நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 29)
பொதுக்காலம் பதினேழாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 13: 44-46
அனைத்திற்கும் மேலாக அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம்
நிகழ்வு
ஜமைக்காவில் உள்ள மொண்டேகோ பேவில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரபல கண் மருத்துவரான கார்த் ஆல்பிரெட் டெய்லர் (Dr. Garth Alfred Taylor) கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டவரான இவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு கண் மருத்துவராகத்தான் தொடங்கினார்.
திடீரென்று ஒருநாள் இவருக்கு, ‘நான் எல்லாரையும் போல் வாழ்ந்துவிட்டுப் போய்விடக்கூடாது… கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் திறமையைக் கொண்டு இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட்டுப் போகவேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்குப் பின்பு வந்த நாள்களில் இவர் யாருக்கெல்லாம் கண்பார்வை தரமுடியுமா, அவர்களுக்கெல்லாம் தீவிரச் சிகிச்சை அளித்து, கண்பார்வை அளித்தார். இவர் தன்னுடைய சேவையை ஜமைக்கா நாட்டோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை; உலகம் முழுவதும் கிடைக்கச் செய்தார். அதற்காக இவர் பல நாடுகளையும் சுற்றிவந்தார்.
பெரும்பாலான நேரங்களில் இவர் தன்னிடம் கண் சிகிச்சை பெற வந்தவர்களிடம் பணம் வசூலிகாமல், இலவசமாகவே சிகிச்சை அளித்து வந்தார். “ஒருவர் கண்பார்வை பெறுவதன் மூலம், தன்னம்பிக்கையும் தன்மானத்தையும் பெறுகின்றார்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியை – இறைப்பணியைச் – செய்துவந்தார். அதனால்தான் இவர் இறக்கும்பொழுது, இவருடைய இறுதிப் பயணத் திருப்பலி நடந்த பெரிய கோயில் நிரம்பி வழிந்து, தெருக்களிலும் சாலைகளிலும் மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஆம். மருத்துவர் காரத் ஆல்பிரெட் டெய்லர், கண்பார்வையற்றவர்கள் பார்வை பெறுவதற்காகத் தன்னுடைய உடல் பொருள், ஆவி என அத்தனையையும் இழந்தார். அதனால்தான் கடவுள் அவருக்கு மக்கள் மனத்திலும் விண்ணகத்திலும் நிலையானதோர் இடம் கொடுத்தார். இன்றைய நற்செய்தி வாசகம், விண்ணரசிற்காக நாம் எதையும் இழக்கத் துணியவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணரசைக் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடும் இயேசு
ஆண்டவர் இயேசு, மத்தேயு நற்செய்தி பதின்மூன்றாம் அதிகாரம் முழுவதும் விண்ணரசைப் பலவற்றோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார் இன்றைய நற்செய்தியில் அவர் விண்ணரசை நிலத்தில் மறைந்திருந்த புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகின்றார்.
ஆண்டவர் இயேசு ஏன் விண்ணரசை நிலத்தில் மறைந்திருந்த புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகின்றார் என்று தெரிந்துகொள்வது நல்லது. புதையல் அரிதாகக் கூடியது; விலைக்க மதிக்க முடியாதது. ஆதலால், அதைக் கண்டுபிடிக்கும் எவரும் அதைத் தனக்குச் சொந்தமாக்கத்தான் முயற்சி செய்வார். நற்செய்தியில் இயேசு சொல்லும் புதையல் உவமையில் வருகின்ற மனிதரும், நிலத்தில் மறைந்திருந்த புதையலைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள, தன்னிடம் உள்ள யாவற்றையும் விற்கின்றார். அதன்மூலம் புதையல் இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கின்றார்.
முத்து உவமையில் வருகின்ற வணிகரும், விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக் கொள்கின்றார். ஆகையால், புதையலையும் முத்தையும் அடைவதற்கு உவமையில் வருகின்றவர்கள் எப்படித் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தார்களோ, அதுபோன்று நாம் விண்ணரசு என்ற விலைமதிக்க முடியாத புதையலை, முத்தை அடைய, நம்மிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கத் துணிய வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக விண்ணரசை நாடுவோம்
இயேசு விண்ணரசைப் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், நாம் ஒவ்வொருவரும் விண்ணரசுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்பதுதான் (மத் 6: 33). முத்து உவமையில் வருகின்ற வணிகர் முத்தைத் தேடி அலைந்தார் என்று வாசிக்கின்றோம். அது போன்று நாம் விண்ணரசைத் தேடவேண்டும்; அதற்காக எதையும் இழக்கத் துணியவேண்டும். அப்படி நாம் தேடுகின்றபொழுது, அதை நிச்சயம் கண்டுகொள்வோம்; கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
ஆகையால், நாம் அனைத்திற்கும் மேலாக விண்ணரசைத் தேடுவோம். அதன்மூலம் அதில் பங்கு பெறும் உரிமையைப் பெறுவோம்.
சிந்தனை
‘என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்’ (மாற் 8: 35) என்பார் இயேசு. ஆகையால், விண்ணரசு என்ற புதையலை, முத்தை அடைவதற்கு நம்மிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.