ஜுன் 18 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
மத்தேயு 6: 7-15
மன்னித்தால் மன்னிப்பு
நிகழ்வு
நேப்பிள்ஸ் மற்றும் சிசிலி நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சுஸ் என்பவர். இவர் இரக்கத்திற்கும் மன்னிப்பிற்கும் பெயர் போனவர். இவர் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், அவர்கள்மீது இரக்கம்கொண்டு மன்னித்து வந்தார். இது குறித்து ஒருசிலர் அவரிடம், “நீங்கள் ஏன் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், மன்னித்து விடுகின்றீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “நல்லவர்களை நீதியால் வெல்லலாம், தீயவர்களை மன்னிப்பால்தான் வெல்ல முடியும். அதனால்தான் மன்னிக்கின்றேன்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
இன்னொரு முறை, மன்னர் அல்போன்சுஸிற்கு நெருகிய ஒருசிலர் அவரிடம், “நீங்கள் குற்றவாளிகளை மன்னித்துக்கொண்டே இருந்தால், அவர்களை தொடர்ந்து தவறு செய்துகொண்டுதான் இருப்பார்கள்” என்று குறைபட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், ‘காட்டில் வாழ்கின்ற விலங்குகள்தான் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிடும். அது அவற்றின் குணம். மனிதர்கள் அப்படிக் கிடையாது, அவர்கள் மன்னிக்கப் பிறந்தவர்கள். மன்னிக்கின்றபொழுதுதான் அவர்கள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இல்லையென்றால் விலங்குகளாகிவிடுவார்கள்” என்றார்.
மனிதர்களுக்கு அழகே மன்னிப்புதான். அது ஒருவரிடத்தில் இல்லாமல் போகின்றபொழுது அவர் விலங்காகிவிடுகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நற்செய்தி வாசகம் மன்னிப்பின் முக்கியத்துவத்தையும் நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மன்னிக்கின்ற இறைவன்
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, மற்றவரை நாம் மன்னிக்கின்றபொழுது என்ன நடக்கின்றது என்பதையும் மற்றவர்களை நாம் மன்னியாது இருக்கின்றபொழுது, என்ன நடக்கின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது முன்பு, இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சீராக்கின் ஞான நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்.” (சீரா 2:11) அதே போன்று திருப்பாடல் 130:3-4 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்.” ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிக்கத் தொடங்கினால், நம்மால் அவர்முன் நிலைத்த் நிற்க முடியாது. அவர் மன்னிப்பு அளிப்பவராக இருப்பதால்தான் நம்மால் நிலைத்து நிற்க முடிகின்றது. அப்படியெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பது போல, நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும். அதுதான் தகுதியும் நீதியும் ஆகும்.
இறைவனின் மன்னிப்பைப் பெற நாம் பிறரை மன்னிக்க வேண்டும்
இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதைக் குறித்து மேலே சிந்தித்துப் பார்த்தோம். இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்றால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது, அதுதான் மன்னிப்பு என்று கூறுகின்றார் ஆண்டவர் இயேசு. ஆம், மற்றவர் செய்யக்கூடிய குற்றங்களை நாம் மன்னிக்கின்றபொழுதுதான், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருக்கின்றார். ஒருவேளை நாம் மற்றவருடைய குற்றங்களை மன்னியாது இருப்போமெனில், இறைவனும் நம்முடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார் என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாகக் கூறுகின்றார். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை (மத் 18).
ஆண்டவர் இயேசு மன்னிப்புக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் எனத் தெரிந்துவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் ‘மன்னிப்பு’ என்பது கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகின்றது. மன்னிப்பவர்கள் கோழைகள்… அவர்கள் பலவீனமானவர்கள் என்ற பேச்சு கூட மக்கள் நடுவில் இருக்கிறது. உண்மையில் மன்னிப்புதான் ஒருவனை பலசாலியாக்கும்; நிறைவுள்ளவனாக்கும். ஏனெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னித்து நிறைவுள்ளவராக இருக்கின்றார் (மத் 5: 48) நாமும் மற்றவர்கள் செய்யக்கூடிய குற்றத்தை மன்னிக்கின்றபொழுதுதான் நிறைவுள்ளவர்களாக முடியும். அதனாலேயே இயேசு மன்னிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
ஆகையால், நாம் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இறைவனுடைய மன்னிப்பைப் பெறுவோம்.
சிந்தனை
‘ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்’ (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.