ஜூலை 15 : நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில்
இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மத்தேயு 11: 25-27
இயேசுவைப் போன்று இறைவனைப் போற்றுவோம்
நிகழ்வு
ஒருநாள் மாலைவேளையில் ஒரு சிற்றூரில் இருந்த ஒரு தாத்தாவும் அவருடைய பேத்தியும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். முதலில் பேத்திதான் பேச்சைத் தொடங்கினாள்: “தாத்தா! இந்த மரத்தில் உள்ள இலைகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளுமா…?”. “அதற்கெல்லாம் அவைகளுக்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது…?” என்று மெல்லிய புன்னகையோடு பதில் சொன்னார் தாத்தா.
உடனே பேத்தி அவரிடம், “ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளாத அளவுக்கு, அப்படியென்ன இந்த இலைகள் செய்துகொண்டிருகின்றன…?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள். “இந்த இலைகள் எப்பொழுதும் தங்களுடைய கைகளை உயர்த்தியவாறு, இறைவனைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் இவற்றிற்கு ஒன்றோடு ஒன்று பேசுவதற்கு நேரமில்லை” என்றார் தாத்தா.
இதைக் கேட்டதும் பேத்தி மிகுந்த உற்சாகத்தோடு, “தாத்தா! இந்த மரத்தின் இலைகளைப் போன்று மனிதர்களும் தங்களைப் படைத்தவரை எப்பொழுதும் போற்றிப் புகழ்ந்துகொண்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…?” என்றாள். “ஆமாம்! நீ சொல்வதுபோல் மனிதர்கள் தங்களைப் படைத்த கடவுளைப் புகழ்ந்துகொண்டே இருந்தால், மிகவும் நன்றாக இருக்கும்” என்று ஆமோதித்தார்.
உண்மைதானே! மனிதர்கள் தங்களைப் படைத்து, பாதுகாத்து, வழிநடத்துகின்ற, இன்னும் எல்லாவிதமான நன்மைகளைச் செய்கின்ற கடவுளைப் போற்றிப் புகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நற்செய்தியில் இயேசு தந்தைக் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். அவர் எத்தகைய சூழ்நிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்…? எதற்காக அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்…? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாதபோதும் கடவுளைப் போற்றிய இயேசு
மனிதர்களில் சிலருக்குக் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது. இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள், இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அல்லது கடவுள் தங்களுக்கு ஏதாவது பெரிய அளவில் நன்மை செய்தால், அவரைப் போற்றிப் புகழ்வார்கள் அல்லது அவருக்கு நன்றி சொல்வார்கள். ஆனால், தாங்கள் வருத்தத்திலோ அல்லது ஏதாவது ஒரு துயரம்ஏற்பட்டிருக்கும் நேரத்திலோ கடவுளைப் போற்றிப் புகழமாட்டார்கள்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, மக்கள் தன்னைப் புறக்கணித்து, தன்னுடைய செய்தியை கேட்டு, மனம்மாறாத நிலையிலும்கூட கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். ஆம். கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய நகர்களில் இயேசு கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து, அங்கிருந்த மக்கள் நடுவில் பல்வேறு வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்தார். அப்படியிருந்தும் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறவில்லை. இத்தகைய சூழநிலையில் இயேசு கடவுளைச் சபித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். இயேசுவின் இத்தகைய செயல், புனித பவுல் கூறுகின்ற, “என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை (கடவுளை) என் உடலால் பெருமைப்படுத்துவேன்” (பிலி 1: 20) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துதாக இருக்கின்றது.
ஆம், நமக்கு என்ன நேர்ந்தாலும், அதற்காக வெட்கமுறாமல், இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவராகிய கடவுளை இயேசுவைப் போன்று பெருமைப்படுத்தவேண்டும்.
மறையுண்மைகளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக கடவுளைப் போற்றிய இயேசு
மக்கள் தன்னைப் புறக்கணித்த வேளையிலும் இயேசு கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என்று பார்த்தோம். இப்பொழுது அவர் எதற்காகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இயேசு தந்தைக் கடவுளை, மறையுண்மையை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துவைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகப் போற்றி புகழ்கின்றார். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறையுண்மைகள் மறைவாய் இருந்ததற்குக் காரணம், அவர்கள் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில், ‘நிறைந்துபோன குடங்களாக’ இருந்தார்கள் (எசா 29: 14) ஆனால், குழந்தைகள் அப்படியல்ல. அவர்கள் காலிக் குடங்களாக, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக, எளியவர்காக, தாழ்ச்சி நிறைந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு மறையுண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன (யாக் 4:6).
அவ்வாறெனில், நாம் தாழ்ச்சியோடும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எளிய மனநிலையோடும் இருந்தோமெனில், நமக்கும் மறையுண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்பது உறுதி. நாம் எளிய மனத்தவராக… எல்லாச் சூழ்நிலையிலும் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்’ (திபா 66: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்மைப் படைத்து, பாதுகாத்து, பரமாரித்து, மறையுண்மைகளை வெளிப்படுத்தும் இறைவனை, எல்லா வேளையிலும் போற்றி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.