உலகளாவிய கொள்ளைநோய் யுகத்தில்…” – வத்திக்கான் ஏடு
இவ்வாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 கொள்ளைநோய் உலகெங்கும் பரவியது என்று உறுதி செய்யப்பட்ட வேளையில், இந்நோயைக் குறித்தும், நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மார்ச் 30ம் தேதி ஓர் ஏட்டை வெளியிட்ட வாழ்வியல் பாப்பிறை கலைக்கழகம், தன் இரண்டாவது ஏட்டை, ஜூலை 22ம் தேதி வெளியிட்டுள்ளது.
பல்லாயிரம் மனிதர்கள் அடைந்துள்ள துன்பம் மற்றும் மரணத்தில், நாம், நமது சக்தியற்ற நிலையை உணர்ந்துள்ளோம் என்ற கருத்தை வலியுறுத்தும் இவ்வேடு, இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள, உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்பதை எடுத்துரைக்கிறது.
பாடங்களும், புதிய கண்ணோட்டமும்
இரண்டு பகுதிகளைக் கொண்ட இவ்வேட்டில், ‘கொள்ளைநோய் என்ற கடினமான எதார்த்தம் சொல்லித்தந்த பாடங்கள்’ என்பது, முதல் பகுதியாகவும், ‘புதிய கண்ணோட்டம் நோக்கி: வாழ்வின் மறுபிறப்பும், மனமாற்றத்திற்கு அழைப்பும்’ என்பது, இரண்டாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.
மனிதர்கள் உருவாக்கியுள்ள பாகுபாடுகள் அனைத்தையும் ஊடுருவி, இந்தக் கொள்ளைநோய் அனைவரையும் தாக்கியுள்ளது என்ற எதார்த்தம், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை வலியுறுத்தியுள்ளது என்று இவ்வேட்டின் அறிமுகப் பகுதியில் கூறப்பட்டுள்ளது.
உலகமயமாக்கப்பட்ட கொள்ளை நோய்
உலகமயமாக்கல் என்ற காலக்கட்டத்தில் வாழும் நாம், உலகமயமாக்கப்பட்ட இந்தக் கொள்ளைநோயை எதிர்த்துப்போராடும் வழிகளிலும் ஒன்றிணைந்துவர அழைக்கப்பட்டுள்ளோம் என்று, இவ்வேடு அழைப்பு விடுக்கிறது.
வாழ்வு என்பது, ஒருவருக்கு வழங்கப்படுகிறது, எவ்வேளையிலும் அது எடுக்கப்படும் என்ற உண்மைகளையும், நாம் எவ்வளவு சக்தியற்றவர்கள் என்பதையும் இந்தக் கொள்ளைநோய் ஆழமாக உணர்த்தியுள்ளது என்று முதல் பகுதியில் கூறும் இவ்வேடு, நாம் ஒவ்வொருவரும் தனித்து இயங்கமுடியும் என்ற கனவை தகர்த்து, நம்மை ஒருங்கிணைந்து வருமாறு அழைக்கிறது.
செல்வம் மிகுந்த, வறுமையுற்ற நாடுகளுக்கிடையே…
பாதுகாப்பு கவசங்கள், சமுதாயத் தூரம் கடைபிடித்தல், தேவையான மருத்துவ உதவிகள் பெறுதல் என்ற பல தளங்களில், செல்வம் மிகுந்த, முன்னேற்றமடைந்த நாடுகளுக்கும், வறுமையுற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, இந்தக் கொள்ளைநோய் காலத்தில் தெளிவாகப் புலனாகிறது என்பதையும் இவ்வேடு சுட்டிக்காட்டுகிறது.
இவ்வேட்டின் இரண்டாம் பகுதியில், இந்தக் கொள்ளைநோய் கற்றுத்தந்துள்ள பாடங்களைப் பயில்வதற்கு நம்மிடம் பணிவு அவசியம் என்றும், இனிவரும் காலங்களில் நாம் மனிதகுலத்தைக் காப்பதற்குத் தேவையான தீர்வுகளை ஒன்றிணைந்து எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.