ஆகஸ்ட் 29 : நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
அக்காலத்தில்
ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 29)
இயேசுவின் முன்னோடி, இறுதி இறைவாக்கினர், ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை இன்றைய நாளிலே திருச்சபையானது நினைவுகூருகிறது.
இவருடைய நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே இவ்விழா நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக நாம் ஒவ்வொருவருமே நேர்மையோடும், உண்மைக்குச் சான்று பகரக்கூடியவர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலே திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் கொண்டவராக விளங்கினார் என்று படிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் நேர்மையோடும், துணிவோடும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கக்கூடியவராக இருந்தார் (மாற் 6:20). மேலும் ஒரு இறைவாக்கினர் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்.
இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து, “நான் உனக்குச் சொல்லக்கூடியவற்றை அம்மக்களிடம் போய் சொல்” என்ற இறைவார்த்தையை திருமுழுக்கு யோவான் தனது வாழ்வாக்கினார். எப்படி என்றால் அவர், தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்துகொண்டிருந்த ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்காக தன்னுடைய உயிரையும் தருகிறார். இப்படியாக நேர்மையும், தூய்மையும் கொண்ட திருமுழுக்கு யோவான் இறைவாக்குப் பணிக்காக எதையும் இழக்கக்கூடியவராக இருக்கிறார்.
பலவேளைகளில் நேர்மையோடு நாம் வாழ்கின்றபோது அதற்காக தரக்கூடிய விலை அதிகம். சில மாதங்களுக்கு முன்பாக (அக்டோபர் 12, 2014) நேர்மையோடு செயல்பட்டு, 260 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை மீ்ட்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்று செய்தித்தாளிலே படித்திருப்போம். அரசு நிர்வாகத்தில் நேர்மையை தங்கள் பணியில் கடைப்பிடித்து வந்தால், அவர்களால் ஒரே இடத்தில் பணி செய்ய முடியாது என்பதை சகாயம், அன்சுல் மிஸ்ரா, இறையன்பு போன்ற மாவட்ட ஆட்சியர்களின் மாற்றத்திலிருந்து நாம் தெரிந்து கொண்டதுதான். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியர் மட்டுமில்லை, நேர்மையாகச் செயல்படும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்பதற்கு உதாரணமாக சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் இருக்கிறார்.
மத் 5:10 ல் படிக்கின்றோம், “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று. நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று நேரியவழியில் நடப்போம். இறைவனின் அரசை உரித்தாக்கிகொள்வோம்..
இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டும் இரண்டாவது பாடம். கடவுளின் உடனிருப்பு மற்றும் பராமரிப்புதான். முதல் வாசகத்திலே கடவுள், “உன்னை விடுக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார். இறைவனின் வழியில் நடக்கின்றபோது, அவருக்கு பணிசெய்கின்றபோது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை.
ஓர் ஊரிலே விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்குப் பயந்து வாழக்கூடியவர். ஒருமுறை அவருக்கு சிறிய வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். இதனால் அவர் மிகவும் மன வருத்தமடைந்தார். “எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலை?” என்று கண்கலங்கினார். ஆனால் மருத்துவர்களோ, “அறுவைச் சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்லி மருத்துவமனையிலே அனுமதித்தனர்.
அன்று இரவு அவர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அதிலே அவர் ஓர் ஏரிக்கரையிலே இருந்த படகை ஒன்றை எடுத்துக்கொண்டு, உள்ளே பயணம் செய்தார். அந்தப் படகானது தண்ணீரில் மிகவும் தத்தளித்தது. அப்போது அவருக்கு எதிரே ஒரு வானவில் தோன்றி, அதிலிருந்து ஒரு குரல், “மகனே நீ எதைக்குறித்தும் கவலைப்படாதே!, நீ தனி ஆள் கிடையாது. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்லி மறைந்தது. உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்.
அடுத்த நாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, ஒரு சிறுமி கையிலே காகிதத்தை வைத்திருந்தாள். அந்தக் காகிதத்தில் ஏரிக்கரை, அதிலே ஒரு படகு, அதற்கு நேர் எதிரே வானவில் என்றிருந்தது. அப்போதுதான் அவர் முந்தின நாள் தான் கண்ட கனவு அது என்பதை அறிந்து, கடவுள் தன்னைக் குணப்படுத்த இருக்கிறார் என்பதைக் கனவின் வழியாகச் சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டார்.
இறைவழியில் நடப்போருக்கு இறைவனின் துணை எப்போதும் உண்டு என்பத்தை தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. எனவே தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூறுகிற வேளையில் அவரைப் போன்று நேரிய வழியில் நடந்து உண்மைக்கு – இயேசுவுக்கு – சான்று பகர்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.