கோவிட்-19 காலத்து திருத்தந்தையின் மறையுரைகள் நூல் வடிவில்
இத்தாலியில் கோவிட்-19 கொள்ளைநோய் பரவலால் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரைகளை, ஒரு நூலாக வெளியிட்டுள்ளது, வத்திக்கான்.
கடந்த மார்ச் 9ம் தேதியிலிருந்து, மே மாதம் 18ம் தேதி வரை, உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவேற்றிய திருப்பலிகளில், ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக்காகச் செபிக்க விண்ணப்பித்தார் மற்றும், மறையுரைகளும் ஆற்றினார்.
“நெருக்கடி காலத்தில் உறுதியாயிருத்தல்” என்ற தலைப்பில், வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரைகள், இறைவேண்டல்கள், மற்றும், ஏனைய செய்திகள், தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்நூல் இணைய பக்கத்தில், பல்வேறு மொழிகளில், PDF அமைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் எளிதில் வாசிக்கலாம். ஆனால் நகல் எடுப்பதற்கு, வத்திக்கான் வெளியீட்டு நிறுவனத்திடம், முறைப்படி விண்ணப்பம் செய்திருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நூல் குறித்து வத்திக்கான் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குனர் அருள்பணி Giulio Cesareo அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையிடம் கூறுகையில், இத்தாலியில் கொள்ளைநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவந்த காலக்கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தந்தையாக, ஓர் ஆன்மீக வழிகாட்டியாக நம்மோடு தொடர்ந்து பயணித்தார் என்று கூறினார்.
திருத்தந்தையின் மறையுரைகள் விலைமதிப்பற்றவை என்றும், வாழ்வுபற்றி அவர் கூறிய அழகிய வார்த்தைகளால் நாம் தொடர்ந்து ஊட்டம்பெற நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார், அருள்பணி Giulio Cesareo.
இத்தாலியில் கொரோனா கொள்ளைநோய் பரவல் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பத்து வாரங்களில், திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலிகள் யூடியூப் வழியாகவும், நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டன. ஒவ்வொரு நாளும் திருப்பலிக்குப்பின், ஏறத்தாழ பத்து நிமிடங்கள் திருநற்கருணை ஆராதனையும் நடைபெற்றது
Comments are closed.