ஆகஸ்ட் 26 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32
அக்காலத்தில்
இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மத்தேயு 23: 27-32
“நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்”
நிகழ்வு
இலண்டன் வானூர்தி நிலையத்தில் இளைஞன் ஒருவன் இரண்டு பெட்டிகளை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த கோடீஸ்வரர் ஒருவர் அந்த இளைஞனிடம், “தம்பி! இப்பொழுது நேரம் என்ன?” என்றார். உடனே அந்த இளைஞன் தன்னிடம் இருந்த இரண்டு பெட்டிகளையும் கீழே இறக்கிவைத்து விட்டு, இடக்கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தைக் காட்டி, “நேரத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான். கோடீஸ்வரர் அந்தக் கைக்கடிகாரத்திலிருந்து நேரத்தைத் தெரிந்துகொள்வதற்காக அதை உற்றுப் பார்த்தார். அதைப் பார்த்த மறுநொடி அவர் வியப்பில் ஆழ்ந்தார்.
அப்பொழுது அந்த இளைஞன் கோடீஸ்வரரிடம், “இந்தக் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கின்றதா…? இதில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது பதினொரு நாடுகளின் நேரத்தைத் துல்லியமாக் காட்டும்; இதன் மூலம் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்; மின்னஞ்சல் அனுப்பலாம்; புகைப்படம்கூட எடுக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கோடீஸ்வரரைப் புகைப்படம் எடுத்தான்.
இவை எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த கோடீஸ்வரர், இளைஞன் தன் கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தைத் தனக்குச் சொந்தமாக்க நினைத்தார். அதனால் அவர் அந்த இளைஞனிடம், “இந்தக் கைக்கடிகாரம் எனக்கு வேண்டும். இதை நீ எவ்வளவுக்குத் தருவாய்?” என்று அவனிடம் கேட்டுப் பேரம் பேசத் தொடங்கினார். இளைஞனோ, கோடீஸ்வரர் எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கும் நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம், “ஒரு இலட்சம் டாலர்” என்றான். கோடீஸ்வரர் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், ஒரு இலட்சம் டாலர் உடனே எடுத்துக் கொடுத்து, அந்தக் கைக்கடிகாரத்தை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்தார்.
“ஐயா! ஒரு வினாடி இங்கு வாங்களேன்” என்று இளைஞன், வேகமாகச் சென்ற கோடீஸ்வரரை அழைத்தான். அவர் திரும்பிப் பார்த்து, “என்ன செய்தி?” என்று கேட்க, இளைஞன் அவரிடம், “வேறொன்றுமில்லை. கைக்கடிகாரத்தை வாங்கிக்கொண்டு, அதற்கான மின்கலத்தை (Battery) வாங்காமல் போகிறீர்களே! இந்த இரண்டு பெட்டிகளிலும் அந்தக் கைக்கடிகாரத்திற்கான மின்கலம் இருக்கின்றது; எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். இதைக் கேட்டு அந்தக் கோடீஸ்வரர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆம், சில பொருள்களும் சரி, மனிதர்களும் வெளிப்பார்வைக்கு அழகாக, காட்சிக்கு இனியவர்களாக இருப்பார்கள்; ஆனால், உட்புறத்திலோ நாம் கற்பனை செய்து பார்த்திராத அளவுக்கு அவ்வளவு கொடுமையானவர்களாக இருப்பார்கள். இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் மாட்டியிருந்த கைக்கடிகாரம் பார்வைக்கு இனிதாக இருந்தது; ஆனால், மின்கலமோ கோடீஸ்வரர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு மிகவும் பெரிதாக இருந்தது. அது போன்றுதான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மக்கள் பார்வைக்கு நல்லவர்களாக இருந்தார்கள். உட்புறத்திலோ எல்லாவிதமான அழுக்கையும் சுமந்துகொண்டு திரிந்தவர்களாக இருந்தார்கள். இதற்காகத்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருந்த மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்
யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய பாஸ்கா விழாவிற்குப் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள் எருசலேம் நகருக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் வழியில் இருக்கின்ற கல்லறைகள், காண்போரை முகம் சுழிக்க வைக்கக்கூடாது என்பதற்காக அவற்றை வெள்ளையடித்து வைத்தார்கள். ஆண்டவர் இயேசு இந்த வழக்கத்தை எடுத்துக்கொண்டு, அதனை மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களும் எதிரான தனது கண்டனக் குரலாகப் பதிவு செய்கின்றார். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் எப்படி வெளிப்பார்வைக்கு அழகாகவும், உள்புறத்தில் அழுக்கையும் கொண்டிருந்தனவோ, அப்படி மதக் காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவும் உட்புறத்தில் அழுக்கையும் சுமந்து கொண்டு அலைந்தார்கள். அதனாலேயே இயேசு அவர்களைச் சாடுகின்றார்.
உட்புறத்தைத் தூய்மையாக்கினால், வெளிப்புறமும் தூய்மையாகும்
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முந்திய பகுதியில் (மத் 23: 26) ஆண்டவர் இயேசு, “…உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்” என்பார் இயேசு, இவ்வார்த்தைகள் மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் எதிராகச் சொன்ன வார்த்தைகளாக இருந்தாலும், நமக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. பல நேரங்களில் நாம் வெளிப்புறத்தைத் தூய்மை வைத்து கொள்ளக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உட்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கொடுப்பதில்லை. எப்பொழுது நாம் உட்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கின்றோமோ அப்பொழுது நமது வெளிப்புறமும் தூய்மையாகும் என்பது உறுதி.
நாம் நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, நமது உட்புறமான இதயத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீங்கள் கடவுளுடைய கோயிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ (1 கொரி 3: 19) என்பார் புனித பவுல். ஆகையால், கடவுளின் கோயிலாக இருக்கும் நாம், நம்முடைய உள்ளத்தை அவர் தங்கும் இல்லிடமாக மாற்றி, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.