திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை : தாவீதின் செபம்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, தொடர்ந்து, அவரின் நூலகத்திலிருந்து காணொளி வழியாகவே வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், செபம் குறித்த மறைக்கல்வித்தொடரில், ஜூன் 24, இப்புதனன்று, தாவீதின் செபம் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதலில், திருப்பாடல் 18லிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.
என் ஆற்றலாகிய ஆண்டவரே!
உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
ஆண்டவர் என் கற்பாறை;
என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;
நான் புகலிடம் தேடும் மலை அவரே;
என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்
வல்லமை, என் அரண். […]
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு
ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை
ஒளிமயமாக்குகின்றீர். […]
வலிமையை அரைக்கச்சையாக
அளித்த இறைவன் அவரே;
என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்
செய்தவரும் அவரே.
 (திருப்பாடல் 18)
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரரே, சகோதரிகளே, செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், தாவீதின் செபம் குறித்து இன்று சிந்திப்போம். இஸ்ராயேல் மக்களின் மன்னராகச் செயல்பட இறைவனால் அழைக்கப்பட்ட தாவீது, ஏற்கனவே ஓர் இடையராக, அனுபவத்தைப் பெற்றிருந்தார். இந்த அனுபவம், அவர் தன் மக்களை வழிநடத்தி அழைத்துசெல்ல உதவியது. இளையவராக இருந்த தாவீது, இசையிலும், கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இறைவனின் படைப்பில் காணப்படும் அதிசயங்களை புகழ்ந்து இவர் எழுதிய கவிதை வரிகளிலிருந்தே இவரது செபம் பிறந்தது. இவர் எழுதியதாகக் கூறப்படும் பல திருப்பாடல்களில் இந்த செபம் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். மேய்ப்பராகவும், மன்னராகவும் இருந்த தாவீது, நல்லாயனாகவும், அகில உலக அரசராகவும் இருக்கும் இயேசுவை முன்கூட்டியே நமக்கு காண்பிப்பவராக இருக்கிறார். இயேசு தன் வானகத்தந்தையுடன் கொண்டிருந்த செபம் வழியான உறவே அவரின் முழு வாழ்வுக்கும் ஊட்டமளித்தது. தாவீதைப் பொறுத்தவரையில், புனிதராகவும், பாவியாகவும், முரண்பாடுகள் நிறைந்தவராகவும் இருந்தபோதிலும், தலைமைப் பதவிக்குரிய தன் அழைப்பில், இறைவனுடன்கூடிய செபத்தின் வழியாக நிலையாக நின்றார். நம்முடைய வாழ்வும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்வுகளால் குறிக்கப்பட்டதாகவும் இருக்கின்றபோதிலும், தாவீதைப்போல் நாமும் செபத்தில் நிலைத்திருந்தால், எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அவற்றை நம்மால் எதிர்கொள்ளமுடியும். மற்றும், கடவுள் நமக்கு நெருக்கமாக இருப்பதை நாம் உணர்வதோடு, அந்த மகிழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும். முடியும்.
இவ்வாறு, தாவீதின் செபம் குறித்து, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் ஜூன் 23, இச்செவ்வாயன்று, மெக்சிகோவின் தென்பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். தென் அமெரிக்க பகுதியின் அன்பு சகோதர சகோதரிகளே, நான் என்றும் உங்களருகில் இருக்கிறேன் என்ற உறுதி மொழியையும் தெரிவித்தார் திருத்தந்தை. பின்னர் ஜூன் 24, இப்புதனன்று, புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு திருவிழா சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டிய திருத்தந்தை, மெசியாவின் முன்னோடியான இவ்விறைவாக்கினரின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுவதாக என்றார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.