நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 27)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 8: 5-17
“நீர் நம்பிய வண்ணமே உமக்கு நிகழும்”
நிகழ்வு
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்; ஆனால், அதற்குப் முன்னால் நடந்தவை எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானமானவை. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
1492 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 3 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள போலோஸ் துறைமுகத்திலிருந்து நினா, பின்டா, சாங்தா மரியா ஆகிய மூன்று சிறு கப்பல்களில், பத்தொன்பது பேரைச் சேர்த்துக்கொண்டு கொலம்பஸ் புதிய நிலப்பரப்பைத் தேடித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் சென்றுகொண்டே இருந்தன; ஆனால் புதிய நிலப்பரப்பு யாருடைய கண்ணுக்கும் தென்படவில்லை. கொலம்பசோடு இருந்தவர்களுக்கு, ‘புதிய நிலப்பரப்பு கண்ணில் தென்படுமா? இல்லை அனைவரும் கடலில் மூழ்கிச் சாகப்போகிறோமா?’ என்று அவநம்பிக்கை ஏற்பட்டது. அப்பொழுது கொலம்பஸ் அவர்களிடம், “நிச்சயம் நாம் புதிய நிலப்பரப்பைக் காணத்தான் போகிறோம்; நம்பிக்கையோடு இருங்கள்” என்று உற்சாகப் படுத்தினார்.
இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருந்தன. புதிய நிலப்பரப்பை மட்டும் அவர்கள் கண்டபாடில்லை. இருபத்து நான்காம் நாளில், கொலம்பசோடு இருந்தவர்கள் அவரிடம், “நாம் திரும்பிச் செல்வதற்கான உணவு மட்டும்தான் இருக்கின்றது. இனிமேல் ஒருநாள் நம் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்தாலும், எல்லாரும் உணவின்றிப் பட்டினியில் சாகவேண்டியதுதான்!” என்றார்கள். அதற்குக் கொலம்பஸ் அவர்களிடம், “இருபத்து நான்கு நாள்களுக்குமான உணவில், என்னுடைய உணவும்தானே இருக்கின்றது! இன்னும் ஒருநாள் நாம் நம்முடைய பயணத்தைத் தொடர்வோம். எப்படியும் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஒருவேளை புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், என்னைத் தூக்கி இந்தக் கடலில் போட்டுவிட்டு, நீங்கள் எனக்குச் சேரவேண்டிய உணவை உண்டுகொண்டே உங்களுடைய பயணத்தைத் தொடருங்கள்” என்றார்.
கொலம்பஸ் சொன்ன யோசனை அந்தப் பத்தொன்பது பேருக்கும் சரியெனப் படவே, தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறுநாள் அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் புதியதொரு நிலப்பரப்பு அவைகளுடைய கண்ணில் தென்பட்டது. அந்த நிலப்பரப்புதான் அமெரிக்கா.
கொலம்பசோடு பயணம் செய்த பத்தொன்பது பெரும் நம்பிக்கையில்லாமல் இருந்தபொழுது, கொலம்பஸ் மட்டும் ‘எப்படியும் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்து விடலாம்’ என்ற நம்பிக்கையோடு இருந்தார். அந்த நம்பிக்கையே புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது. நற்செய்தியில் நூற்றுத்தலைவர், ‘இயேசுவிடம் சென்றால், முடக்குவாதமுற்று, மிகுந்த வேதனையோடு இருக்கும் தன்னுடைய பையன் நலமடைவான்’ என்ற நம்பிக்கையோடு வந்தார். அந்த நம்பிக்கை அவருடைய பையனுக்கு நலமளிக்கின்றது. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவே கண்டுவியக்கும் அளவுக்கு இருந்த நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை
கலிலேயக் கடலின், வடமேற்குத் திசையில் இருந்த மிகப்பெரிய கடற்கரை நகரம்தான் கப்பர்நாகும். இந்நகருக்கு எல்லாத் தரப்பு மக்களும் வந்துபோனார்கள். அதனால் செல்வத்தோடு பாவமும் பெருகியது. இப்படிப்பட்ட நகரிலிருந்துதான், நூற்றுவத் தலைவர், தன் பையன் முடக்குவாதமுற்று, மிகுந்த வேதனையோடு படுக்கையில் கிடக்கின்றான் என்ற செய்தியோடு இயேசுவிடம் வருகின்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனை நலப்படுத்துவேன்” என்று சொன்னதும், நூற்றுவத் தலைவர் அவரிடம், “…ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்” என்கின்றான்.
யூதர்கள் பிற இனத்து மக்களை நாயினும் கீழாகப் பார்த்தார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நூற்றுவத் தலைவர், இயேசுவுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்ததாலும், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததாலும், அவர் இயேசுவிடம், ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்னுடைய பையன் நலமடைவான் என்கின்றார்.
நம்பினோர்க்கு நலம்
நூற்றுவர் தலைவர், நூறு படைவீர்களுக்குத் தலைவராக இருப்பவர். மட்டுமல்லாமல், அவர் இயேசுவைக் குறித்து அவ்வளவாகக் கேள்விப்படாத பிற இனத்தவர். அப்படிப்பட்டவரிடமிருந்து நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் வந்ததைத் கேட்டுதான், இயேசு அவரை வியந்து பாராட்டுகின்றார். “நீர் நம்பியே வண்ணமே உமக்கு நிகழும்” என்று சொல்லி அவருடைய பையனை நலப்படுத்துகின்றார்.
ஆம், நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. அந்த நம்பிக்கையினாலேயே அவருடைய பையனுடைய நோய் நீங்குகின்றது. இயேசுவைக் குறித்து இறைவார்த்தை வழியாகவும், அருளடையாளக் கொண்டாட்டங்களின் வழியாகவும் நாம் தெரிந்துகொள்கின்றோம். அப்படி இருந்தும் நமக்கு இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கின்றது. இந்த இடத்தில்தான் நூற்றுவத் தலைவர் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.
நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கை அவருடைய பையனுக்கு நலம் கிடைக்கக் காரணமாக இருந்தது. நம்முடைய நம்பிக்கை எத்தகையதாக இருக்கின்றது? அதனால் நமக்கு என்னென்ன நன்மை விளைந்திருக்கின்றது? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது’ என்பார் ஜான்சன் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.