திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை : யாக்கோபின் செபம்

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் இத்தாலியில் தளர்த்தப்பட்டு, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, தொடர்ந்து, அவரின் நூலகத்திலிருந்து காணொளி வழியாகவே வழங்கப்பட்டு வருகின்றது. செபம் குறித்த மறைக்கல்வித்தொடரில், ஜூன் 10, இப்புதனன்று, யாக்கோபின் செபம் குறித்து தன்  சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், தொடக்க நூல் 32ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

யாக்கோபு மட்டும் தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். […] அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார். ஆடவர், “உன் பெயர் என்ன?” என, அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். யாக்கோபு அவரை நோக்கி “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். (தொ.நூ.32,24-29)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, செபம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, யாக்கோபின் செபம் குறித்து நோக்குவோம். யாக்கோபு, எப்போதும் அறிவுக்கூர்மையுடையவராகவும், தன்னம்பிக்கையுடையவராகவும் செயல்பட்டார். அவர் ஒரு நாள், சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார். தன் மூத்த சகோதரன் ஏசாவுக்குரிய ஆசீரை, தன் தந்தை ஈசாக்கிடமிருந்து பெற்றுக்கொண்ட யாக்கோபு, தான் வீடு நோக்கித் திரும்பி, தன்  சகோதரனை நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய ஒரு சூழல் உருவாகின்றது. அவ்வாறு அவர் செல்லும் வழியில், ஓர் இரவு தனித்திருக்கும்போது, புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிய ஆடவரின் போர்வையில் இருந்த இறைவனை சந்திக்கிறார். அவருடன் இரவு முழுவதும் மல்யுத்தம் செய்கிறார். இறைவனோடு நடத்தப்பட்ட இந்த போராட்ட நிகழ்வை, செபத்திற்குரிய ஓர் உருவகமாக திருஅவையின் ஆன்மீகப் பாரம்பரியம் எடுத்துரைக்கிறது. செபம் என்பது, எப்போதும் எளிதானதல்ல. இறைவனோடு ஒரு போராட்டத்தையும், அவர் முன்னால் நம் பலவீனத்தையும், அவரின் விருப்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கியது. குறிப்பாக, இத்தகைய போராட்டத்திலும், நம் காயங்களிலும், இறைவனின் குணப்படுத்தும் வல்லமையை அனுபவித்து, விசுவாசத்தில் வளர்கிறோம். இறைவனை நாம் சந்திக்கும்போது இடம்பெறும் மனமாற்றங்கள், மற்றும், நம்மீது அவர் பொழிய விரும்பும் பல ஆசீர்கள் எனும் கொடைக்காக, எப்போதும் திறந்த மனதுடையவர்களாக செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 12, வருகிற வெள்ளியன்று, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது குறித்து நினைவூட்டினார். சிறாரின் துன்பநிலைகளுக்கு காரணமாக இருக்கும் அனைத்தும் களையப்பட அழைப்பு விடுத்த திருத்தந்தை, குழந்தைகளே மனித குடும்பத்தின் வருங்காலம் என்பதை நினைவில் கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதும், அவர்களின் நல வாழ்விற்கும், அமைதிநிறை வாழ்வுக்கும் உறுதி வழங்குவதும் நம் அனைவரின் கடமை எனவும் எடுத்துரைத்தார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.