உடன்பிறந்த உணர்வின்றி, திருப்பலியில் பங்குபெற முடியாது
நமக்கு ஊட்டம் தரும் உணவாக விளங்கும் திருநற்கருணை எனும் அருளடையாளத்தால் மாற்றியமைக்கப்பட நம்மை அனுமதிக்கவில்லையெனில், திருப்பலிக் கொண்டாட்டம் என்பது, உள் அர்த்தமற்ற வெறும் கொண்டாட்டமாக மாறிவிடும் என, இஞ்ஞாயிறு மூவேளை செபவுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தம் பெருவிழாவையொட்டி, இஞ்ஞாயிறு காலை, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் குறித்து புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலில் குறிப்பிட்டுள்ளதை (1 கொரி. 10:16-17) சுட்டிக்காட்டினார்.
திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுதல், மற்றும், அப்பத்தைப்பிட்டு உண்ணுதல் வழியாக, கிறிஸ்துவின் இரத்தத்திலும், கிறிஸ்துவின் உடலிலும் பங்குகொள்ளும் நாம், பலராயினும், ஒரே உடலாய் இருக்கிறோம் என, புனித பவுல் கூறும் வார்த்தைகளை தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம் என்று மேலும் கூறினார்.
நமக்கு ஊட்டச் சத்தாகவும், நம்மை புதுப்பிக்கும் வல்லமையாகவும் இருந்து, நாம் விழுந்தால், மீண்டும் எழுந்து நடக்க வல்லமை தருபவராகவும், திருநற்கருணையில் குடிகொண்டிருக்கும் இயேசு, நாம் முற்றிலுமாக மாற்றப்படுவதற்கு நம் இசைவை எதிர்பார்க்கிறார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரே அப்பம் உடைக்கப்பட்டு, பகிரப்படும்போது, நாமனைவரும் ஒரே உடலாக மாறுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும், உடன் பிறந்த உணர்வுக்கென தங்களையே அர்ப்பணிக்காமல், திரு நற்கருணை வழிபாட்டில் பங்குபெற முடியாது எனவும் கூறினார்.
இவ்வாறு, உடன்பிறந்த உணர்வுடன் நாம் வாழ்வதற்கு, நம் மனித வல்லமை மட்டும் போதாது என்பதாலேயே, திருநற்கருணையில் நமக்காக இயேசு குடிகொண்டிருக்கிறார், அதன் வழியாக நமக்கு உடன்பிறந்த உணர்வின் அன்பை வழங்கிக்கொண்டிருக்கிறார் என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருநற்கருணை வழியாக இரண்டு விதமான கனிகளைப் பெறுகிறோம், கிறிஸ்துவால் ஊட்டம்பெற்று அவரோடு ஒன்றிணையும் நாம், அதன்பின், கிறிஸ்தவ சமுதாயத்தையும் புதுப்பிக்கிறோம் என, தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.