நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 03)
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 9: 9-13
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அழைக்கும் இறைவன்
நிகழ்வு
அலைபேசி வராத காலம் அது. ‘உலக மீட்பர் பங்கில்’ பங்குப்பணியாளராகப் பணிபுரிந்து வந்த அருள்பணியாளர், பங்குப்கோயிலில் உபதேசியாராகப் பணிபுரிந்து வந்தவரிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதற்காக, இரவு பத்து மணிக்கு தொலைபேசி வழியாக அழைத்தார். அவரோ தொலைபேசியை எடுக்கவில்லை. அருள்பணியாளர் உபதேசியாரைத் தொலைபேசி வழியாக மீண்டும் மீண்டுமாக அழைத்தபொழுதும், அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை. இதனால் அருள்பணியாளர் கோபத்தில் தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் உபதேசியார் அருள்பணியாளரைப் பார்க்க அவருடைய இல்லத்திற்கு வந்தார். அருள்பணியாளருக்குக் கோபம் கோபமாய் வந்தது. “உங்களுடைய மனத்தில் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்! ஒரு முக்கியமான செய்தியைச் உங்களிடம் சொல்வதற்கு நேற்று இரவு உங்களை அழைத்தால், நீங்கள் தொலைபேசியை எடுக்கவே இல்லை. ஏன் நீங்கள் இப்படிச் செய்தீர்கள்?” என்று சத்தம் போட்டார். “சுவாமி! நீங்கள் அழைத்து, என்றைக்காவது நான் தொலைபேசியை எடுக்காமல் இருக்கின்றேனா…! நேற்று இரவு என்னுடைய தொலைபேசிக்கு எந்தவோர் அழைப்பும் வரவில்லை; என்னை நம்புங்கள்” என்று பாவமாய்ச் சொன்னார் உபதேசியார்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், அருள்பணியாளரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. உடனே அருள்பணியாளர் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தபொழுது, மறுமுனையிலிருந்து பேசியவர், “நேற்று இரவு நீங்கள்தான் என்னை அழைத்தீர்களா…?” என்றார். அதற்கு அருள்பணியாளர், “என்ன! நான் உங்களை அழைத்தேனா…? ஆமாம். நீங்கள் யார்…? எங்கிருந்து பேசுகிறீர்கள்…?” என்றார்.
மறுமுனையில் இருந்தவரோ, “என் பெயர் அமுதன். நான் இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறேன். நேற்று இரவு நான் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று, தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தேன். அப்பொழுதுதான் உங்களுடைய தொலைபேசியிலிருந்து எனக்கு மீண்டும் மீண்டுமாக அழைப்பு வந்தது. யார் என்னை இந்த நேரத்தில் அழைக்கின்றார் என்று என்னுடைய தொலைபேசியில் பெயரைப் பார்த்தேன். அதில் World Redeemer (உலக மீட்பர்) என்று இருந்தது. ‘உலக மீட்பரிடமிருந்து எனக்கு அழைப்பா…?’ என்று எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. அதனால் நான், காலையில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, இப்பொழுது உங்களை அழைக்கிறேன்” என்றார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அருள்பணியாளர், தான் உபதேசியாருக்கு அழைக்காமல், தவறுதலாக வேறு ஒருவருக்கு அழைத்தது, ஓர் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கின்றது என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவர் நடந்த அனைத்தையும் உபதேசியாரிடம் எடுத்துச் சொல்லி, ‘கோபத்தில் உங்களிடம் ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளரிடமிருந்து அமுதன் என்ற இளைஞனுக்குத் தொலைபேசி வழியாகச் சென்ற அழைப்பு, அவனுடைய உயிரைக் காப்பாற்றியது. நற்செய்தியிலோ இயேசு மத்தேயுவை அழைத்தது, அவருடைய வாழ்க்கைக்குப் புதிய அர்த்ததைத் தருகின்றது. இப்பொழுது இயேசு மத்தேயுவை அழைத்தது, மத்தேயுவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த லேவி
யூதர்கள் வரிதண்டுபவர்களை எப்பொழுதும் வெறுத்தே வந்தார்கள். அதற்குக் காரணம், இந்த வரிதண்டுபவர்கள் யூதர்களை ஆண்டுவந்த உரோமையர்களிடம் வேலை பார்த்து வந்தார்கள். யூதர்கள் பிற இனத்தவர்களைத் தீட்டானவர்கள், தூய்மையற்றவர்கள் என்று கருதினார்கள். அப்படிப்பட்டவர்களிடம் வரிதண்டுபவர்கள் வேலைபார்த்து வந்ததால், யூதர்கள் இவர்களைப் பாவிகள் என்று வெறுத்து ஒதுக்கினார்கள். யூதர்கள் வரிதண்டுபவர்களை வெறுக்க இன்னொரு காரணம், வரிதண்டுபவர்கள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகுதியாக மக்களிடமிருந்து வரி தண்டினார்கள். இதனாலும் அவர்கள் மக்களால் பாவிகள் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள்.
இப்படிப் மக்களால் பாவிகள் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டு, அர்த்தமில்லாமல் வாழ்ந்து வந்த லேவியைத்தான் இயேசு தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார்.
லேவி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அழைக்கப்படல்
இயேசு மத்தேயுவை, “என்னைப் பின்பற்றி வா” என்று அழைக்கின்றார் எனில், அவரை ஒரு பணிக்கென அழைக்கின்றார் என்பது தெளிவாகின்றது. ஏனென்றால் திருவிவிலியத்தில் கடவுளால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிக்காக அழைக்கப்பட்டனர். மத்தேயுவும் ஒரு நற்செய்தியாளராக இருக்க அழைக்கப்படுகின்றார். இயேசு மத்தேயுவை அழைத்ததும், தான் அர்த்தமுள்ள வாழ்வு வாழத் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தன் வீட்டில் விருந்து வைக்கின்றார். பரிசேயர்கள் பாவிகளைத் தொழுகைக்கூடத்திற்குள் விடுவதில்லை. அதனாலேயே மத்தேயு தன்னுடைய வீட்டில் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழத் தயாராகின்றார்.
கடவுள் மத்தேயுவை அர்த்தமுள்ள வாழக்கை வாழ அழைத்ததுபோல், நம்மையும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அழைக்கின்றார். நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு’ (மத் 9: 37) என்பார் இயேசு. ஆகையால், அறுவடை அல்லது செய்யப்பட வேண்டிய இறைப்பணி மிகுதியாக இருப்பதை உணர்ந்து, கடவுளிடமிருந்து நாம் பெற்ற அழைப்பினை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்டி, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.