நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 22)
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 7: 1-5
தீர்ப்பிடுதல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்
நிகழ்வு
அது ஒரு துறவுமடம். அந்தத் துறவுமடத்தில் இருந்த வயதான துறவி ஒருவர், சாகும் தருவாயில் இருந்தார். ஆனாலும்கூட அவர் தான் சாகப்போகிறோமே என்ற கவலையே இல்லாமல், பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரைப் பார்த்துவிட்டு அந்தத் துறவுமடத்தில் இருந்த தலைமைத் துறவி அவரிடம், “சாகும் தருவாயில் இருக்கையில் இப்படியா நீங்கள் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பது…? சாகப்போகிறோமே என்று கொஞ்சம்கூட உங்களுக்குக் கவலையில்லையா?” என்று சற்றுக் கோபத்தோடு கேட்டார்.
அதற்கு அந்த வயதான துறவி, “நான் இளந்துறவியாக இருந்தபொழுது, ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு, திருவிவிலியத்தின் எந்த இறைவார்த்தையில் என்னுடைய விரலை வைக்கிறேனோ, அந்த இறைவார்த்தைப் பகுதியை நான் என்னுடைய வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். அதன்படி நான் கண்களை மூடிக்கொண்டு திருவிவிலியத்தின் ஓரிடத்தில் என்னுடைய விரலை வைத்தபொழுது, அந்தப் பகுதியில், ‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்’ (மத் 7:1) என்று இருந்தது. அன்று முடிவுசெய்தேன், இன்மேல் யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்று. நான் முடிவெடுத்தது போன்றே, இதுவரைக்கும் யாரையும் தீர்ப்பிடவில்லை. அதனால் கடவுளும் எனக்கு தீர்ப்பளிக்க மாட்டார் – நல்ல தீர்ப்பு அளிப்பார் – என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவேதான் நான் எந்தவொரு கவலையும் இல்லாமல் இருக்கின்றேன்” என்றார்.
நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடாமல் இருக்கின்றபொழுது, நாமும் தீர்ப்புக்குள்ளாக மாட்டோம் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தீர்ப்பிடுதல் ஒரு பாவம்
ஆண்டவர் இயேசு, எதற்குப் பிறர் குற்றவாளிகள் எனத் தீர்பளிக்கக்கூடாது என்று சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தில் யாரையும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. ஒருவர் தன்னுடைய கண்ணால் பார்த்ததைக் கொண்டு அல்லது மற்றவர் சொன்னதைக்கொண்டு அடுத்தவரைப் பற்றித் தெரிய வருகின்றார். அவர் அடுத்தவரைப் பற்றித் தெரிந்தது கொஞ்சம்தான். அதை வைத்துக்கொண்டு அல்லது ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவர் இப்படிப்பட்டவர் என்று தீர்ப்பிடுவது பாவம் அல்லவா! அதனால்தான் இயேசு பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள் என்று கூறுகின்றார்.
இது தொடர்பாக வேய்ன் டயர் என்பவர் கூறும்பொழுது, “மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்கும்பொழுது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை, நீங்கள் யாரென்று மற்றவர்களுக்குச் சொல்கிறீர்கள்” என்பார். மிகவும் கவனிக்கவேண்டிய வார்த்தைகள் இவை.
தீர்ப்பிடுதல் ஒரு பெருங்குற்றம்
பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள் என்று இயேசு சொல்வதற்கு இரண்டாவது காரணம், நாமே குற்றவாளிகள், தவறு செய்யக்கூடியவர்கள் என்பதால்தான். நம்மிடம் மிகப்பெரிய குற்றத்தை வைத்துக்கொண்டு, அடுத்தவர் குற்றவாளி என்று தீர்ப்பிடுவது பெருங்குற்றம் அல்லவா! அதனால்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். இது தொடர்பாக கிளின்ட் ஈஸ்ட்வுட் என்ற எழுத்தாளர் குறிப்பிடும் பொழுது, “என்னைப் பற்றித் தீர்ப்பிடுவதற்கு முன்னால், நீ சரியானவனா என்பதைப் பார்த்துக் கொள்’ என்பார். ஆகையால், மற்றவரைப் பற்றித் தீர்ப்பளிக்கும்பொழுது, நாம் சரியானவர்கள்தானா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தீர்ப்பிடுதல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்
அடுத்தவரைப் பற்றித் தீர்ப்பளிக்கக்கூடாது என்று இயேசு சொல்வதற்கு மூன்றாவது காரணம், தீர்ப்பளிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கின்றது என்பதால்தான். தீர்ப்பளிக்கும் அளிக்கும் அதிகாரம் உட்பட, எல்லா அதிகாரமும் இயேசுவுக்கு இருந்தாலும் (மத் 28: 18), அவர் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைத் தீர்ப்பிடவில்லை. இதன்மூலம் கடவுள்தான் தீர்ப்பளிப்பார் என்பதை இயேசு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவார். அப்படியிருக்கையில், கடவுள் செய்யவேண்டிய வேலையை நாம் செய்தால் – பிறர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், அது மனிதத் தன்மையற்ற செயல் அல்லவா! அதனால்தான் இயேசு தீர்ப்பளிக்காதீர்கள் என்கின்றார்.
Comments are closed.