ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்

என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2, 10-14

அக்காலத்தில்

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.

மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, “நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்” என்றார்.

பின்பு சீடர் அவரை அணுகி, “பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?” என்றனர். இயேசு மறுமொழியாக, “என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 15: 1-2, 10-14

பாரம்பரியமும் பரிவன்பும்

நிகழ்வு

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராபர்ட் சோபல் என்பவர் (Robert Sobel 1931-1999). இவர் சொல்லக்கூடிய ஒரு செய்தி நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இவர் சொல்லக்கூடிய செய்தி இதுதான்: “நம்முடைய முன்னோர்கள் ஒரு செயலைச் செய்தார்கள் என்பதற்காக, இன்றைக்கும் செய்யப்படும் அந்தச் செயல்களில் பல முட்டாள்தனமானவையாக இருக்கின்றன.” ராபர்ட் சோபல் சொல்லக்கூடிய இச்செய்தி உண்மைதான் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் உள்ளது கீழ்க்காணும் இந்த நிகழ்வு.

இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகர்தான் டோவர் (Dover) என்ற நகர். இத்துறைமுக நகரிலிருந்துதான் பிரான்சு போன்ற நாடுகளுக்கு கப்பல்கள் செல்லும். அங்கிருந்து வரக்கூடிய கப்பல்கள்கூட இங்கு கட்டாயம் வந்தாக வேண்டும். இப்படப்பட்ட துறைமுக நகரான டோவரில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. கோட்டைக்குள் பாதாள அறைகளும், சுரங்கப் பாதைகளும் நிறைய இருந்தது.

இந்தக் கோட்டை கட்டப்பட்டதன் முக்கியமான நோக்கம், நெப்போலியன் இங்கிலாந்து நாட்டின்மீது படையெடுத்து வரும்பொழுது, இந்தக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மணியை அடித்து, இங்கிலாந்து நாட்டினரை எச்சரிப்பதுதான். 1805 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த மணியை அடிப்பதற்காகவே, ஒரு காவலாளி நியமிக்கப்பட்டிருந்தார். வேடிக்கை என்னவென்றால், நெப்போலியன் இறந்து நூறு ஆடுகளுக்குப் பிறகும்கூட, அதாவது 1945 ஆண்டுவரை இந்தக் கோட்டையில் இருந்த மணியை அடிப்பதற்காகக் காவலாளி ஒருவர் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்தார்.

1945 ஆம் ஆண்டில் ஒருநாள் தற்செயலாக இதைப் பார்த்த உயர் அதிகாரி ஒருவர், டோவர் கோட்டையில் காவலாளியை வேலைக்கு அமர்த்துவது வீண் என்று அந்தப் பணியிடத்தை நீக்கினர்.

நெப்போலியனுடைய வருகையை இங்கிலாந்து நாட்டினருக்கு அறிவிப்பதற்காக டோபர் கோட்டையில் நிறுத்தப்பட்ட காவலாளி, நெப்போலியன் இறந்து பின்பும் அந்த இடத்தில் தொடர்ந்து நிறுத்தப்பட்டது போன்று, இன்றுநாம் கடைப்பிடிக்கின்ற பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள் எதற்காகப் பின்பற்றுகின்றோம் என்று தெரியாமலேயே பின்பற்றி வருகின்றோம். இன்றைய நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் மூதாதையர் மரபை மீறியதாக எருசலேமிலிருந்து வந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அர்த்தமற்ற சடங்குமுறைகளைப் பின்பற்றி வந்த பரிசேயக் கூட்டம்

யூத சமூகத்தில் சமயக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்கள் பரிசேயர்கள். இவர்கள் திருமறையைப் பற்றி மக்களுக்குப் போதிக்கின்றோம் என்ற பெயரில் தேவையற்ற சட்டங்களை, சில நேரங்களில் கடினமான சட்டங்கள் என்ற சுமைகளை மக்கள் மேல் சுமத்தினார்கள் (மத் 23: 4). இவர்கள் அந்தச் சட்டங்களை எல்லாம் கடைப்பிடித்தார்களா? என்றால் கிடையாது. இப்படித் தாங்கள் கடைப்பிடிக்காத சட்டங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்த பரிசேயர்கள், இயேசுவின் சீடர்கள் உண்ணும்பொழுது கை கழுவவில்லை என்று, அவர்கள் மூதாதையர் மரபை மீறிவிட்டதாக, அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.

உண்மையில் இயேசுவின் சீடர்கள் உணவு உண்பதற்கு முன்பாகக் கைகளைக் கழுவித்தான் உண்டார்கள். (யாராவது உணவு உண்ணும் முன்பாக கைகளைக் கழுவாமல் உண்பார்களா?). பரிசேயர்கள், இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டார்கள் என்று சொன்னது வேறொன்று. அதுதான் பரிசேயச் சட்டம். அதை மீறியதற்காகத்தான் பரிசேயர்கள் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசு சொல்லும் பதில் என்னவாக இருக்கின்றது என்று பார்ப்போம்.

அர்த்தமற்ற சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு அர்த்தமுள்ள வாழ்வுவாழ அழைக்கும் இயேசு

எருசலேமிலிருந்து வந்த பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள், புறத் தூய்மையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது, ஆண்டவர் இயேசு அகத்தூய்மையைப் பற்றிப் பேசுகின்றார். அதை அவர் வாய்க்குள்ளே செல்வது மனிதரைத் தீட்டுப் படுத்தாது; வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும் என்கின்றார். இதன்மூலம் புறத்திலிருந்து மனிதனுக்குள்ளே செல்லும் உணவு மனிதனைத் தீட்டுப்படுத்தாது; ஏனெனில் கடவுள் படைத்த எல்லாமும் நல்லவை (தொநூ 1: 31). மாறாக, அகத்திலிருந்து வெளியே வரும் சொற்கள்தான் மனிதனைத் தீட்டுப்படும் என்கின்றார் இயேசு. நாம் புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அகத்தைத் தூய்மைப்படுத்தக் கொடுக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

‘உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்’ என்பார்கள். நம்முடைய உள்ளம் தூய்மையாக இருந்தால், எல்லாமும் தூய்மையாக இருக்கும்.

சிந்தனை

‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற அர்த்தமற்ற சடங்குமுறைகளையும் சட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.