திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : மோசேயின் செபம்
மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் கோவிட்-19 தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதை முன்னிட்டு, தன் நூலக அறையிலிருந்து, காணொளி வழியாக புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 17, இப்புதனன்று, செபம் குறித்த மறைக்கல்வியுரையின் 7வது பகுதியினை காணொளி வழியாக வழங்கினார். இன்று மோசேயின் செபம் குறித்து உரையாற்றினார். முதலில் விடுதலைப்பயண நூலின் 32ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டபின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.
அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?…………. உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும்……………… என்று வேண்டிக்கொண்டார். ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார். (வி.ப. 32:11-14)
அன்பு சகோதரரே, சகோதரிகளே, செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, மோசேயின் செபம் குறித்து சிந்திப்போம். மனிதக் கண்ணோட்டத்தோடு நோக்கும்போது, விடுதலைப்பயண நூல் மோசேயை ஒரு தோல்வியுற்ற மனிதராகவே காட்டுகின்றது. இருப்பினும், வாழ்வின் ஒரு நேரத்தில், பாலைவனத்தில் இறைவனை சந்திக்கிறார் மோசே. எரியும் முட்புதரிலிருந்து மோசேக்கு அழைப்பு விடுக்கும் இறைவன், எகிப்துக்குத் திரும்பிச் சென்று, தன் மக்களை விடுதலை நோக்கி வழி நடத்துமாறு பணிக்கிறார். எல்லாம்வல்ல இறைவனது மாட்சிமையின் முன்னாலும், அவரின் வேண்டுகோளின் முன்னாலும் தன் இயலாமையை எடுத்துரைக்கும் மோசே, அத்தகைய பெரிய பணிக்கு, தான் தகுதியில்லை என்று மறுக்கிறார். இருப்பினும், இறைவன் தன் சட்டத்தை இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துச் சென்று அறிவிக்கும் பொறுப்பை மோசேயிடம் ஒப்படைக்கிறார். மோசேயும், இஸ்ராயேல் மக்களின் பரிந்துரையாளராக, குறிப்பாக, அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலும், பாவங்கள் புரிந்தபோதும், அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுபவராக மாறினார். மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவையில் இருக்கும்போது, அவர்களுக்காக இறைவனை நோக்கி மன்றாடும் மோசே, தன் இரு கரங்களையும் இறைவனை நோக்கி விரித்தவராக, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகின்றார். இவ்வாறு மோசே, நமது மிகப்பெரும் பரிந்துரையாளரும், தலைமைக் குருவுமாகிய இயேசுவின் முன்னோடியாகத் தெரிகின்றார். மோசேயைப் போன்று நாமும், இத்தகைய செபத்தில் பங்குபெற அழைப்புப் பெற்றுள்ளோம். அதாவது, இறைவனின் உதவி தேவைப்படுவருக்காகவும், உலகமனைத்தின் மீட்புக்காகவும் மன்றாட நாம் அழைப்புப் பெற்றுள்ளோம்.
இவ்வாறு, மோசேயின் செபம் குறித்து தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்படும், ‘உலக மனச்சான்றின் நாள்’ குறித்து நினைவூட்டினார். மனச்சான்றின் சுதந்திரம் எல்லா வேளைகளிலும், எல்லா இடங்களிலும் மதிக்கப்படவேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார். மேலும், ஜூன் 19, வருகிற வெள்ளியன்று, இயேசுவின் திருஇருதய விழா சிறப்பிக்கப்படவுள்ளதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயலவரை அன்புகூர்ந்து செயல்பட அவ்விதயத்திலிருந்து கற்றுக்கொள்வோம் என்று கூறி, தன் புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்
Comments are closed.