நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 02)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 12: 13-17
இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்க முயற்சி
நிகழ்வு
ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கம் விடுத்திருந்த சிறப்பு அழைப்பின் பேரில், அங்குச் சென்று பேசினார். அவர் அங்குத் தன்னுடைய உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு வேடிக்கைக் கதைதான் இது.
தர்மபுரியில் துறவுமடம் ஒன்று இருந்தது. அந்த மடத்தின் தலைவருக்கு தமிழகத்திலுள்ள எல்லாத் தமிழறிஞர்களையும் ஒன்றாக அழைத்து, தான் இருக்கும் மடத்தில் ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று ஆசை. இதனால் இவர் தமிழகத்திலிருந்த மொத்தம் 97 தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவருடைய அழைப்பை ஏற்று எல்லாரும் கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.
கூட்டம் நடைபெறவிருந்த நாளும் வந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதாகச் சொல்லியிருந்த 97 தமிழறிஞர்களில் 96 தமிழறிஞர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வந்திருந்தனர். ஒரே ஒரு தமிழறிஞர் மட்டும் வரவில்லை. அவர் ‘கடைமடை’ என்ற ஊரைச் சார்ந்தவர். எல்லாரும் அவருக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து கடைமடையைச் சார்ந்த அந்தத் தமிழறிஞர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் மடத்தின் தலைவர், “வாருங்கள்! கடைமடையரே!” என்று அழைத்தார். இவருடைய பேச்சில் ஏதோ நக்கல் இருப்பதை அறிந்த கடைமடையைச் சார்ந்த தமிழறிஞர் அவரிடம், “நன்றி மடத்தலைவரே!” என்றார் இதைக் கேட்டுவிட்டுச் சுற்றியிருந்த தமிழ்றிஞர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள்.
கண்ணதாசனும் இந்த வேடிக்கையான சம்பவத்தை அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தில் சொன்னபொழுது, அங்கிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.
கண்ணதாசன் சொன்னக் கதையில் வரும் கடைமடையைச் சார்ந்த தமிழறிஞரை, மடத்தின்தலைவர் கேலி செய்ய நினைத்தபொழுது, கடைசியில் அவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். நற்செய்தியில் இயேசுவை, அவருடைய பேச்சில் சிக் வைக்க பரிசேயர்கள் அனுப்பிவைத்த ஏரோதியர்கள், அவரிடம் கேள்வியைக் கேட்கின்றபொழுது, முடிவில் அவர்கள் வாயடைத்து நிற்கின்றார்கள். இந்த நற்செய்திப் பகுதி நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்ட பரிசேயர்களும் ஏரோதியர்களும்
கி.மு.63 ஆம் ஆண்டிலிருந்தே யூதர்கள், உரோமையர்களின் ஆளுகைக்குள் வந்தார்கள். உரோமையர்கள் தங்களை ஆட்சி செய்வதைப் பரிசேயர்கள் கொஞ்சம்கூட விரும்பவில்லை. காரணம், பரிசேயர்கள் கடவுள்தான் தங்களுக்குத் தலைவர், அரசர் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அதனால் இவர்கள் உரோமையர்களுக்கு வரிசெலுத்துவதை (மறைமுகமாக) எதிர்த்தார்கள். இதற்கு முற்றிலும் மாறாக இருந்தவர்கள், ஏரோதியர்கள். இவர்கள் ‘எலும்புத் துண்டுபோல்’ தங்களுக்குக் கிடைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டு, உரோமையர்களை ஆதரித்து வந்தார்கள். அதனால் அவர்கள் மக்களிடமிருந்து வரி வசூலிப்பதையும் ஆதரித்து வந்தார்கள்.
இப்படி இருவேறு கொள்கைகளையும் கொண்டவர்கள் ஒரு புள்ளியில் இணைந்துவந்தார்கள். ஆம், அவர்கள் இணைந்து வந்தததற்கு ஒரே காரணம், இயேசு என்ற பொதுஎதிரிதான். ஆம். இயேசுவை வீழ்த்துவதற்குத்தான் பரிசேயர்கள், ஒரு சிக்கலான கேள்வியோடு ஏரோதியர்களை அவரிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.
நாம் அனைவரும் ஆண்டவருக்கு உரியவர்கள்
‘சீசருக்கு வரிசெலுத்து முறையா, இல்லையா?’ என்ற கேள்வியோடு வந்த ஏரோதியர்களிடம் இயேசு உடனே பதில் சொல்லவில்லை. காரணம் சீசருக்குக் வரி செலுத்துவது முறைதான் என்று சொன்னால், பரிசேயர்கள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றும், சீசருக்கு வரி செலுத்துவது முறையில்லை என்று சொன்னால், அவனை ஆதரித்து வந்த ஏரோதியர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றும் இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் இயேசு அவர்களிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் யாருடைய உருவமும் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன என்று கேட்க, அவர்கள், ‘சீசருடையவை’ என்று சொன்னதும், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்கின்றார்.
இயேசு ஏரோதியர்களுக்குக் கூறும் பதிலில் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, சீசருக்கு உரிவற்றைச் சீசருக்குக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்; ஒருவேளை நாம் அவர்களுக்கு – அரசுக்குக்- கொடுக்காத பட்சத்தில், அதுவே பெரிய பிரச்சனையாக வரும் (உரோ 13: 1-7; 1திமொ 2: 1-6; 1 பேது 2: 13-17). அடுத்ததாக, கடவுளுக்கு உரியவற்றைக் கட்டாயம் கடவுளுக்குக் கொடுத்தாக வேண்டும். நாம் அனைவருமே கடவுளுக்கு உரியவர்கள். இதில் சீசரும் சரி, அதிகாரத்தில் இருக்கின்ற யாராக இருந்தாலும் சரி, அனைவருமே கடவுளுக்கு உரியவர்கள். ஆதலால், அனைவரும் கடவுளை முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்யவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயலாக இருக்கின்றது.
நாம், கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய், அவரை முழுமையாக அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; அவரது அன்புக்குரிய இறைமக்கள்’ (கொலோ 3: 12) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரிய மக்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவருக்கு உரிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.