நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 09)

பொதுக்காலம் பதினான்காம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 10: 7-15
ஆண்டவரை நம்பிப் பணிசெய்வோம்
நிகழ்வு
அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் முதன்முறையாக ஒரு பங்கிற்குப் பங்குப்பணியாளராக நியமிக்கப்பட்டார். அந்தப் பங்கோ மூவாயிரம் கிறிஸ்தவர்களைக் கொண்ட மிகப்பெரிய பங்கு.
இச்செய்தியை அறிந்த அருள்பணியாளருடைய நெருங்கிய நண்பர் ஒருவர், “சுவாமி! நீங்கள் போகிற பங்கில் மூவாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்! இந்த மூவாயிரம் பேரையும் நீங்கள் எப்படித் திரும்பிப்படுத்தப் போகிறீர்கள்?” என்றார். இதற்கு அருள்பணியாளர், அவரிடம், “நான் மூவாயிரம் பேரையும் திருப்திப்படுத்த அங்கு போகவில்லை. என்னைத் திருப்பணிக்கு அழைத்த, என் ஆண்டவர் இயேசுவை மட்டுமே திருப்திப்படுத்தப் போகின்றேன். அதனால் நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துப் பணிசெய்யச் செல்கின்றேன்” என்றார்.
ஆம், இறைவக்குப் பணி என்பது மனிதரைத் திருப்திப்படுத்துகின்ற பணியல்ல; அது ஆண்டவரைத் திரும்பிப்படுத்துகின்ற பணி. இறைவாக்குப் பணி என்பது பணத்தின்மீதோ, பொருளின்மீதோ நம்பிக்கை வைத்துச் செய்யப்படுகின்ற பணி அல்ல; அது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் செய்யப்படுகின்ற பணி என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் பணித்தளத்திற்கு அனுப்பிகின்றபொழுது, அவர்கள் எப்படிப் பணிசெய்யவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றார். அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கொடையாகப் பெற்றத்தைக் கொடையாகக் கொடுக்கவேண்டும்
நேற்றைய நற்செய்தியில் (மத் 10: 1-7) இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததைக் குறித்து வாசித்திருப்போம். இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இங்கு இயேசு பன்னிருவரிடமும் சொல்கின்ற முதன்மையான செய்தி, கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்பதாகும்.
இயேசு பன்னிருவருக்குப் பேயை ஓட்டுகின்ற அதிகாரத்தையும், நோய் நொடிகளை நலப்படுத்துகின்ற அதிகாரத்தையும், இறைவார்த்தையையும் கொடையாகவே கொடுத்தார். ஆதலால், அவருடைய சீடர்கள் அவற்றை மக்களுக்குக் கொடையாகவே கொடுக்கவேண்டும். இதில் ஆதாயம் தேடுவது அழகல்ல. இயேசு இப்படிச் சொன்னதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அது என்னவெனில், இயேசுவின் காலத்தில் இருந்த போலி இறைவாக்கினர்கள், இயேசுவின் பெயரைச் சொல்லிகொண்டு (மத் 7: 21) பேய்களை ஓட்டி, பிணிகளை நலப்படுத்தி ஆதாயம் தேடினார்கள். அதனால்தான் இயேசு இப்படிச் சொல்கின்றார்.
ஆகையால், இயேசுவிடமிருந்து பெற்றதை அவர்களுடைய சீடர்கள் (அருள்பணியாளர்கள், துறவிகள் மட்டும் கிடையாது; இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும்) கொடையாகக் கொடுக்கவேண்டும்.
பொருள்களை நம்பி அல்ல, ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும்
இயேசு தன் சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்பதாகும். இதில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, இயேசுவிடம் சீடராக இருந்து, அவருடைய பணியைச் செய்யும் ஒவ்வொருவரும் பொருளையோ, பணத்தையோ அல்ல, ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும் என்பதாகும். இரண்டு, இயேசுவின் சீடர்கள் மக்கள் நடுவில் பணிசெய்வதால், மக்களே அவர்களுக்கு வேண்டியதைச் செய்துதரவேண்டும். அதைதான் இயேசு, வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே என்கின்றார்.
இன்று ஒருசில இடங்களில் ஆண்டவர் நம்பி, மக்கள் நடுவில் பணிசெய்யும் அருள்பணியாளரின் ‘அடிப்படைத் தேவைகளைக்’ கூட, மக்கள் நிறைவேற்றித் தராமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது. இவர்கள் இறைப்பணி செய்பவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஏற்றுக்கொண்டால் ஆசி, இல்லையென்றால் தண்டனை
இயேசு பன்னிருவரிடம் சொல்லக்கூடிய மூன்றாவது முக்கியமான செய்தி, உங்களை ஏற்றுக்கொள்பவரிடம் தங்கிப் பணிசெய்யுங்கள்; இல்லையென்றால் உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வந்துவிடுங்கள் என்பதாகும்.
இயேசுவின் சீடர்கள் அவருடைய பதிலாளிகள்; ஆதலால், அவருடைய சீடர்கள் பேசக்கூடிய வார்த்தைகள், அவருடைய வார்த்தைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், இயேசுவின் சீடர்களுடைய வார்த்தைகளைக் கேட்பவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பவர்களாக இருக்கின்றார்கள்; அவரையே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றார்கள் (மத் 10: 40). ஒருவேளை இயேசுவின் சீடர்களுடைய வார்த்தைகளைக் கேட்காதவர்கள், அவருடைய வார்த்தையைக் கேளாதவர்களாகவும், அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் மாறுகின்றார்கள. இப்படிப்பட்டவர்களுக்குத் தீர்ப்பு நாளில் மிகுதியான தண்டனை கிடைக்கும் என்று கூறுகின்றார் இயேசு.
ஆகையால், இயேசுவின் பதிலாள்களாக இருக்கும், அவருடைய சீடர்கள் அறிவிக்கின்ற நற்செய்தியைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களாக வாழ நாம் முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்’ (எரே 1:17) என்று ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவிடம் கூறுவார். அன்று ஆண்டவர் எரேமியாவிடம் இப்படிச் சொன்னது போன்று, இன்று நம்மிடம் இப்படிச் சொல்கின்றார். ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.