ஜூலை 24 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.
பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 13: 18-23
யார் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்?
நிகழ்வு
கிராமப்புறப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணியாளர் ஒருவர், ஒருநாள் இரவு, கிளைப்பங்கில் திருப்பலி நிறைவேற்றிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அது காட்டுப் பகுதி என்பதால், திடீரென்று அவரை வழிமறித்த திருடன் ஒருவன், தன்னுடைய கையில் இருந்த பெரிய கத்தியை எடுத்துக்காட்டி அவரிடம், “உங்கள் கையில் இருக்கின்ற பணத்தை எல்லாம் கொடுத்துவிடும்; இல்லையென்றால் உம்மை இந்த இடத்திலேயே குத்திக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். அருள்பணியாளரும் எதற்கு வீண் வம்பு என நினைத்துக்கொண்டு, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் அவனிடம் எடுத்துக் கொடுத்தார்.
அவ்வாறு கொடுக்கும்பொழுது அவர் அந்தத் திருடனிடம், “என்னிடமுள்ள பணத்தையெல்லாம் உன்னிடம் கொடுத்துவிடுகிறேன்; ஆனால், ஒன்றை உன் மனத்தில் வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, “ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்” என்ற புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் உள்ள இறைவார்த்தையை (கலா 6:7) எடுத்துச் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். திருடன், அருள்பணியாளர் சொன்ன வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் திருடனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன.
இது நடந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் இருக்கும். கிராமப்புற பங்கில் பங்குப் பணியாளராக இருந்த அந்த அருள்பணியாளர் ஒரு திருத்தலத்தின் அதிபராக உயர்ந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது அவரை எதிர்கொண்டு வந்த ஒருவர், “சுவாமி! என்னை நினைவிருக்கின்றதா?” என்றார். “சரியாக நினைவில்லையே…! நீங்கள் யார்?” என்று அருள்பணியாளர் அவரிடம் கேட்க, அவர், பத்து ஆண்டுகளுக்கு நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசினார்:
“சுவாமி! உங்களிடமிருந்து நான் பணத்தைக் கவர்ந்த பின்பு என்னுடைய குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்தன. என்னுடைய மனைவி என்னைவிட்டுப் பிரிந்தார். என்னுடைய பிள்ளைகள்கூட ஒருவர் பின் ஒருவராக இறந்தார்கள். இதனால் நான் தனித்து விடப்பட்டேன். அப்பொழுதான் நான், நீங்கள் சொன்ன “ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்” என்ற வார்த்தைளை நினைவு கூர்ந்தேன். நான் உங்களிடமிருந்தும், உங்களைப் போன்ற பலரிடமிருந்தும் பணத்தைக் கவர்ந்தால்தான் எனக்கு இப்படியெல்லாம் நடக்கின்றன என்று நினைத்துக்கொண்டு, அன்றோடு திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, என்னுடைய வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்த நீங்கள் நம்பும் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு, திருமுழுக்குப் பெற்று, ஓர் உண்மையான கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினேன். இப்பொழுது என்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கின்றது.”
அவர் இவ்வாறு சொல்லி முடித்ததும், அருள்பணியாளர் அவரிடம், “மிகவும் நல்லது. தொடர்ந்து கடவுளின் வார்த்தைக்கேற்ப வாழுங்கள். உங்களுக்கு எல்லா நலமும் பெருகும்” என்றார்.
ஒரு காலத்தில் பெரிய திருடனாக இருந்தவர், இறைவார்த்தை தன்னுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்ததால், நல்ல பலன் கொடுக்கும் மனிதரானார். நாமும் இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்தால் அல்லது இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொண்டு நடந்தால், மிகுந்த கனிதருவோம். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் யார்?
இன்றைய நற்செய்தி வாசகம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்போனோர் யார்? கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்போனோர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை தருகின்றது. முதலில் கெட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் யார் எனப் பார்ப்போம்.
ஒருசிலர் இறைவார்த்தையைப் புரிந்துகொள்வதே கிடையாது மற்றும் சிலர் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாய்க் கேட்டுவிட்டு, பின்னர் அதை அப்படியே மறந்து விடுவர். வேறு சிலர் இறைவார்த்தையைக் கேட்டு நடப்பர், அதே நேரத்தில் உலகப் பற்றும் அவர்களை இறுக்கிப்பிடிப்பதால் அவர்கள் பலன்கொடுக்காமலேயே இருந்து, கெட்ட நிலத்தில் விழுந்த விதைகளுக்குக் ஒப்பானவர்களாய் இருப்பார்கள். ஆம், வழியோர நிலம், பாறை நிலம், முட்செடி நிலம் இவையெல்லாம் பலன் கொடுக்காமல் இருப்பதால் ஒருவகையில் கெட்ட நிலம்தான்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் யார்?
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர், இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வர் என்கின்றார் ஆண்டவர் இயேசு. ஆம், எவர் ஒருவர் இறைவார்த்தையைக் கேட்டு, அதனுடைய ஆற்றலையும் வல்லமையையும் புரிந்துகொள்கின்றாரோ, அவர் அதற்குப் பணிந்து நடப்பார். அதன்மூலம் அவர் மிகுந்த பலன் கொடுப்பார். இவ்வாறு அவர் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் ஆவார்.
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதைப் புரிந்துகொண்டு, அதன்படி வாழ்ந்து, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்போனாராக இருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேளாமலும், கேட்டாலும் அதைப் புரிந்துகொள்ளாமலும், அதன்படி வாழாமலும் இருந்து கெட்டநிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோராக இருக்கப் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்’ (யாக் 1: 22) என்பார் புனித யாக்கோபு. ஆகவே, நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.