நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 10)

பொதுக்காலம் பதினான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
மத்தேயு 10: 16-23
“ஓநாய்களும் ஆடுகளும்”
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பம் துருக்கியர்களிடம் சிக்கிக்கொண்டது. துருக்கியர்களிடம் சிக்கிய அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களுடைய பதினைந்து வயது மகள் என்று மூவர் இருந்தனர். இந்த மூவரில் கணவன், மனைவியைத் தனியாகவும், மகளைத் தனியாகவும் பிரித்தனர். பின்னர் கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னார்கள். அவர்களோ அதற்கு மறுப்புத் தெரிவிக்க, துருக்கியவர்கள் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே, அதாவது அவர்கள் இருவரையும் அவர்களது மகளுடைய கண்முன்னாலேயே கொன்றார்கள்.
பின்னர் அவர்கள் அந்தச் சிறுமியிடம், “உனக்கு உன் உயிர்மேல் ஆசை இருந்தால், நீ கிறிஸ்துவை மறுதலி. இல்லையென்றால் உன்னுடைய பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும்” என்று மிரட்டினார்கள். அவளோ, “நான் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தாள். இதனால் அவர்கள் அவளை மிகவும் பசியோடும் பட்டினியோடு கிடந்த நாய்களின் கூண்டுக்குள் தூக்கிப்போட்டுக் கதவை அடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் காலையில் அவர்கள் நாய்களின் கூண்டைத் திறந்தனர். அவ்வாறு திறக்கும்பொழுது, “இத்தனை நாள்களும் பசியோடு இருந்த நாய்களுக்குச் சிறுமி நல்ல இரையாக இருந்திருப்பாள்” என்று பேசிக்ககொண்டே திறந்தார்கள்; ஆனால், அங்கு அவர்களுடைய கண்களை நம்பமுடியாத வண்ணம் ஒரு செயல் நடந்திருந்தது. அது என்னவெனில், நாய்களின் கூண்டுக்குள் இருந்த மிகப்பெரிய நாய், சிறுமியின் பக்கத்தில் நின்றுகொண்டு, கூண்டில் இருந்த மற்ற நாய்கள் அந்தச் சிறுமியைத் தாக்காத வண்ணம் காவல் காத்துக்கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்டதும், அந்தத் துருக்கியர்கள், “இந்த சிறுமி வணங்கக்கூடிய இயேசு, உண்மையான கடவுள். அதனால்தான் அவர் இந்தச் சிறுமியை பசியோடும் பட்டினியோடும் கிடைந்த நாய்களிடமிருந்து காப்பாற்றியிருக்கின்றார்” என்று சொல்லி, சிறுமியை விடுதலை செய்தனர்.
ஆம், இயேசுவின் சீடர்களாகிய, அவரின் ஆடுகளாகிய நம்மைச் சுற்றி ஓநாய்கள் போன்ற மனிதர்கள் இருந்துகொண்டு, நமக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்களைக் கண்டு நாம் கலங்கிடாமல், இறுதிவரை மனவுறுதியோடு இருக்கின்றபொழுது மீட்கப்படுவோம். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பர்ப்போம்.
ஓநாய்களிடம் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படவேண்டாம்
இயேசு பன்னிருவரைப் பணித்தளத்திற்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களிடம் கூறுகின்றபொழுது, “ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதை போல நான் உங்களை அனுப்புகின்றேன்” என்கின்றார். இங்கு ஓநாய் என்று இயேசு குறிப்பிடுவது போலி இறைவாக்கினர்கள், யூத மதத் தலைவர்களாக இருந்தாலும், இயேசுவின் போதனைக்கு எதிராக உள்ள யாவரையும் ஓநாய்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். இப்படிப்பட்டவர்களிடம் நாம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் கிறிஸ்தவக் குடும்பத்தைப் போல சிக்கிக்கொள்ளலாம். அப்பொழுது நாம் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் கடவுள் ஆவியார் நம் சார்பாகப் பேச இருக்கின்றார்.
ஆகையால், ஓநாய்கள் போன்ற ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்து இருந்தாலும், கடவுள் நம் சார்பாக இருப்பதால், நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
ஓநாய்களுக்கு முன்பாக மனவுறுதியோடு இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் போலி இறைவாக்கினர்கள், ஆட்சியாளர்கள் போன்ற ஓநாய்களிடமிருந்து ஆபத்துகள் வரும் என்று சுட்டிக்காட்டுகின்ற அதேவேளையில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஆபத்துகள் வரும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இப்படி வெளியே இருந்தும், குடும்பத்தின் உள்ளே இருந்தும், ஓநாய்கள் போன்று ஆபத்துகள் வருகின்றபொழுது, நாம் மனந்தளர்ந்து போய்விடக்கூடாது; மாறாக இறுதிவரை மனவுறுதி இருக்கவேண்டும் என்பதை இயேசு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார். ஆம், யாரெல்லாம் இறுதிவரை மனவுறுதியோடு இருக்கின்றார்களோ, அவர்ககளே மீட்கப்படுவார்கள்.
ஆகையால், இயேசுவின் ஆடுகளாக இருக்கும் நாம், ஓநாய்கள் போன்ற ஆபத்துகள் வெளியே இருந்தும், உள்ளே இருந்தும் வருகின்றபொழுது, அவற்றைக் கண்டு மனம் உடைந்து போகாமல், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
‘அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்’ (1பேது 1: 7) என்பார் புனித பேதுரு. ஆகையால், இயேசுவின் சீடர்களாக அவர் வழியில் நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம், நம்முடைய நம்பிக்கையை மெய்ப்பிக்கவே என்ற உண்மையை உணர்ந்து, எதிர்வரும் ஓநாய்கள் போன்ற சவால்களைத் துணிவோடு எதிர்கொண்டு, இறுதிவரை மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.