வேளாங்கண்ணி மாதா செபம்.
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துகளைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே!
ஆமென்.
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்
“வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.” என்று பவுலடியார் கூறுகிறார். உலகம் உயர்ந்தவை என நினைக்கும் பணம், பதவி, புகழ் ஆகியவற்றிற்கு நாம் முக்கியத்துவம் அளிக்காமல் ஆண்டவர் தேர்ந்தெடுத்த எளிமை, தாழ்ச்சி, பிறர் நலம் ஆகியவற்றை நாட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 33:19-ல் “அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.” என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
இன்றைய இக்கட்டான காலத்தில் நோய்த் தொற்று கொண்டவர்களை குணமாக்கிடவும், வருமானம் இழப்பை எதிர் கொள்ளும் எண்ணற்றக் குடும்பங்களை இறைவன் காத்திடவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூறும் இந்நாளில் அவரைப் போல நீதிக்கும், நேர்மைக்கும் எதிரான எந்தவிதமான சமரசத்தையும் விரும்பாத நல்ல மனத்துணிவினை இறைவன் அளித்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கொரோனா நோய்த் தொற்றின் நிமித்தம் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் பரிபூரண சுகம் பெற்றிட நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இன்றைய நாள்களில் வருமானம் இல்லாமல் ஏழ்மையில் தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இறைவன் நல்லதொரு வழியைக் காட்டிட ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.