ஜூலை 29 : நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27
அக்காலத்தில்
சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூலை 29)
இன்று திருச்சபையானது தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் இவரது வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மார்த்தா பெத்தானியாவை சேர்ந்தவர். மரியா, மற்றும் லாசர் இவருடைய சகோதர, சகோதரி ஆவர். இவர்கள் மூவரும் ஆண்டவர் இயேசுவால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவர்கள் (யோவான் 11:5). மேலும் மார்த்தா எப்போதுமே விருந்தோம்பலுக்கும், உபசரிப்புக்கும் பெயர் போனவராக இருக்கின்றார். ஆண்டவர் இயேசு மார்த்தா, மரியாவின் வீட்டிற்கு சென்றபோதெல்லாம் மார்த்தாதான் இயேசுவை உபசரிக்கிறார் (லூக் 10:40, யோவான் 12:2).
தொடக்க நூல் 18 ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி. விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் மம்ரே என்ற இடத்தில் நின்றுகொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்கள் மூவர் அங்கே நிற்பதைக் காண்கிறார். உடனே ஆபிரகாம் அவர்கள் மூவரையும் தன்னுடைய கூடாரத்திற்குள் அழைத்து, அவர்களுக்கு விருந்து படைக்கிறார். ஆபிரகாம் அளித்த விருந்தினை உண்டு, மகிழ்ச்சி அடைந்த அம்மூவரும் ஆபிரகாம், சாரா தம்பதியினருக்கு குழந்தை வரம் தருகிறார்கள் (தொநூ 18:14).
இங்கே ஆபிரகாம் கடவுளின் வரத்தைப் பெற அவர் அளித்த விருந்துதான் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகது. மார்த்தாவும் தன்னுடைய இல்லத்தைத் தேடிவந்த ஆண்டவர் இயேசுவுக்கு சிறப்பான விதத்தில் விருந்தளித்து, விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
ஒருகாலத்தில் விருந்தினர்களை கடவுளாகப் பார்க்கும் வழக்கம் போய் இன்றைக்கு விருந்தினர்களைக் கண்டால் தெறித்து ஓடும் நிலையே இருக்கிறது. விருந்தோம்பல் பண்பு நம்மிடமிருந்து அடியோடு மறைந்து போய்விட்டது. இந்த வேளையில் மார்த்தா நமக்கு விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
கலைவாணர் என்.எஸ்.கே விருந்தோம்பலுக்கு சிறந்த முன்மாதிரியாய் இருப்பார் என்று சொல்வார்கள். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார் பசியோடு வந்தாலும், அவர்களை உள்வீட்டிற்குள் அழைத்து, அவர்களுக்கு விருந்துகொடுப்பார். அத்தகைய தயாள குணம் நிறைந்தவராக இருப்பார்.
ஒருநாள் இரவு அவர் ஒரு நிகழ்ச்சியை முடிந்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு காரிலே பயணம் செய்துகொண்டிருந்தபோது முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய தோள்மீது மண்வெட்டியைப் போட்டுக்கொண்டு, சாலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த உடனே தன்னுடைய காரை நிறுத்திய அவர் அவர்களிடம், “எதற்காக இந்த இரவில் இப்படி நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்களோ “எங்களை வேலைக்கு அழைத்த முதலாளி வேலை இல்லையென்று திருப்பி அனுப்பிவிட்டார். அதனால்தான் கையில் பணமில்லாமல், உணவுல்லாமல் இப்படி நீண்டதூரம் நடந்து வருகிறோம்” என்றார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலைவாணர் தன்னுடைய வாகன ஒட்டியையும், உடன்வந்த இன்னொரு நபரையும் அழைத்து, பக்கத்தில் ஏதாவது கடைகள் இருந்தால், உணவு வாங்கிக்கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் சிறுது நேரத்தில் உணவு வாங்கிக்கொண்டு வந்தார்கள். கலைவாணர் அந்த உணவுப் பொட்டலங்களை விவசாயிகளிடம் கொடுத்து, உண்ணக் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் இருந்த பணத்தையும் அவர்களுக்கு சரியாகப் பகிர்ந்து கொடுத்து, அவர்களைப் பத்திரமாக வீட்டிற்குப் போகுமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு பசியாய் இருந்த விவசாயிகளுக்கு உணவளித்து, கலைவாணர் விருந்தோம்பலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாமும் விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.
அடுத்ததாக மார்த்தாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அவளிடம் விளங்கிய நம்பிக்கைதான். இறந்த இலாசரைப் பார்க்க வந்த இயேசுவிடம் மார்த்தா, “ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார். அதற்கு இயேசு, “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்கிறார்… உடனே மார்த்தா, “நீரே மெசியா!, நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளியிடுகிறார்.
இவ்வார்த்தைகளை நாம் கூர்ந்து நோக்கும்போது அவர் எந்தளவுக்கு கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று நமக்கு புரியும். ஆகவே, மார்த்தா எப்படி இயேசுவிடம் நம்பிக்கையோடு கேட்டு, கேட்டதைப் பெற்றுக்கொண்டாரோ அது போன்று நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு கேட்டால், எல்லா வரமும் கைகூடும் என்பது உண்மை.
நிறைவாக மார்த்தா நற்செய்தி அறிவிப்புக்கும் சிறந்த முன்மாதிரியாய் விளங்கினார். இவரைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு தொன்மம் (legend). இயேசு லாசரை உயிர்ப்பித்த செய்தியைக் கேள்விப்பட்ட யூதர்கள் இலாசரையும், அவருடைய சகோதரிகள் இருவரையும் அழித்தொழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். எனவே அவர்கள் மூவரையும் ஒரு சிறு படகில் ஏற்றி, அதில் துடுப்பு எதுவும் இல்லாமல் அனுப்பி வைத்தனர். அந்த படகானது கிழக்கு பிரான்சை அடைந்தது. அங்கே லாசர் மற்றும் மார்த்தா, மரியா நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
இவ்வாறு மார்த்தா நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் சிறந்து விளங்கினார். ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று விருந்தோம்பலில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையில், நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.