நம்பிக்கையை விதைப்பது கிறிஸ்தவர்களின் கடமை
வரலாற்றில் தனியொரு இடம் பெற்றுள்ள இந்த கொள்ளைநோய் காலத்தில், தங்கள் வேலைகளையும், வருமானத்தையும் இழந்தபோதிலும், நோயால் துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதுடன், நம்பிக்கையையும், நற்செய்தியின் மகிழ்வையும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என அழைப்புவிடுத்துள்ளனர், பெல்ஜியம் நாட்டு ஆயர்கள்.
‘வழங்குவதற்கு இருக்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், தங்கள் நேரத்தையும், திறமைகளையும், முன்வைத்து, துன்புறும் மக்களிடையே பணியாற்றுவோரைப் பார்க்கும்போது, இறைவன் இங்குதான் இருந்து செயலாற்றுகிறார் என்பதைக் காணமுடிகிறது என கூறியுள்ளார்.
அருளடையாளங்களை முழுமையாக வாழமுடியாமல், திருஅவை, தன் அங்கத்தினர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டிய ஒரு நிலை இந்நோயால் உருவாகியிருப்பது, உண்மையான ஒரு சவாலாக உள்ளது எனவும் கூறும் பெல்ஜியம் ஆயர்களின் அறிக்கை, இக்காலத்தில், திருஅவைப் பணிகளில், புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஒன்றிணைப்புக்கு வழிவகுத்துள்ளது குறித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
இவ்வுலகின் துன்பங்கள் குறித்த ஓர் அக்கறை உருவாகியுள்ளதைக் காணமுடிகிறது எனவும் கூறும் ஆயர்கள், ஒருவர் ஒருவரைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ள இந்நோய், சகோதரத்துவம் நிறைந்த ஓர் உலகை படைப்பதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.
வருங்கால சமூக, பொருளாதார, அரசியல், மற்றும், சுற்றுச்சூழல் விவகாரங்களில், இன்றைய நிலைகள் கொண்டுவர உள்ள மாற்றங்கள் குறித்தும் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும் ஆயர்கள், இப்புதிய மாற்றங்களை எதிர்கொள்வதற்குரிய பலத்தை நம் விசுவாசத்திலிருந்து பெற்று, அதை, அனைவரோடும் பகிர்ந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.
Comments are closed.