ஆகஸ்ட் 9 : நற்செய்தி வாசகம்

நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
“துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்”
பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு
I அரசர்கள் 19: 9a, 11-13a
II உரோமையர் 9: 1-5
III மத்தேயு 14: 22-33
“துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்”
நிகழ்வு
அந்த ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருந்தது. அந்தத் துறவுமடத்தில் ஒரு துறவியும், ஐம்பதுக்கும் மேற்பட்ட துறவிகளும் இருந்தார்கள். ஒருநாள் துறவுமடம் இருந்த பகுதியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாயின; துறவுமடத்தில் இருந்த கோயிலும்கூட இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் சீடர்கள் யாவரும் அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள்.
அப்பொழுது அவர்கள்முன் வந்த துறவி, “இதற்கெல்லாமா அஞ்சி நடுங்குவது…? உண்மையான துறவி எதற்கும் அஞ்சுவதில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசினார்: “நீங்களெல்லாம் அஞ்சி நடுஞ்சிக் கொண்டிருந்தபொழுது, நானோ கொஞ்சம்கூட அஞ்சாமல், சமயலறைக்குச் சென்று, நீர்க்குவளையை எடுத்து, அதிலிருந்த நீர் முழுவதையும் குடித்து முடித்தேன். அப்படி நான் குடிக்கும்பொழுது, என்னுடைய கைகள் கொஞ்சம்கூட நடுங்கவில்லை. இதை யாராவது கவனித்திருந்தால் எனக்குக் கொஞ்சம்கூட அச்சமில்லை என்பது புரிந்திருக்கும்.”
துறவி இப்படிச் சொல்லி முடித்ததும், அவருக்கு முன்பு நின்றுகொண்டிருந்த சீடன் ஒருவன், தன் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துறவி அந்தச் சீடனிடம், “சீடனே! இப்பொழுது நீ எதற்காகச் சிரித்தாய் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். அதற்குச் சீடன், “குருவே! நீங்கள் சமயலறைக்குச் சென்று உங்களுடைய கையில் எடுத்தது, நீர்க்குவளை அல்ல; சாம்பார் சட்டி. உண்மையில் நீங்கள் குடித்தது நீர் அல்ல; சாம்பார். அச்சத்தில் எதையெதையோ செய்துவிட்டு, அஞ்சவே இல்லை என்று சொல்கின்றீர்களே!” என்றான். இதைச் சுற்றியிருந்து கேட்டுக்கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டனர்.
ஆம், இந்த நிகழ்வில் துறவியையும், அவருடைய சீடர்களையும் போன்றுதான் நாம் ஏதோ ஒன்றுக்கு அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், சீடர்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருளென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மலைமீது ஏறிய இயேசு
கடந்த வார நற்செய்தி வாசகத்தில் (மத் 14: 13-21) இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருப்பார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து, இயேசு மக்கள்கூட்டத்தையும், பின் தன் சீடர்களையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு மலைமேல் ஏறுகின்றார். இயேசு ஏன் மக்கள் கூட்டத்தையும், தன் சீடர்களையும் அனுப்பிவிட்டு, மலைமேல் ஏறினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், ஈசபேல் அரசி இறைவாக்கினர் எலியாவைக் கொன்றுபோட்டுவிடுவதாகச் சொன்னதும் (1 அர 19: 2), அவர் உயிருக்குப் பயந்து கடவுளின் மலையான ஒரேபு மலைமேல் ஏறுவார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, அவருடைய உயிருக்கு ஆபத்து வர, அதனால்தான் அவர் மலைமேல் ஏறினாரா? என்றால், நிச்சயமாக இல்லை. மாறாக, மக்கள் இயேசு செய்த அருமடையாளத்தைப் பார்த்துவிட்டு ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்று அவரைப் பிடித்து அரசராக்க முயன்றார்கள் (யோவா 6: 15) அதனால்தான் அவர் மலைமேல் ஏறுகின்றார்.
மலைமேல் ஏறிய இயேசு, தந்தைக் கடவுளிடம் வேண்டுவதற்குத் தன்னுடைய நேரத்தைச் செலவிடுகின்றார். இயேசு தந்தைக் கடவுளிடம் வேண்டுகின்றபொழுது, அவர் தனக்காக மட்டும் வேண்டினாரா? அல்லது தன்னுடைய சீடர்களுக்கும் சேர்த்து வேண்டியிருப்பாரா? என்ற கேள்வி எழலாம். இயேசு தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் வேண்டியிருப்பார். இதைப் பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டலில் இடம்பெறும், “…தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென வேண்டுகிறேன்” (யோவா 17: 15) என்ற சொற்களில் மிக அழகாகக் காணலாம். இன்றும் கூட, இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (எபி 7: 25) என்பதை நாம் அறிகின்றபொழுது, இயேசு தன் சீடர்களாகிய நம்மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கடலில் நடந்து வந்த இயேசு
மலைமேல் ஏறிய இயேசு, தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டி, அவர்கள்மீது தனக்கிருந்த கரிசனையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இயேசுவின் அன்பும் கரிசனையும் அத்தோடு நின்றுவிடாமல், சீடர்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றது. அதை இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் காணலாம்.
இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த இயேசு, கடலில் பயணம் செய்துகொண்டிருந்த தன்னுடைய சீடர்கள், எதிர்க்காற்று அடித்து அலைகழிக்கப்படுவதையும், அவர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதையும் அறிந்து (மாற் 6: 48) கடல்மீது நடந்து வருகின்றார். இதற்கு முன்பு ஒருமுறை சீடர்கள் கடலில் பயணம்செய்தபொழுது, இயேசு அவர்களோடு இருந்தார் (மத் 8: 23-27). ஆகையால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டத்தைக் கண்டு சீடர்கள் பதறினாலும், அவர் பதறாமல் தூங்கிக்கொண்டிருந்தார்; ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு இல்லை. அதனால்தான் அவர் சீடர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உதவக் கடலில் நடந்து வருகின்றார்.
இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு சீடர்கள், “ஐயோ, பேய்’ என்று அச்சத்தில் அலறியபொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு சீடர்களிடம் “நான்தான்” என்று சொல்வது, கடவுளாகிய நான் உங்களோடு என்றும் இருக்கின்றேன் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது (விப 3: 14; எசா 41:4, 43:10, 52:6). ஆம், கடல் உட்பட எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் கடவுள் (யோபு 9:9; திபா 77: 19), நம்மோடு இருக்கின்றபொழுது நாம் எதற்கு அஞ்சவேண்டும்! துணிவோடு இருப்பதுதானே முறை!
தன்மீது – கடவுள்மீது – கண்களைப் பதிய வைக்கச் சொல்லும் இயேசு
கடல்மீது நடந்து வந்த இயேசுவைப் பார்த்துவிட்டு பேதுரு, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்கிறார். இயேசுவும், “வா” என்கிறார். இதைத் தொடர்ந்து பேதுரு கடல்மீது நடந்து நட, பெருங்காற்று வீசியதைக் கண்டு, அவர் கடலில் மூழ்கத் தொடங்குகின்றார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்து அவரைப் படகில் ஏற்றுகொள்கின்றார்.
கடலில்மீது நடந்த பேதுரு திடீரென்று கடலுக்குள் மூழ்கக் காரணம், அவர் இயேசுவின் வைத்த பார்வையைப் பெருங்காற்றின்மீது வைத்ததுதான். நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் ஆண்டவர்மீது கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும். ஏனெனில், நமக்கு வருகின்ற ஆபத்துகளை விடவும் ஆண்டவர் பெரியவர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம் கண்களைப் பதிய வைத்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்மூலம் எல்லா வகையான அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.
சிந்தனை
‘நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்’ (எசா 28: 16) என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக உரைப்பார். ஆதலால், நாம் ஆண்டவர்மீது நமது கண்களைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதனால் அச்சமில்லா வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.