலை செய்து, தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவுசெய்தான். இதை முன்னிட்டு இவன் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டான். நேரம் கடந்தது; ஆனால், இரண்டு பக்கத்திலிருந்தும் இரயில் மட்டும் வரவே இல்லை. ‘என்ன இது! வாழ்க்கையே வெறுத்துத் தற்கொலை செய்யத் துணிந்திருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட நாம் நினைத்தது நிறைவேறவில்லையே” என்று இவன் தன்னையே நொந்தகொண்டான்.
இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் யாரோ ஒருவர் உரை நிகழ்த்துவது இவனுக்குக் கேட்டது. உடனே இவன், ‘சிறிது நேரம் அந்த மனிதருடைய உரையைப் போய்க் கேட்போம். அதன்பிறகு தற்கொலை செய்துகொள்வோம்’ என்று அவன் உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த திடலுக்குக் கிளம்பிப் போனான். அங்கு ஏராளமான பேர் பேச்சாளரிடம் உரையை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இவனும் அவர்களோடு சேர்ந்து உரையைக் கேட்டான்.
சிறிது நேரத்தில் பேச்சாளார் தன்னுடைய உரையை முடித்துக்கொள்ள, எல்லாரும் தங்களுடைய வீட்டிற்குக் கலைந்து சென்றார்கள். தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த இளைஞன் மட்டும் உரை நிகழ்த்திய பேச்சாளரிடம் நேராகச் சென்று, “ஐயா! உங்களிடத்தில் நான் சிறிது நேரம் பேசவேண்டும். இப்பொழுது பேசலாமா?” என்றான். பேச்சாளரும், “தாராளமாகப் பேசுங்கள்” என்றதும், இளைஞன் அவரிடம், “ஐயா! நான் என்னுடைய வாழ்க்கையை வெறுத்துத் தண்டவாளத்தில் தலை வைத்துத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தண்டவாளத்தில் படுத்திருந்தேன். அப்பொழுதுதான் நான் உங்களுடைய உரையைக் கேட்டு இங்கு வந்தேன். இங்கு வந்து உங்களுடைய உரையைக் கேட்டதும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடத்திலிருந்து அடியோடு மறைந்துவிட்டது” என்றான்.
“என்ன! என்னுடைய உரையைக் கேட்டு, உங்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடியோடு மறைந்துவிட்டதா…? என்னுடைய உரை அவ்வளவு அருமையாக இருந்ததா…?” என்று பேச்சாளர் கேட்டதும், இளைஞன் அவரிடம், “அப்படியெல்லாம் இல்லை. ‘ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேரைப் பேசியே கொல்லும் இவரே உயிரோடு இருக்கின்றபொழுது, யாருக்கும் எந்தக் கெடுதாலும் செய்யாத நான் உயிரோடு இருக்கக்கூடாதா…?’ என்று நினைத்தேன். அதனால்தான் எனக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது” என்றார். இதைக் கேட்ட பேச்சாளர் வாயடைத்து நின்றார்.
சிலரது பேச்சு நமக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்; சிலது பேச்சு நம்மை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும்; சிலரது பேச்சு நம்மைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றும். மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற பேச்சாளரின் உரையைப் போன்று; ஆனால், ஒருசிலரின் பேச்சுதான் எல்லாரையும் வியப்படைய வைக்கும். நற்செய்தியில் ஆண்டவரின் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு தொழுகைக்கூடத்தில் இருந்த எல்லாரும் வியப்படைந்ததாக வாசிக்கின்றோம். எல்லாரும் வியப்படையும் அளவுக்கு இயேசுவின் போதனையில் அப்படி என்ன இருந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அதிகாரத்தோடு பேசிய இயேசு
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்திற்கு வந்து, இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை வாசித்துவிட்டு, ”நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்கின்றார். இதைக் கேட்டுத் தொழுகைக்கூடத்தில் இருந்த எல்லாரும் வியப்புறுகின்ரர்கள். இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்புற்றதற்குக் காரணம், அது அதிகாரம் கொண்ட போதனையாக இருந்தது என்பதால்தான் (லூக் 4: 32). இயேசுவுக்கு இந்த அதிகாரம் தந்தைக் கடவுளிடமிருந்து வந்தாலும் (மத் 28: 18), அவர் பரிசேயர், மறைநூல் அறிஞரைப் போலன்றி வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததை வாழ்ந்தார். அதனாலேயே அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.
மலை உச்சியிலிருந்து தள்ளிவிட முயன்ற மக்கள்
இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்படைந்த மக்கள், நற்செய்தியில் இறுதியில், அவரை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட இழுத்துச் செல்வதாக வாசிக்கின்றோம். இதற்குக் காரணம், இயேசு இறைவாக்கினர்கள் எலியா (1 அர 17: 8-16), எலிசாவைப் போன்று (2: அர 5) பிற இனத்தார் நடுவில் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால்தான். யூதர்கள், மெசியா என்பவர் பிற இனத்தாரை ஒடுக்கி, இஸ்ரயேல் மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்குவார் என்று நினைத்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் இயேசு இப்படிச் சொன்னதால், மக்கள் அவரைக் கொல்வதற்கு முயல்கின்றார்கள்.
மக்கள் தங்களுக்குப் பிடித்தமானதை யாராவது பேசினால் ஏற்றுக்கொள்வார்கள். அதே நேரத்தை பேசுபவர் அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்கட்டத் தொடங்கினால், வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். இயேசுவுக்கும் அப்படித்தான் நடந்தது. அவர் எசாயாவின் சுருளேட்டை வாசித்தபொழுது, வியந்துகேட்ட மக்கள், அவர் தான் பிற இனத்து மக்கள் நடுவில் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதும், வெறுக்கத் தொடங்குக்கின்றார்கள். மக்கள் தன்னை வெறுக்கின்றார்கள் என்பதற்காக இயேசு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொல்லாமல் இருக்கவில்லை. அவர் கடவுளின் வார்த்தையைத் தொடர்ந்து எடுத்துச் சொன்னார்.
நாமும் இயேசுவைப் போன்று எதிர்ப்புகளுக்கு அஞ்சிக் கடவுளை வார்த்தையை எடுத்துரைப்பதை நிறுத்தாமல், அதைத் தொடர்ந்து எடுத்துரைத்து, கடவுளுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை
‘நல்லதொரு வாழ்வு, நல்லதொரு மறையுரை’ என்கிறது ஸ்பானியப் பழமொழி. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வையே நல்லதொரு போதனையாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.