எதிர்காலத்தை எண்ணுகையில் செபம்

“என் கடவுளே, என் அரசே!உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.”(திபா14. 5:1).

ஆண்டவரே, காலங்களைக் கடந்தவரே நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே, உம்மைப் போற்றுகிறேன்.

“அகரமும், னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும்”(திரு22:13) ஆனவரே, உமக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த நாள் வரையில் என்னை ஆசீர்வதித்து வழி நடத்தியவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். இனி வருகின்ற நாட்களிலும் என்னை, ஆசீர்வதித்து வழி நடத்த இருப்பவரே, உமக்கு நன்றி கூறுகிறேன்.

ஆண்டவரே, எனது எதிர்காலத்தை, இனிவர இருக்கிற வாழ்வின் நாட்களை உமது பாதங்களில் நம்பிக்கையுடன் அர்பணிக்கிறேன். நீரே ஆண்டு கொள்வீராக! நீரே ஆசீர்வதிப்பீராக.

“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்.”(மத் 6:34) என்று உறுதியளித்தவரே.உமக்கு நன்றி கூறுகிறேன்.

“ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம்”(பிலி4:6) என்று எங்களைத் தேற்றியவரே, உமக்கு நன்றி கூறுகிறேன்.
இறைவா, எனது எதிர்காலத்தைப் பற்றிய எனது கலலைகள், பயங்கள், ஏக்கங்கள், கனவுகள்-அனைத்தையும் உமது கரங்களில் தருகிறேன்.என்னை ஏற்றுக் கொள்ளும். என்னை நிறைவின் பாதையில் வழிநடத்தும்.
என் வாழ்நாளெல்லாம் “உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடை சூழ்ந்து”(திபா23:6) வருவதாக!“உம் கோலும், நெடுங்கழியும்” என்னை வழிநடத்துவதாக.
ஆண்டவரே தங்கள் எதிர்காலத்தை எண்ணிக் கலங்குகிற, கவலைப்படுகிற சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவருக்காகவும் உம்மை மன்றாடுகிறேன். அவர்களை வழிநடத்துவீராக.

“ஆண்டவரே, உம் பாதைகளை நாங்கள் அறியச் செய்தருளும். உம் வழிகளை எங்களுக்குக் கற்பித்தருளும்”.(திபா 25:4).
எங்களுக்கு வலுவுட்டுகின்றவரே, உமது துணை கொண்டு எதையும் செய்ய எங்களுக்கு ஆற்றல் தருபவரே(பிலி4:13), உமக்கு நன்றி, உமக்கு புகழ்.
இன்றும், நாளையும் எங்கள் வாழநாள் முழுவதும், நீரே மாட்சிமைப்படுவீராக.

Comments are closed.