பாலியல் முறைகேடுகளை கையாள புதிய கையேடு
சிறுவர், சிறுமியர் மீதும், வலுவற்றவர்கள் மீதும் அருள்பணியாளர், மற்றும், திருஅவை அதிகாரிகளால் உருவாகும் பாலியல் முறைகேடுகளை கையாளும் வழிமுறைகளைத் தொகுத்து, விசுவாசக்கோட்பாட்டு பேராயம், ஒரு கையேட்டை, ஜூலை 16 இவ்வியாழனன்று வெளியிட்டது.
உலகின் அனைத்து நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்களுடன், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, வெளியிடப்பட்டுள்ள இந்த கையேடு, 9 பிரிவுகளையும், 30 பக்கங்களையும் கொண்டுள்ளது.
ஆயர் பேரவைத் தலைவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பில் அவர் வழங்கிய 21 கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது என்று விசுவாசக்கோட்பாட்டு பேராயம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சனையை கையாளும் ஒவ்வொரு மறைமாவட்ட அதிகாரிகளுக்கும் உதவியாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கையேடு, முதல் பிரதி என்றும், ஒவ்வொரு மறைமாவட்டத்திலிருந்தும் வழங்கப்படும் ஆலோசனைகள், இந்தப் பிரதியில் அவ்வப்போது இணைக்கப்பட்டு, இந்தக் கையேடு தொடர்ந்து புதிய பதிப்புக்களைக் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு, 2001ம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களாலும், 2010ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களாலும் வெளியிடப்பட்ட motu proprio ஏடுகளை கருத்தில் கொண்டு இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டோருக்கு, ஒவ்வொரு நாட்டின் சட்டங்களின்படி தகுந்த நீதி கிடைப்பது தலையாய கடமை என்பதையும், அதேவேளை, இத்தகையக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு உண்மை வெளிவருவதும் முக்கியம் என்பதையும் இந்தக் கையேடு வலியுறுத்துகிறது.
இலத்தீன் மொழியில் Vademecum என்றழைக்கப்படும் இந்த கையேட்டினை, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் இலதாரியா அவர்கள் வெளியிட்டார்.
Comments are closed.