நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குதள சமூகத்தின் இடம்
நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குத்தளங்களின் பணி குறித்து, புதிய ஏடு ஒன்றை இத்திங்களன்று வெளியிட்டுள்ளது, அருள்பணியாளர்களுக்குரிய திருப்பீடப் பேராயம்.
“திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குத்தள சமூகத்தின் மேய்ப்புப்பணிக்குரிய மாற்றங்கள்”, என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஏட்டில் புதிய சட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை, மாறாக, பழைய விதிகளை சிறப்பான வகையில் செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன.
திருமுழுக்குப் பெற்ற அனைவரின் கடமைகளை வலியுறுத்தும் இந்த ஏடு, பங்குத்தளங்களிடையே நிலவ வேண்டிய ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி நிற்கிறது.
11 பிரிவுகளைக் கொண்டுள்ள இந்த ஏடு, முதல் ஆறு பிரிவுகளில், மேய்ப்புப்பணி சார்புடைய மாற்றங்கள் குறித்தும், இன்றைய நவீன உலகில் மறைப்பணி, மற்றும், பங்குத்தளங்களின் மதிப்பு ஆகியவை குறித்தும் விளக்கமளிக்கிறது.
7 முதல் 11 வரையுள்ள பிரிவுகளில், பங்குத்தளப் பிரிவுகள், பங்குத்தளத்தில் உள்ள வெவ்வேறு சமூகங்களின் பொறுப்புகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பங்குத்தள அமைப்புமுறைகளில் மறைப்பணி புதுப்பித்தலின் அவசியம் குறித்து வலியுறுத்தும் இந்த ஏடு, இறைவனை அறிவித்தல், அருளடையாள வாழ்வை வாழ்தல், பிறரன்பிற்கு சான்று பகிர்தல் போன்றவை வழியாக இடம்பெறவேண்டிய மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.
பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக நம் விசுவாசத்திற்கு சான்றுபகரவேண்டிய அவசியம் குறித்தும் விவரிக்கிறது இந்த புதிய ஏட்டின் முதல் பகுதி.
இவ்வேட்டின் இரண்டாவது பகுதியில், பங்குதளத்தின் பல்வேறு பிரிவுகளில் காணப்படவேண்டிய ஒத்துழைப்பு, அருள்பணியாளரின் இடம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பிரிவில், திருத்தொண்டர்களின் கடமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வார்த்தை வழிபாட்டிலும், அருள்பணியாளர்களின் பற்றாக்குறை இருக்கும் இடங்களிலும், பொதுநிலையினரின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அருளடையாளங்களை நிறைவேற்றுதல் குறித்து விவாதிக்கும் இவ்வேட்டின் இறுதிப் பிரிவு, எந்த அருளடையாளமும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும், அருள்பணியாளர்களின் நிதி நிர்வாகம் வெளிப்படையானதாக இருப்பதைப் பார்க்கும் பங்குத்தள மக்கள், தாங்களே முன்வந்து, தங்கள் பங்குத்தளத்தை நடத்துவதற்குரிய உதவிகளை ஆற்றவேண்டிய உணர்வைப் பெறுவர் எனவும் இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.